முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்

(இருப்புப் பாதை அருகில் ஜெஸிகாவும் அவள் தாய் மீனாவும்) சிறிய கப்பி - ஜல்லி பாதை மீனா தலையில் விறகு கட்டு, ஜெஸிகா ஆடுகளை ஓட்டி வருகிறாள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

கவனம்: காட்சி 1

பாத்திரங்கள் - மாணவி ஜெஸிகா, அவள் தாய் மீனா

இடம்: கிராமத்து ஆளில்லாத ரயில்வே லெவல் கிராஸிங்

(இருப்புப் பாதை அருகில் ஜெஸிகாவும் அவள் தாய் மீனாவும்) சிறிய கப்பி - ஜல்லி பாதை மீனா தலையில் விறகு கட்டு, ஜெஸிகா ஆடுகளை ஓட்டி வருகிறாள்.

ஜெஸிகா - ""அம்மா.. இப்போ எக்ஸ்பிரஸ் ரயில் வர்ற நேரம்.. குறுக்கே போக வேணாம்..திடீர்னு வண்டி வந்திட்டா நாம மாட்டிக்குவோம்.. ஆடுகளுக்கும் ஆபத்து''

தாய் மீனா - ""அட.. பயந்தாங்கொள்ளி.. போ புள்ளே.. இப்போ எக்ஸ்பிரஸ் ரயில் வர நேரம் இல்லே..தைரியாம ஆடுகளை ஓட்டு.. ரயில் வந்தா நான் சொல்றேன்..''

ஜெஸிகா - ""இங்கே பாதை வளைவா இருக்கிறதால் ரயில் தூரத்தில் வர்றது தெரியாது... கிட்டே வந்ததும் நாம சுதாரிக்க முடியாது.. அதன் வேகம், நம் கண் கணிப்பை ஏமாற்றி விடும், எதுக்கு அம்மா அசட்டுத் துணிச்சல்..''

தாய் மீனா - ""எக்ஸ் பிரஸ் போனபின் போகலாம்ங்கிறியா..''

ஜெஸிகா - ""ஆமாம் அம்மா.. இந்த நேரத்தில்தான், பள்ளியில், அந்த வண்டி போற சத்தம் கேட்டிருக்கோம்..''

மீனா - ""இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை அந்த ரயில் உண்டா..''

ஜெஸிகா - ""உண்டு அம்மா.. அது தினசரி போகும் அதிவேக சூப்பர் ஃபாஸ்ட்டுன்னு ஆசிரியர் சொல்வார்..''

மீனா - ""ஹும்.. வண்டி எப்போ வரும்..! எப்போ நாம வீடு போறது.. ரேஷனில் போய் சாமான்கள் வேறே வாங்க வேண்டி இருக்கு..''

(விறகை இறக்கி வைத்து விட்டு அதன் அருகில் உட்கார்ந்து கொள்கிறாள். அப்போது சில நொடிகளில் அதி வேக டெல்லி செல்லும் அதிவிரைவு

ராஜதானி ரயில் இவர்கள் இருக்கும் இடத்தைக் கடக்கிறது..)

-சடக் சடக்! சடக் சடக்! சில நொடிகளில் எல்லா பெட்டிகளும் கடந்து செல்கின்றன.. கடைசிப் பெட்டி விரைவில் மறைகிறது. காற்று வீச்சு... அதிர்ச்சியில் இடம் அதிர்கிறது. புழுதி கிளம்ப..-

பயத்துடன் மீனா (நெஞ்சில் கை வைத்தபடி) - ""நல்ல வேளை ஜெஸி.. நான் சொன்ன மாதிரி ஆடுகளோட நீ போயிருந்தா ஆபத்துதான்.. பெரும் நஷ்டம் அடைஞ்சிருப்போம்..''

ஜெஸிகா - ""பிரதமர் இந்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் இல்லாத காலம் விரைவில் வரும் எனச் சொல்லி இருக்கார்.. அம்மா!''

காட்சி 2

பாத்திரங்கள் - இளைஞர்கள் பரத், திவாகர் (நண்பர்கள்)

இடம் - நகரப் பகுதி

பரத்தும், திவாகரும் சைக்கிளில் வருகிறார்கள். ரயில்வே கேட் சாத்தி இருக்கிறது.-

பரத் - ""சே..! கேட் போட்டாச்சே.. ரயில் வர அஞ்சு நிமிஷம் ஆகுமே.. இப்போ என்ன பண்றது..''

திவாகர் - ""நிப்போம்.. கேட் திறந்ததும் போவோம்.. நம்ம பாதுகாப்புக்குத்தானே இந்த கேட், அப்புறம் கேட் கீப்பர், சிக்னல் விளக்குகள் எல்லாம் இருக்கு''

பரத் - ""அதோ பார்.. எத்தனை பேர் கேட் அடியில் குனிஞ்சு தண்டவாளத்தைக் கடந்து போறாங்க.. காலத்தின் அருமை முக்கியம் திவாகர்..''

திவாகர் - ""அதைவிட உயிர் முக்கியமில்லையா பரத்..?''

பரத் - ""அதோ பார் ஒருத்தர் தன் டூவீலரையே சாய்ச்சு உள்ளே தள்ளிக்கிட்டு வந்து கடக்கிறார் தண்டவாளத்தை..''

திவாகர் - ""அது தவறு..நாம் அதை பின்பற்றக் கூடாது''

பரத் - ""வா திவாகர்.. ரயில் வர நேரமாகும்.. சைக்கிளை சாய்ச்சுத் தள்ளிக் கிட்டே போய் மறுபுறம் போயிடலாம்.. எத்தனை பேர் அப்படி போறாங்க பார்..''

திவாகர் - ""நாம் படிக்கும் மாணவர்கள்.. சட்டம், விதிமுறைகளைக் கடைப்பிடிக்கணும்.. மத்தவங்க பின்பற்ற முன்மாதிரியாவும் இருக்கணும்.. பேசாமலிரு பரத்''

பரத் - ""நான் சைக்கிளைத் தள்ளிக் கிட்டுப் போகப் போறேன்.. நீ மெதுவா நின்னு கேட் திறந்ததும் வா.. இங்கே பார்..! எத்தனை டூவீலர்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் இருபுறமும் தேங்கி இருக்குன்னு.. இது கலைய பத்து நிமிஷமாவது ஆகும்..

திவாகர் - ""டேய் பரத் - இப்போ வரப் போறது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.. நம் ஊரில் நிக்காம செல்றது.. அதன் வேகம் அதிகம் .. ரிஸ்க் எடுக்காதே''

பரத்} ""ஹெஹ் ஹே... ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி'' என மிமிக்ரி செய்தபடி சைக்கிளை சாய்த்து கேட்டுக்குள் நுழைய முயற்சிக்கிறான்.. அப்போது எதிர் பாராத விதமாக எதிர் பாராத மறு திசையில், ஒரு விரைவு வண்டி வேகமாக ஹய்ங்ங்க் ங் என ஹாரன் அடித்தபடி வர பரத் நிலை தடுமாறுகிறான்.. வெகு அருகில் ரயில் கடக்கிறது. திவாகர் சைக்கிளையும் பரத்தையிம் இழுக்கிறான் வெளிப்புறம்.

(நடுங்கியபடி) பரத் - ""இது என்ன ....இந்த திசையில் இருந்து வண்டி வருது..! தப்பிச்சேன் நல்ல வேளை''

திவாகர் - ""நாம் கவனக் குறைவா இருப்போம், கடக்கும்போது என்பதால்தான் இந்த கேட் முறையே இருக்கு..அதை மீறுவது தவறு''

பரத் - ""ஸாரிடா..திவாகர், என் அப்பா கிட்டே இதைச் சொல்லிடாதே..''

காட்சி 3

நடுத்தர வயது பெண்மணிகள் - சரண்யா,

சங்கீதா (ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் தோழிகள்)

மாநிலப் பெரு நகரம்

புற நகர் மின்சார ரயில்கள் ஓடும் பாதை, விரைவு ரயில்கள் ஓடும் பாதை என பல தண்டவாளங்கள் உள்ள பெரிய ரயில் நிலையம் அருகில்

(சரண்யாவும் அவள் தோழி சங்கீதாவும். ஆபீஸ் முடிந்து வருகிறார்கள்)

சங்கீதா - ""வா சரண்யா, டிராக்கை இப்படியே நடந்து போய் மறுபுறம் பிளாட்பாரத்தில் ஏறிடலாம்.. வெளியே பஸ் ஸ்டாப்.. பஸ்ûஸப் பிடிச்சிடுவோம்..''

சரண்யா - ""வேண்டாம்பா.. நீ உயரம்.. தண்டவாளத்தில் இருந்து பிளாட்பார மேடையில் ஏறி விடுவே, நான் குள்ளம் என்ன பண்ணுவேன்..?''

சங்கீதா - ""அதோ பார்..அதுக்கு தான் யாரோ ஒரு கல்லு வச்சிருக்கிருக்காங்க.. அதில் காலை வச்சு ஜம்ப் பண்ணு''

சரண்யா - ""என்னால் முடியாதுப்பா.. நான் மேம்பாலம் வழியா சுத்தி வந்துடறேன்..''

சங்கீதா - ""அட அசடு.. சுத்த பயந்தாங்கொள்ளி.. நீ! நான் எப்பவும் நீ இல்லாட்டி கிராஸ் பண்ணி போயிடுவேன்.. எனக்கு இன்னிக்கு காலை வலிக்குது.. மேம்பால படியில் ஏற தெம்பே இல்லை.. எத்தனை படி மனுஷி ஏர்றது?''

சரண்யா - ""சொன்னா கேளு சங்கீ.. வம்பு வேணாம்..''

சங்கீதா - ""நீ வேணுமின்னா சுத்தி ஏறி வா.. நான் டிராக்கை கிராஸ் பண்ணி வெளியே பஸ் ஸ்டாப்புக்கு வந்திடறேன்..''

சரண்யா - ""எனக்கு என்ன வோ சரியாபடலே..''

(மேம்பாலத்தை நோக்கிப் போகிறாள்)

சங்கீதா - (தண்டவாளத்தைக் கடக்கும்போது செல் ஃபோன் அடிக்கிறது.. அதை எடுத்துப் பேசியபடி,) ""என்ன.. ஸ்பூர்த்திக் குட்டி....! ஃபர்ஸ்ட் ரேங்க்கா.. வெரிகுட்.. இன்னும் பத்து நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன் சாக்லெட்டோட''

(அப்போது மின்சார ரயில் இவள் அருகில் வருவதைக் கவனிக்கவில்லை.. ஒருவர் சங்கீதவை இழுத்துவிட தள்ளி விழுகிறாள். கையில் சிராய்ப்பு)

தள்ளி விட்டவர் - ""என்னம்மா நீங்க..! வண்டி வர்றதைக் கவனிக்காம, செல்லில் பேசிக்கிட்டு வர்றீங்க.. நல்ல வேளையா தள்ளிவிடலைன்னா உங்க பிள்ளைகுட்டிகளுக்கு யார் இருக்காங்க? என்னா போங்க...,படிச்ச பொம்பளைங்க நீங்க இப்படிச் செய்யலாமா?''

சங்கீதா - ""சாரி சார்.. ரொம்ப தாங்க்ஸ் சார்..'' (கை முட்டி சிராய்ப்பைப் பார்த்தபடி மேம்பாலத்தை நோக்கிச் செல்கிறாள்.)

பஸ்ஸ்டாப்பில் நிற்கும் சரண்யா - ""என்ன சங்கீ..? பேயறைஞ்ச மாதிரி வர்றே..! ஏன் மேம்பாலம் வழி வர்றே..? அட கையில் என்ன சிராய்ப்பு.. எப்படி ஆச்சு..?''

சங்கீதா - ""ம்.. அதுவா...கவனக் குறைவு..பொறுப்பில்லா தன்மை, விதி மீறலுக்கு ஒரு சின்ன தண்டனை..கடவுள் தந்தது...இனி உன் வழி தான் என் வழி சரண்யா..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.