முகப்பு
சிறுவர்மணி

அதுவும் ஒரு பள்ளி!

ஆட்டோக்காரர் ஆனந்தனுக்கு ஏழு வயதில் ஒரு மகன். பெயர் அருள்செல்வன். அவனுக்கு ஓர் ஆசை! ஒரு விடுமுறை நாளில் அப்பாவின் ஆட்டோவில் ஜோராக ஒரு "சுற்றுலா' போகவேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

ஆட்டோக்காரர் ஆனந்தனுக்கு ஏழு வயதில் ஒரு மகன். பெயர் அருள்செல்வன். அவனுக்கு ஓர் ஆசை! ஒரு விடுமுறை நாளில் அப்பாவின் ஆட்டோவில் ஜோராக ஒரு "சுற்றுலா' போகவேண்டும்.

ஆனந்தன் தன் தொழிலை காலை ஐந்து மணிக்குத் தொடங்கினால் திரும்பவீட்டுக்கு வர நள்ளிரவு ஆகிவிடுகிறது. நேரமிருந்தால், வீட்டுப்பக்கம் சவாரி இருந்தால் பகல் உணவுக்கு வீட்டுக்கு வருவார். மற்றபடி சூழ்நிலைக்கேற்ப உணவை அங்கங்கே பார்த்துக்கொள்வார்.

நாலு காசு சேர்த்தால் தன் மகன் அருள்செல்வனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துப் பெரிய மனிதனாக ஆக்கலாம். இது அவருடைய திட்டம்! அதனால் ஓய்வு இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு, அருள்செல்வனுக்கு மூத்த ஒரு பெண்ணும் இருந்தாள்.

இருவரையும் நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்ற இலட்சியத்துடன் வலம் வந்தார்.

இந்தத் தெளிவான சிந்தனை அவரிடம் வலுவாக வேர் விட்டிருந்தது.

அருள்செல்வனின் சுற்றுலா ஆசை நிறைவேறாமல் அப்படியே இருந்தது!

ஒரு நாள் காலை...

ஆனந்தன் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பினார். அன்று மே தினத்தை முன்னிட்டு பள்ளி விடுமுறை. எனவே தூங்கிக் கொண்டிருந்தான்.

""அசந்து தூங்கறாங்க..., தூங்கட்டும்...,சின்னப்பிள்ளை'' என்றாள் ஆனந்தனின் மனைவி பார்வதி.

""பார்வதி, இன்னிக்கு எனக்கு விடுமுறை. அருள் நம்ம ஆட்டோவில் ஏறி எஙகேயாவது போகணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கான். இன்னிக்கு அவனை அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்.''

""எங்கே போகப்போறீங்க?''

""அதை இப்ப சொல்லமாட்டேன்.., அது ரகசியம்!''

அவள் அதற்கு மேல் பேசவில்லை. மகனை எழுப்பி, குளிக்க வைத்து, உணவு கொடுத்து ஆட்டோவில் ஏற்றிவிட்டாள்.

அருள்செல்வனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

ஆட்டோவில் வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்டு மலர்ச்சரங்களும் அலங்காரமாகத் தொங்கின! அருள்செல்வனைப்போலவே ஆட்டோவும் பளிச்சென்றிருந்தது!

ஆட்டோ "விருட்'டென்று ஒலி எழுப்பிக்கொண்டு பறந்தது!

""அப்பா...,அப்பா..., நாம எங்கே போறோம்?''

""இவ்வளவு பெரிய ஊரில் எவ்வளவோ இடங்கள் இருக்கு..., பொறுமையா இரு..., நான் நேராக அந்த இடத்துக்கு அழைத்துப் போறேன். பிறகு நீயே ஆனந்தத்தில் குதிக்கப் போறே''

அவனுக்கு மகிழ்வோடு பரபரப்பும் சேர்ந்து கொண்டது.

சாலையின் இருமருங்கிலும் பார்த்துக்கொண்டே போனாள்.

நான்கைந்து காகங்கள். ஒன்றிரண்டு சிட்டுக் குருவிகளும் பறந்து சென்றன. நிழல் தரும் மரங்கள். நம் வீட்டின் முன்னாலும் ஒரு மரம் நடவேண்டும் என்று நினைத்தான். வழியில் இளநீர்க் குவியலையும் நுங்குக் குலைகளையும் பார்த்தான். "வரும்போது இளநீர் குடிக்கவேண்டும்..., நுங்கு வாங்கவேண்டும்.., அக்கா அமுதாவுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்க வேண்டும்.' என்று அவன் சிந்தனை ஓடியது.

ஆட்டோ ஒரு குலுக்கலோடு நின்றது!

""அப்பா, ஏன் இங்கே கொண்டுவந்து நிறுத்தறீங்க? இங்கே என்னப்பா இருக்கு?''

அது ஒரு பெரிய கட்டிடம். முன்னால் பெரிய மைதானம். பெரிய இரும்புகேட்டில் பெரிய பூட்டு! முகப்பில் பெரியதாக ஒரு பெயர்ப்பலகை! படித்தான்! புரிந்து விட்டது!

""இங்கே ஏம்பா கூட்டிவந்தீங்க?''

""எவ்வளவு பெரிய கட்டிடம்...? எத்தனை வகுப்புகள்? இங்கேதான் உன்னை அடுத்த ஆண்டு சேர்க்காலாம்னு இருக்கேன்...., எப்படியும் சிபாரிசு பண்ணி சேர்த்து விடறேன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார்...,எவ்வளவு செலவானாலும் உன்னை இங்கே சேர்க்கப்போறேன்.''

அருள்செல்வனுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

""வேண்டாம்பா..., நான் இப்ப படிக்கிற அரசாங்கப் பள்ளிக்கூடத்திலேயே படிக்கிறேன். அங்கே நல்லாத்தான் சொல்லித்தர்றாங்க..., அன்பாகவும் பழகறாங்க...,இங்கே சேர்ந்தா மதிப்பெண்... மதிப்பெண்... தேர்வு... தேர்வுங்கற சத்தம்தான் கேட்குமாம். இங்கேதான் என் நண்பன் ரமேஷ் படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்தப்பக்கூட அதைப்பத்திக் கவலைப்படாம "ஏன் மதிப்பெண் குறைஞ்சு போச்சு'ன்னு திட்டினாங்களாம். எனக்கு இந்த மாதிரி இடம் வேண்டாம்பா..., அந்தப் பணத்தை பேங்கிலே சேமிச்சு வைங்கப்பா''

தந்தைக்கு உபதேசம் செய்த முருகனாய் அருள்செல்வன் தெரிந்தான். "ஏழைக் கோயிலிலும் தெய்வம் குடியிருக்கும்..., அரசுப் பள்ளியிலும் படிப்பு வரும்' என்று ஆனந்தன் நினைத்தான்.

கண்களைத் துடைத்துக்கொண்ட அருள்செல்வன் தூரத்தில் பார்த்தான். அவனுடைய முகத்தில் மலர்ச்சி! ""அப்பா! என்னை அங்கே கூட்டிக்கிட்டுப் போங்கப்பா! அதுவும் ஒரு பள்ளிக்கூடம்தான்! நான் பார்க்க ஆசைப்பட்டது அதுபோல ஒரு இடம்தான்!''

ஆனந்தன் அவன் காட்டிய இடத்தைப் பார்த்தார். ஆட்டோ அங்கு சென்றது. இருவரும் கீழே இறங்கினர். அது ஒரு ஏரி! நிறைய நீர். கரையில் மரங்கள்! ஏராளமான பறவைகள்! அவைகளின் இனிய ஒலி! குளிர்ந்த காற்று வந்து அவர்களைத் தழுவியது. பறவைகள் அந்த ஏரியில் இரையைத் தேடுவதுபோல, பிள்ளைகளும் கண்ணீர் இல்லாமல் கல்வியைத் தேடவேண்டும் என்பதை ஆனந்தன் உணர்ந்து கொண்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.