முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: புவனா வீட்டுப் பூதம்!

விமல்: புவனா! புவனா! மாசுக் கட்டுப்பாடு பற்றி நடக்கப்போற பேச்சுப் போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா? அதுக்காகப் பாரதியார் வசன கவிதைகள் வேணும்னு கேட்டியே, கிடைச்சுதா? போட்டிக்குத் தயாரா?

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

காட்சி-1

இடம்-விமலின் வீடு

விமல், புவனா, காற்று, நான்கு பூதங்கள்

விமல்: புவனா! புவனா! மாசுக் கட்டுப்பாடு பற்றி நடக்கப்போற பேச்சுப் போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா? அதுக்காகப் பாரதியார் வசன கவிதைகள் வேணும்னு கேட்டியே, கிடைச்சுதா? போட்டிக்குத் தயாரா?

புவனா: ம்! தயார்! பேசிக் காண்பிக்கட்டுமா? கேள்...

புவனா: ""காற்றே வா! மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு மனத்தை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா! இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு! காற்றே வா!

காற்று நம் மீது வீசுக! அது நம்மைக் காத்திடுக! மலைக்காற்று நல்லது. கடற்காற்று மருந்து. வான்காற்றும் நன்று. அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்களைப் போடலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. அவன் வரும் வழியில் சோலைகளும், பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் நல்ல மருந்தாகி, நமக்கு உயிராகி, அமுதமாகி வருக! காற்றுத் தேவனே! உன்னை வணங்குகின்றோம் வா! வா! வா!'' என்று மகாகவி பாரதியார் ----------- ---------.

காற்று: (பலத்த சிரிப்பு) ஹாஹ்ஹா... ஹாஹ்ஹா...

புவனா: விமல்! நீயா இப்பொழுது சிரித்தாய்?

விமல்: இல்லை புவனா! வேறு யாரோதான் சிரித்திருக்கிறார்கள்!

காற்று: ஹாஹ்ஹா... ஹாஹ்ஹா! சிறுவர்களே! பயப்படாதீர்கள். நான்தான் காற்றுத் தேவன்... சிறுமியே, நீ என்னை அழைத்தாயல்லவா?

புவனா: ஓ! காற்றுத்தேவா, உன்னால் பேசக்கூட முடியுமா?

காற்று: ம்!... முடியும்! என்ன! உங்கள் முகங்களில் வாட்டம் தெரிகிறது?

விமல்: ஆமாம். நேற்று இரவு சுத்தமாகக் காற்றில்லை. மின்விசிறி இருந்தும் பயனில்லை.

புவனா: தூக்கமும் வரவில்லை. நேற்று எங்கே நீ போயிருந்தாய்? கோடைப் புழுக்கம் எங்களை வாட்டுகிறதே...

காற்று: என்ன செய்வது? வரவர எனக்கு விரோதிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என் ஓட்டத்தையும், மகிமையையும் குறைத்து விடுகிறார்கள். என் குறைகளை யாரிடமாவது சொல்லத் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

விமல்: என்ன உனக்கும் விரோதிகளா?

காற்று: ஆமாம் குழந்தைகளே! விஞ்ஞானம் முன்னேற முன்னேற, நாள்தோறும் நான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறேன். எனக்கே மூச்சு திணறுகிறது. குழந்தைகளே! நானே கண்ணுக்குத் தெரியாதவன். என் விரோதிகளும் கண்ணுக்குத் தெரியாமல் என்னைச் சூழ்ந்துகொண்டு, என்ன பாடுபடுத்துகிறார்கள் தெரியுமா?

விமல்: சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் காற்றுத்தேவா.

காற்று: சிறுவனே, கண்ணிற்குத் தெரிவது தூசும் குப்பையும். இவற்றைச் சேர்த்துக் குவித்து அப்புறப்படுத்திவிடலாம். ஆனால் கண்ணிற்குத் தெரியாத விஷவாயுக்கள் இருக்கின்றனவே - அப்பப்பா - இவற்றை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

புவனா: நீங்களே ஐம்பூதங்களில் ஒன்று. உங்களுக்கே பயமா?

காற்று: ஆமாம். எனக்கு மட்டுமில்லை. எனது சகோதரர்களான நீர், பூமி - இவர்கள்கூட பாவம் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

விமல்: ஏன்?

காற்று: பூமியைச் சுற்றிலும் சுமார் முந்நூறு கிலோமீட்டர் உயரத்திற்கு வியாபித்திருப்பவன் நான். பூமியின் அருகில் மட்டுமே நான் அடர்த்தியாக இருக்கிறேன். மேலே போகப்போக அடர்த்தி குறைந்து மிக மிக மென்மையாக உலவிக் கொண்டிருப்பேன். நைட்ரஜனும், ஆக்ஸிஜனும்தான் எனது பிரதான உட்பொருள்கள். இவை

தவிர கார்பன் - டை - ஆக்ûஸடு, ஓúஸôன், ஆர்கான், ஹீலியம், நீராவி, புகை, தூசுத்

திரள் - இவையும் மிகச்சிறிய அளவில் என் மண்டலத்தில் நிறைந்துள்ளன.

புவனா: நீ தரும் ஆக்ஸிஜன் மட்டுமில்லாவிட்டால் உயிர்களே வாழ முடியாது இல்லையா?

காற்று: அதனால்தான் கவலைப்படுகிறேன். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உற்பத்தி செய்கின்றன. இத்தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில், விஷத்தன்மை நிறைந்த கழிவுப் பொருள்களை, வாயுக்களை வெளியேற்றுகின்றன. அனல்மின் நிலையங்கள், அணுமின் உலைகள் இவற்றின் சாம்பல் படலம், கதிர்வீச்சுக் கற்றை முதலியவை என் தூய்மையைக் கெடுத்துக்கொண்டே இருக்கின்றன. தொழிற்சாலைக் கழிவுநீர் அருகேயுள்ள ஆறு, குளங்கள், கடல் இவற்றில் கலந்து நீரை மாசுபடுத்திவிடுகின்றன. இதன் விளைவுதான் தூய்மையான காற்று உங்களுக்குக் கிடைப்பதில்லை.

விமல்: இப்படியெல்லாம் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் காற்றுத்தேவா?

காற்று: பல வன்முறைக் கும்பல்களின் மோதல், நாடுகளுக்கிடையே அவ்வப்பொழுது மூளும் போர்கள் - இவற்றால் உண்டாகும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை நினைத்தாலே என் உடல் நடுங்குகிறது. எங்கே வேண்டுமானாலும் தொழிற்சாலைகளைக் கட்டும் நிலை மாற வேண்டும். அரசு விதிக்கும் நிபந்தனைகள்படியே தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

விமல்: ஆமாம்!

காற்று: ஜுன் ஐந்தாம் நாளை ஒவ்வோர் ஆண்டிலும் சர்வதேசச் சுற்றுப்புறச் சூழல் தினமாகக் கொண்டாடி வருகிறீர்கள். இத்

தினத்திலாவது உலக நாடுகளும், மக்களும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

கறுப்புப் பூதம்: ஹாஹ்ஹா... ஏ! காற்றே! நீ இங்குதான் ஒளிந்துகொண்டிருக்கிறாயா? உன்னைத்தான் நாங்கள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

கார்பன் பூதம்: ஹாஹ்ஹா! ஆமாம்! எங்களை விட்டுவிட்டு நீ தனியாக எங்கும் ஓட முடியாது. சிக்கிக் கொண்டாய்! வா வெளியே...

சாம்பல் பூதம்: ஹாஹா... ஹாஹா! ஏ காற்றே! உன்னை ஒருநாள் நாங்கள் எல்லாருமாகச் சேர்ந்து விழுங்கிவிடப் போகிறோம். சீக்கிரமாக வெளியே வா!

கதிர்வீச்சுப் பூதம்: நீ வராவிட்டால் நாங்கள் உள்ளே புகுந்து ஆட்டம் போடுவோம். அதனால் இந்தச் சிறுவர்களுக்கும் ஆபத்து.. ஹாஹ்ஹா...

விமல்: காற்றுத் தேவா! யார் இவர்கள்?

காற்று: இவைதான் என்னைப் பாழ்படுத்தும் விஷங்கள்! ஒன்று தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் கரும்புகை - கருப்புப் பூதம். ஒன்று பலவித வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் - டை - ஆக்ûஸடு பூதம். மூன்றாவது அனல்மின் நிலையங்கள் வெளிப்படுத்தும் சாம்பல் பூதம். நான்காவது அணுமின் நிலையங்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுப் பூதம்.

புவனா: இவற்றிலிருந்து நீ எப்படி தப்பிக்கப் போகிறாய்?

காற்று: வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலம் உங்கள் கையில். கேட்டுக் கொள்ளுங்கள். தொழிற்சாலைகளில் ஏற்படும் கழிவுநீரில் சுண்ணாம்புச் சத்து சேர்த்தால் அதன் நச்சுத்தன்மை குறைந்துவிடும். விஞ்ஞானிகள் கூறும் ஆலோசனைகளைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். நல்ல சுற்றுப்புறச் சூழலில்தான் மனித வாழ்க்கையும், மற்ற உயிர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை அனைவரும் எண்ணிச் செயல்பட வேண்டும்.

புவனா: வேறு என்ன செய்யலாம்?

காற்று: உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்புநெறியே நல்ல வழி. அன்புநெறி நிறைந்தால் போர்களும் குறையும்.

புவனா: சரி, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

காற்று: அதோ பாருங்கள்! உங்கள் குளியலறை அருகே, அந்தக் குப்பைக் கூடை நிறைந்து வழிகிறது. அதிலிருந்து ஒருவித நாற்றம்கூட வருகிறது. இப்பொழுதே அதைக் கொண்டுபோய்க் கொட்டிவிடுங்கள். தோட்டத்துக் குப்பைகளை உடனுக்குடன் பெருக்கி, குழியில் தள்ளி இயற்கை உரம் தயார் செய்யுங்கள். அருகேயிருக்கும் கடைகளுக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ செல்ல நேரிட்டால், நடந்தே செல்லுங்கள். விசைவண்டிகளையும், குளிர்சாதன வசதிகளையும் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நான்கு பூதங்கள்: ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! காற்றே... இன்னும் என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்? நாங்களே உள்ளே வந்து விடுகிறோம்!

காற்று: குழந்தைகளே, நான் உங்களைச் சந்தித்துப் பேசியதற்கு அடையாளமாக வீட்டுப் பின்புறத்தில் ஒரு நல்ல மரக்கன்றை நடுங்கள். நான் என்றும் ஆரோக்கியமாக இருக்கக் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். நான் இன்னமும் இங்கிருந்தால் விஷவாயுக்கள் உங்களையும் தாக்கிவிடும். வருகிறேன்... வருகிறேன்... மனிதர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →