முகப்பு
சிறுவர்மணி

குழந்தை ஒரு கண்ணாடி

இரும்பு (கிரில்) கதவுக்குப் பின்னால் சோபாவில் மல்லிகா; கன்னத்தில் கை வைத்தவாறு வா

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

அரங்கம்

காட்சி-1

இடம்: சிறுமி மல்லிகாவின் வீடு

மாந்தர்: மல்லிகா, துளசி, பணிப்பெண்.

(மல்லிகா நான்காம் வகுப்பு பயிலும் சிறுமி. துளசி அவள் தோழி)

இரும்பு (கிரில்) கதவுக்குப் பின்னால் சோபாவில் மல்லிகா; கன்னத்தில் கை வைத்தவாறு வாட்டத்துடன் இருக்கிறாள். அவளைத்தேடி அதே தெருவில் இருக்கும் பள்ளித்தோழி துளசி வருகிறாள். பணிப்பெண் பூட்டைத் திறந்து அவளை உள்ளே விடுகிறாள்.

துளசி: மல்லிகா, ஏன் உன்னோட முகம் இப்படி வாட்டமா இருக்கு? பாடம் கஷ்டமா இருக்கா....? வீட்டுப்பாடம் செய்யலியா?

மல்லிகா: (பணிப்பெண் பின் பக்கம் போய்விட்டாளா என்று பார்த்தவாறு துளசி, பள்ளி...பாடம்.....ஆசிரியர்....எனக்கு பிரச்னையில்லே... வீட்டுப்பாடத்தை நேத்து சாயங்காலமே முடிச்சிட்டேன்.

துளசி: அப்புறம் என்ன..? இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை...ஜாலியா விளையாட வேண்டயது தானே...

மல்லிகா: விளையாடுற மனநிலை எனக்கு இல்லே துளசி.

துளசி: அப்படி என்ன உனக்கு வருத்தம்?

மல்லிகா: எங்கம்மா முகத்தை நான் பார்த்து ஒரு வாரம் ஆகுது..., அதான் என் வருத்தம்!

துளசி: அவங்க படிச்சவங்க..., எவ்வளவோ வேலை இருக்கும். இன்னிக்கு ஞாயிறு அவங்க முகத்தை நல்லாப் பார்க்காலாம். உன்னைக் கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சப் போறாங்க...

மல்லிகா: துளசி..., அவசரப்படாதே..., எங்கம்மா விடியறதுக்குள்ளேயே வெளியே போயிட்டாங்க...அழைப்பு மணியை யாரோ அடிச்சாங்க... நான் தூக்கக் கலக்கத்திலே இருந்தேன். லேடீஸ் கிளப்புலேயிருந்து சிவகாமி மாமி வந்து அழைச்சிக்கிட்டுப் போயிட்டாங்கன்னு ஆயா சொன்னாங்க.

துளசி: நல்ல வேளை... நான் தப்பிச்சேன்... எங்கம்மா அதிகம் படிக்கலே..., லேடீஸ் கிளப்பிலேயும் இல்லை. என்னை ரொம்பக் கொஞ்சலேன்னாலும் அன்பா பேசவாவது செய்வாங்க...., சரி..., கவலைப்படாதே... ஏதாவது ஒரு விடிவு வரும்.

(துளசியை அவள் வீட்டுப் பணிப்பெண் வந்து அழைத்துப் போகிறாள்)

காட்சி - 2

இடம்: மல்லிகாவின் வீடு.

மாந்தர்: மல்லிகா, மல்லிகாவின் தாய் மரகதம்,

நந்தினி.

(மல்லிகா அவளுடைய அறையில் படுத்திருக்கிறாள். ஒரு கார் வீட்டுக்கு முன் வந்து நிற்கிறது. நந்தினி மாமி இறங்கி வருகிறாள்)

நந்தினி: (பணிப்பெண் கொடுத்த காபியைக் குடித்தவாறே) மரகதம்..., சீக்கிரம் புறப்படு! நாம மாமல்லபுரம் போறோம்..., வீட்டிலே பிள்ளைங்கங்கிற பேரிலே பிசாசுங்க இருக்கே...

அதுங்ககிட்டேயிருந்து நமக்குக் கொஞ்ச நேரமாவது விடுதலை வேணுமில்லே..., வா..., ஓடிடலாம்! இருட்டின பின்னால வருவோம்.

மரகதம்: நந்தினி, மாமல்லபுரத்தில் இன்னிக்கு என்ன நிகழ்ச்சி?

நந்தினி: குழந்தைகளை உடல் நோயிலிருந்தும் மன நோயிலிருந்தும் காப்பாத்தறதுக்கு ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்துறோம்..., ஒரு பெரிய கம்பெனி ஸ்பான்ஸர் பண்ணுது. மூணு வேளையும் திருப்தியா சாப்பாடு உண்டு. சாயங்காலம் கடற்கரையிலே ஜாலியா நடக்கலாம்!

(மல்லிகா விழித்திருப்பது அவர்களுக்குத் தெரியாது. அவள் அவர்கள் பேசியதைக் கேட்டு கண் கலங்குகிறாள்)

...கார் புறப்படுகிறது...

காட்சி-3

இடம்: மல்லிகாவின் வீடு.

மாந்தர்: மரகதம், மரகதத்தின் கணவர் கோபால், மல்லிகா.

(கோபால் அறைக்குள்....மரகதம் சென்று அவர் எதிரே அமர்கிறாள்)

மரகதம்: என்னங்க..., நம்ம மல்லிகாவோட குணம் வர வர மாறிக்கிட்டே வருது...

கோபால்: என்ன செய்யறா?

மரகதம்: அவ வீட்டில தனியா இருக்காளேன்னு நான் ஒரு அழகான பொம்மையை வாங்கி ஆயாகிட்டே கொடுத்து அனுப்பினேன்.

கோபால்: அதுக்கென்ன?

மரகதம்: ஆயா வர்றதுக்குள்ள அவ தூங்கிட்டாளாம். எழுந்ததும் கொடுத்திருக்கிறா..., அதுக்கு மல்லிகா என்ன சொன்னாளாம் தெரியுமா?

கோபால்: என்ன சொன்னா?

மரகதம்: "அவங்க அனுப்பின பொம்மைப் பிசாசை வாங்கிக்க முடியாது'ன்னு சொல்லியிருக்கா...இவ இப்படியெல்லாம் பேசுவான்னு நான் எதிர்பார்க்கலேங்க...

கோபால்: மரகதம்..., இதிலே ஒண்ணும் அதிசயம் இல்லே... நந்தினி அன்னிக்கி என்ன சொன்னாங்க? பிள்ளைங்கங்கிற பிசாசுங்க தொல்லை தாங்கலேன்னாங்க....

மரகதம்: அய்யோ..., அது உங்க காதுலேயும் விழுந்திடுச்சா...

கோபால்: நாம குழந்தைங்ககிட்டே எப்படி நடந்துக்கிறோமோ அப்படித்தான் அதுங்களும் நம்ம கிட்டே நடந்துக்கும்... அதுங்க எல்லாம் கண்ணாடி மாதிரி..., நாம அன்பு காட்டினா குழந்தைங்களும் அன்பு காட்டும். பாசமா நடந்துக்கும். நாம அதுங்களை ஒதுக்கினா நம்மையும் அதுங்க ஒதுக்கிடும்.

வீட்டை, குழந்தைங்களை சரியா கவனிக்காம நான் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உழைக்கிறேன்னு சொல்றதெல்லாம் போலித்தனம்! இதிலேயிருந்து நீ மாறணும்!

(மரகதம் அமைதியாக இருக்கிறாள்)

நான்தான் தனியார் துறையிலே வேலை செய்யறேன். வேலை கடுமையா இருக்கு. உனக்குத் தலை போகிற மாதிரி அப்படியென்ன வேலை இருக்கு?

உன் குழந்தையை நீ புறக்கணிச்சே... அவ நீ கொடுத்த பொம்மையை உன்னோட பொம்மையைப் புறக்கணிச்சிட்டா...

குழந்தை ஒரு வளரும் பயிர்! அந்தப் பயிர் வாடாம இருக்கத் தேவையானது அம்மாவும் அப்பாவும் காட்டற பாசம் என்ற நீர்! இதை நீ நல்ல முறையிலே உணர்ந்து நடந்தா நல்லது... நாம ஓடியாடி உழைக்கிறதெல்லாம் குழந்தையோட நல்ல எதிர்காலத்துக்காகத்தானே...

(மரகதம் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது)

மரகதம்: (கண்களைத் துடைத்தவாறு) என்னை மன்னிச்சிடுங்க... நான் "கண்டதே காட்சி...கொண்டதே கோலம்'னு இவ்வளவு நாளும் "ஏனோதானோ'ன்னு இருந்திட்டேன். இனிமே அந்தத் தப்பை செய்ய மாட்டேங்க...

(இருவரும் மல்லிகாவின் அறைக்குப் போகிறார்கள்)

நிறைவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.