தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடு பண்டைய காலத்தில் காம்போஜம் எனப்பட்டது. கம்போடியாவின் வடமேற்குப் பகுதியில் உலகின் எட்டாவது அதிசயம் எனப் புகழப்படும் உலகின் மிகப்பெரிய கோயிலான அங்கோர்வாட் ஆலயங்கள் உள்ளன. யுனெஸ்கோவினால் 1992-ஆம் ஆண்டு "உலகப் பண்பாட்டு சின்னம்' என அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆலயங்கள் இன்றளவும் பண்டைய இந்திய மக்களின் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் கலைத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கிறது.
கெமர் பேரரசு
பண்டைய காம்போஜத்தை எட்டாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இந்திய வம்சாவளி மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.
8 மற்றும் 9-ஆம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்களாக தற்போதைய காம்போடியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள "குலேன்' மலைப்பகுதியைச் சார்ந்த பகுதிகளை யுத்தங்களில் நாட்டை இழந்தும், பின் கைப்பற்றியும் என ஆட்சி செய்துள்ளார்கள்.
அங்கோர்: 9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாம் யசோவர்மன் (890 - 910) என்ற மன்னன் "யசோதராபுரம்' என்ற புதிய ஊரை உருவாக்கி அதனை "அங்கோர்' என்று அறிவித்து தலைநகரமாக மாற்றினார். அங்கோர் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு மாநகரம் என்று பொருள். தற்போது இந்நகரமே "அங்கோர்வாட்' என்று அழைக்கப்படுகிறது.
யசோவர்மனுக்கு பின் வந்த அரசர்கள் சிதறிக் கிடந்த நாட்டின் பல பகுதிகளை ஒருங்கிணைத்தும், பிற நாடுகளை போரில் கைப்பற்றியும் பெரும் நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள். தற்போதைய பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மலாய் ஆகிய நாடுகளின் சில பகுதிகளும் இணைந்து "கெமர் பேரரசு' என்ற பெயருடன் 13-ஆம் நூற்றாண்டு வரை மிகவும் சீரும் சிறப்புடன் ஆட்சி செய்துள்ளார்கள்.
இவர்களுடைய ஆட்சிக்காலம் கம்போடிய வரலாற்றில் பொற்காலமாகும். ஆசிய வரலாற்றில் பண்டைய காலத்தில் செல்வச் செழிப்புடன் சிறப்பான ஆட்சியை நல்கியது என்று கெமர் பேரரசு புகழப்படுகிறது.
இந்த மன்னர்கள் இந்து மதத்தின் பிரிவுகள் ஆகிய சைவ மற்றும் வைணவத்தைப் பின்பற்றி உள்ளார்கள். இடையில் ஆட்சி செய்த கெமர் பேரரசர்கள் சிலர் பௌத்த மதத்தைப் பின்பற்றி உள்ளார்கள். இவர்களால் அங்கோர் நகரத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இந்து மற்றும் பௌத்த கோயில்கள் கலைச்சிறப்புடன் கட்டப்பட்டுள்ளன. அவை இன்றளவும் உலகின் தலைசிறந்த பாரம்பரியமான பண்பாட்டுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.
அங்கோர்வாட் ஆலயங்கள்:
தற்போதைய கம்போடியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள "சியாம் ரீப்' என்ற நகரைச் சுற்றிலும் கெமர் பேரரசர்களால் கட்டப்பட்ட பல ஆலயங்கள் உள்ளன. இவற்றில் 12-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரால் அங்கோர் நகரத்தின் மையத்தில் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலே தனிச்சிறப்புடன் விளங்குவதால் இப்பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களும் அங்கோர்வாட் ஆலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு கோயிலும் தனிப்பட்ட சிறப்புத் தன்மையுடனும், தனித்தனி பெயருடனும் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
1. அங்கோர்வாட் விஷ்ணு கோயில்
இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரால் அங்கோர் நகரத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இவர் வரலாற்றில் பண்டைய மன்னர்களில் சிறந்தவர் என்று புகழப்பட்டுள்ளார். இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் (1113 முதல் 1150) ஆனதாம்.
இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் (1181 - 1220) மஹாயான புத்த மதத்தைப் பின்பற்றினார். அதனால் விஷ்ணு கோயிலில் இருந்த இந்து கடவுள் சிலைகளை அகற்றி அங்கு புத்தரின் திருவுருவங்களை நிறுவினார். பிற்காலத்தில் ஆட்சி செய்த எட்டாம் ஜெயவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றி மீண்டும் விஷ்ணு கோயிலில் இந்து கடவுள்களை பிரதிஷ்டை செய்தார்.
இன்றளவும் உலகின் மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட் விஷ்ணு கோயில் ஆகும். ஆலயத்தின் கட்டட அமைப்பின் நீளம் 1,550 மீட்டர், அகலம் 1,400 மீட்டர், மொத்தப் பரப்பளவு 500 ஏக்கருக்கும் அதிகம் ஆகும்.
இந்தக் கோயில் இந்து மதக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு காம்போஜத்தின் சிறப்புத் தன்மைகளுடன் கட்டப்பட்டுள்ளன. இதன் சுவர்கள் மணற்பாறைகளால் (நஹய்க் நற்ர்ய்ங்) ஆனது. கோயிலின் வெளிச்சுவரைச் சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டு நன்கு பராமரித்தும் உள்ளார்கள். அகழியைக் கடக்க பாலம் இருந்துள்ளது.
65 மீட்டர் உயரம் கொண்ட மூன்று நிலைகளை உடைய கோபுரமும், அதனைச் சுற்றிலும் நான்கு சிறிய கோபுரங்களும் உள்ளன. இதற்கு அந்தக் காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. கோயிலின் அமைப்பு மேரு மலைக்கு இணையாகக் கருதப்படுகிறது. மேலும் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் வண்ணம் கோபுரங்கள் சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் உள்ளே மழை நீரைச் சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கங்களும், வாய்க்கால்களும், வடிகால் வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இரண்டு சிங்க சிலைகளைக் காவலாகக் கொண்ட மேற்கு நுழைவாயில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும்.
உள்ளே சென்றதும் மெய் மறக்கச் செய்யும் விதவிதமான சிற்பங்கள், வித்தியாசமான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும் சதுர வடிவ ஜன்னல்களும், பூக்கள் வரையப்பட்ட மேல் விதானங்கள் என கட்டட மற்றும் சிற்ப கலைப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
பல நூறு அடி நீளம் கொண்ட மிக நீண்ட பிரகாரங்கள் உள்ளன. இதனை "ஏழு தலைகளைக் கொண்ட நாகங்கள்' 5 காவல் காக்கின்றன.
கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள் கல்தூண்களால் உருவாக்கப்பட்ட வரிசையான ஜன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் என வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன.
"அப்சரஸ்' எனப்படும் தேவமங்கையரின் சிலைகள் பலவிதமான தோற்றங்களில் 2000-க்கும் மேல் உள்ளன. இச்சிலைகள் விதவிதமான ஆடை, அணிகலன் அலங்காரங்களுடன் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நுட்பமான வேலைப்பாடுடன் வளைவுகளையும் கொண்டுள்ளது.
கோபுர நுழைவு வாயில் பகுதியில் இந்திய இதிகாசங்களாகிய ராமாயண, மகாபாரதக் காட்சிகள் மற்றும் புராணக் காட்சிகள் அழகுபட சித்திரிக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் சூரியவர்மன் அரசவைக் காட்சியும், அரச காரியங்களைச் செய்வதும் காட்சிகளாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தில் எட்டு கைகளுடன் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை உள்ளது. இந்தச் சிலையில் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் விஷ்ணு காட்சியளிக்கிறார். அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதங்களையும் மாறி மாறிப் பின்பற்றியதால் இந்த அமைப்பில் சிலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2. குலேன் மலையில் சிவலிங்கங்கள்:
இரண்டாம் ஜெயவர்மன் (790-802) நாம் குலேன் மலைப்பகுதியில் பல சிவலிங்கங்களை அமைத்துள்ளார். இம்மலையில் ஓடும் நதியின் முகத்துவாரத்தில் ஏகப்பட்ட லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுப்பகுதி என்பதால் தெளிவாக ஓடும் தண்ணீருக்குள் அற்புதமாகத் தோன்றுகிறது. நதியின் இரு கரைகளிலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி என்று தெய்வ உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மலையில் உள்ள அருவி பகுதியில் பின்வந்த மன்னரால் கட்டப்பட்ட புத்தர் கோயிலும் உள்ளது.
3. பேயான் ஆலயம்:
மன்னர் ஏழாம் ஜெயவர்மன் (1181 - 1220) கட்டிய 5 வாயில்களைக் கொண்ட பேயான் ஆலயத்தில் 54 கோபுரங்கள் இருந்துள்ளன. கோபுரத்தின் நான்கு புறமும் மிகப்பெரிய முகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் 216 (54ஷ்4) முகங்களும் புத்தரின் முகங்கள் எனப்படுகிறது. இவை "புத்தரின் நான்கு முக கோபுரம்' என அழைக்கப்படுகிறது. நான்கு முகங்களும் வெவ்வேறு முகபாவம் காட்டுவது இதன் சிறப்பு. தற்சமயம் இதில் 37 கோபுரங்கள் மட்டுமே உள்ளது. அங்கோர்வாட் ஆலய அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்டது பேயான் ஆலய அமைப்பு ஆகும்.
4. பன்ட்டில் ஸ்ரே ஆலயம்
கி.பி.968 முதல் 1000 வரை ஆட்சி செய்த ஐந்தாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. ரோஸ் வண்ண மணற்பாறைகளால் அமைக்கப்பட்ட இந்த புனித ஸ்தலம் அற்புத அழகுடன் திகழ்கிறது. இங்குள்ள நுழைவு வாயில் சிற்பங்களும், கம்ச வதம், காளிங்க நர்த்தனம், சிவ பார்வதி சிற்பங்கள் முதலியவை துல்லியமாகச் செதுக்கப்பட்டு அழகுடன் தோன்றுகிறது.
5. ப்ரஸாத் க்ராவன் ஆலயம்:
மகாலட்சுமிக்காக முதலாம் ஹர்ஷவர்மனால் கட்டப்பட்டது. 5 கோபுரங்கள் தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் அழியாமல் இப்பொழுதும் காட்சி தருவது இதன் சிறப்பாகும்.
மேலும் இப்பகுதியில் இரண்டாம் உதயாதித்திய வர்மன் (1050-66) என்ற மன்னரால் கட்டப்பட்ட பபுவான் ஆலயம், முதலாம் யசோவர்மன் (890 - 910) என்ற மன்னரால் கட்டப்பட்ட நாம் பேகாங் ஆலயம் போன்ற பல ஆலயங்கள் உள்ளன.
இடையில் பெüத்த மதமும் பரவியதால் இடைப்பட்ட மன்னர்கள் கோயில்களை புத்த விஹாரங்களாக மாற்றியதாலும் பல இடங்களில் புத்த பெருமானின் சிலைகளே பரவலாகக் காணப்படுகின்றன.
தற்சமயம் கம்போடியாவில் இந்துக்கள் இல்லாததால் இந்தக் கோயில்கள் அனைத்தும் வழிபாடு மற்றும் பூஜை, சடங்குகள் இல்லாமல் சுற்றுலாத் தலமாகவே காட்சி தருகிறது.
காட்டுக்குள் மறைந்த ஆலயங்கள்:
14-ஆம் நூற்றாண்டில் சயாம், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளின் தொடர் தாக்குதலில் காம்போஜம் பலம் இழந்தது. இதனால் 15-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கொஞ்சகொஞ்சமாக சீர்குலைந்து, கைவிடப்பட்ட நகரமாக அங்கோர் ஆனது.
பின் காலப்போக்கில் சுற்றிலும் மரம், செடி, கொடிகள் வளர்ந்தது மற்றும் மழை, வெள்ளம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டும்,
ஆற்றங்கரை சேதமடைந்ததாலும் கட்டடங்கள் மண்மேடுகளால் சூழப்பட்டது. நாளடைவில் மிகப் பெரிய காடாக மாறி அங்கோர் நகரமே மறைந்து போனது.
ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்த நகரமும், ஆலயங்களும் வெளி உலகத்திற்குத் தெரியாமலே மறைந்து போனது. 1860-ஆம் ஆண்டு "ஹென்றி மேர்ஹாட்' என்பவர் இந்தப் பகுதிகளைக் கண்டு வெளிவுலகத்திற்குத் தெரியப்படுத்தினார்.
பின்னர் பல தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று வல்லுநர்களும் இப்பகுதியில் பெரிய அளவில் ஆய்வுகள் பல செய்து இதன் சிறப்புகளை வெளிக்கொண்டு வந்தனர்.
சீர்குலைந்த பகுதிகளைச் செப்பனிட உலக நாடுகள் பலவும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்தது. இந்தியாவும் இதற்கு உதவி செய்துள்ளது. பின்னர் இப்பகுதியும் ஆலயங்களும் சீரமைக்கப்பட்டு "அங்கோர்வாட் ஆலயங்கள்' என்ற பெயரில் சுற்றுலாத் தலமாக மாறியது.
1994-ஆம் ஆண்டு அமெரிக்கா தனது விண்கலம் மூலம் ரேடார் கருவி கொண்டு எடுத்த பல்வேறு புகைப்படங்கள்தான் பல ஆலயங்களை அறிந்துகொள்ள உதவியது. அதன் பின்னரே பல ஆலயங்கள் கண்டறியப்பட்டு சீர்செய்யப்பட்டது.
சீன யாத்ரீகர்கள் எழுதிய பயணக் குறிப்புகளில் பலவற்றில் காம்போஜத்தின் சிறப்பும், அங்கோர் நகரத்தின் பெருமைகளையும் எழுதியுள்ளார்கள். 1296-ஆம் ஆண்டு அங்கோர் நகரத்தைக் கண்ட சீன யாத்ரீகர் க்ஷ்ட்ர்ன் ஈஹஞ்ன்ஹய் என்பவர் வரைபடங்களுடன் பல அரிய தகவல்களை எழுதியுள்ளார்.
தற்சமயம் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இவற்றைக் காண சுற்றுலா வருகிறார்கள். இன்றைய சியாம் ரீப் நகரம் சென்று அதனைச் சுற்றியுள்ள இவற்றைக் கண்டு ரசிக்கலாம். அங்கோர்வாட் ஆலயம் இந்நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.