முகப்பு
சிறுவர்மணி

இனிப்பும் கசப்பும்!

""இந்தப் பலகாரத்தைக் கொண்டுபோய் பக்கத்துல இருக்கற ராமு அண்ணா வீட்டுல குடுத்துட்டு வா''

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

பாவளி! லதாவின் வீடு.

காலை 6-00மணி.

""லதா! இங்கே வா!''

""என்னம்மா?''

""இந்தப் பலகாரத்தைக் கொண்டுபோய் பக்கத்துல இருக்கற ராமு அண்ணா வீட்டுல குடுத்துட்டு வா''

""இரும்மா...,இந்தக் கம்பி மத்தாப்பு எரிஞ்சு முடிஞ்சதும் வரேன்''

""சரி...,சரி''

காலை 6-10. ராமுவின் வீடு.

""ராமு என்ன பண்ணிட்டு இருக்கே?''

""பட்டாசு வெடிச்சுக்கிட்டு இருக்கேன்''

""கொஞ்சம் இங்கே வந்துட்டுப் போயேன்''

""இரும்மா...,இந்த ஆட்டம் பாமையெல்லாம் வச்சுட்டு வந்துடறேன்''

""ஆட்டம் பாமா? பாத்துடா...,அப்பாவைக் கூட்டிட்டுப் போ''

""அடப்போம்மா...,இதெல்லாம் எனக்கு ஜுஜுபி, சும்மா அசால்டா வெடிப்பேன்''

""பாத்துடா''

காலை 6-15 லதாவின் வீடு.

""என்ன லதா! இன்னுமா கம்பிமத்தாப்பை விடலே. சீக்கிரம் வா! பலகாரத்தைத் தூக்குல  போட்டு மூடி வச்சுருக்கேன்''

""இதோ வந்துட்டேம்மா...,அப்பிடியே சைக்கிள்ள ஒரு ரவுண்டு போயிட்டு வரேம்மா''

""பக்கத்து வீட்டுக்குப் போகறதுக்கு எதுக்கு சைக்கிள்?''

""மா...,மா, ப்ளீஸ்மா...,அப்பிடியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரேம்மா''

""சரி, பாத்து ஜாக்கிரதையா போயிட்டு வா... பத்திரம்''

காலை 6-20 ராமு வீட்டு வாசல்

....டமால்!......

......டமால்!.....

""ஹாய் லதா! ஹாப்பி தீபாவளி!''

""யப்பா! என்ன சத்தம்! ஹாப்பி தீபாவளி ராமு...,அம்மா உங்களுக்கு இந்த பலகாரத்தைக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க.. இந்தா''

""கொஞ்சம் இரு, வாங்கிக்கறேன். இன்னும் மூணு ஆட்டம்பாம்தான் இருக்கு. அதையும் வச்சுட்டு வாங்கிக்கறேன்''

""சரி, அப்ப நானும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்து கொடுக்கறேன்''

(ஆட்டம் பாமைக் கொளுத்துகிறான்....திரியில் நெருப்பு அணைந்து விட்டது போல தோற்றம்... ராமு கிட்டே போக பயப்படுகிறான்....சைக்கிளில் சென்ற லதா திரும்புகிறாள். பலகாரத் தூக்கு ஆட ராமுவின் வீட்டை நோக்கி வருகிறாள்)

""வராதே....வராதே...! லதா''

""ஏன்?...என்ன ஆச்சு இப்ப நீதான் பட்டாசே வெடிக்கலையே?''

""நிறுத்து..., நிறுத்து சைக்கிளை!''

...டமால்!!....

""ஐயோ....,அம்மா!''

(லதா கீழே விழுகிறாள்! தூக்கு திறந்து பலகாரங்கள் சிதறுகின்றன! லதாவுக்கு கையில் காயம்...ராமு வீட்டில் எல்லோரும் உடனே தாங்கிப் பிடித்து மருந்திட்டு லதாவீட்டுக்குக் கொண்டு போய் விடுகிறார்கள்...லதா வீட்டிலும் எல்லோருக்கும் வருத்தம்!)

காலை 6-30 ராமுவின் வீட்டு வாசல். ராமுவின் சித்தப்பா வருகிறார்.

""ஹாப்பி தீபாவளி ராமு''

""..........''

""என்னடா ஹாப்பி தீபாவளின்னு சொல்றேன்...பேசாம இருக்கே?''

""ரொம்ப வருத்தமான தீபாவளி சித்தப்பா''

(நடந்ததை விவரிக்கிறான்)

காலை 7-30 லதாவின் வீடு

""யாரு ராமுவா? வா!''

""ரொம்ப சாரி லதா...,''

""பரவாயில்லே...நல்ல காலம்! சின்ன காயம்தான். நீதான் என்னை எச்சரிக்கை செய்தியே...''

""எங்கம்மாவும் பலகாரம் கொடுத்து அனுப்பினாங்க...,இந்தா''

""ஹை....,மைசூர் பாகா? எனக்கு ரொம்ப பிடிக்கும்''

(ஒன்றை எடுத்து சாப்பிடுகிறாள்)

""ரொம்ப நல்லா இருக்கு ராமு...,''

(ராமு நிம்மதி அடைகிறான்)

-வீட்டுக்கு வந்து எல்லா ஆட்டம்பாமையும் எடுத்துக் கொண்டு போய் தோட்டத்தில் போட்டுவிட்டு அதன்மேல் தண்ணீரையும் ஊற்றுகிறான்-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.