வழிகாட்டி!
எளிய உதாரணங்கள் மூலம் விளங்க வைப்பதில் விஞ்ஞான ஆசிரியர் ஆனந்த ராஜ் வல்லவர்!
எளிய உதாரணங்கள் மூலம் விளங்க வைப்பதில் விஞ்ஞான ஆசிரியர் ஆனந்த ராஜ் வல்லவர்!
சில விஞ்ஞான ஃபார்முலாக்களை எளிதில் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது என மாணவர்களுக்கு உத்திகளைச் சொல்லித் தருவார்.
""வானவில்லின் ஏழு வண்ணங்களை வரிசைக் கிரமமாக எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்...?'' என்று கேட்டுவிட்டு, உடனே அவர் "ஊகநீபமஆசி' என்பார்.
மாணவர்கள் விழிக்க, அவர் சிரிப்பார்..! பின்னர், ""வண்ணங்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கிய சங்கேதம், ஊ...ஊதா, க...கருப்பு, நீ....நீலம், ப...பச்சை, ம.... மஞ்சள், ஆ....ஆரஞ்சு, சி....சிவப்பு, அதுவே ,"ஊகநீபம ஆசி' ஆங்கிலத்தில் vibgyor என்பதைப் போல!'' என்பார்!
குவி லென்ஸ், குழி லென்ஸ் இவை கிட்டப்பார்வை எட்டப் பார்வை பாடத்தில் வரும்.. அதை, எந்த ஆடி எதற்கு? என ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சொற்றொடரைச் சொல்வார்....."கிட்டக் குழி வெட்டி, மண்ணை எட்டக் குவி.'! அதாவது, அதன் விளக்கம்.....,கிட்டப் பார்வைக்கு குழி லென்ஸ் பொருத்தப் பட வேண்டும்.. எட்டப் பார்வைக்கு குவி லென்ஸ்.. எளிதில் மறக்காது.. விடை மாற வாய்ப்பில்லை..
ஒரு முறை நானோ செகண்ட் எனும் மிகச் சிறிய கால அளவீட்டை மாணவர்களுக்கு விளக்க ஒரு உத்தியைக் கையாண்டார்.
""மாணவர்களே ஒளியின் வேகம் 187000 மைல்கள் ஒரு வினாடிக்கு அல்லவா.. அதாவது ஓளி ஒரு நொடியில், மூன்று லட்சம் கி.மீ செல்லும்..! சூரியன் 15 கோடி கி.மீ தூரம் பூமியில் இருந்து உள்ளது.. சூரியனில் இருந்து புறப்படும் ஓளி பூமியை அடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும்.. இந்த நிலையில் ஒரு நானோ நொடியில் ஒளி என்னிடம் இருந்து முதல் வரிசை மாணவன் அமர்ந்திருக்கும் தூரம் செல்லும்..!'' என்றதும் நானோ நொடி எத்தனை சிறிய கால அளவை என மாணவர்கள் புரிந்து கொண்டனர்.
ஒருமுறை மாணவர்களிடம், ""மாணவர்களே நான் முதுகலை வேதியியல் பயின்ற போது எனக்கு வேதி வினை சமன் பாட்டில் ஆக்ஸிஜனேற்றம், ஹைடிரஜனேற்றம் இவை அடிக்கடி குழப்பும்.. அப்போது என் பேராசிரியர், leo the lion says ger என்பார் அதாவது, "லியோ எனும் சிங்கம் கெர் என கர்ஜித்தது' என்பதை நினைவில் கொண்டால் போதும்....,அதாவது, leo - loss of electron oxidation...., ger - gain of electron reduction என்பதைக் குறிக்கும்.. இதைப் பின்னாளில் மேற்படிப்பு செல்லும் போது நீங்கள் பொருள் புரிந்து கொள்வீர்கள்.
இப்படி எளிதில் மனனம் செய்யவும் ஒரு வழி சொன்னார். ""மாணவர்களே! நீங்கள் எல்லோரும் கதை கேட்க, படிக்க ஆசைப் படுவீர்கள் இல்லையா?'' என்றார்.
""ஆம்'' என்றனர் மாணவர்கள்.
உடனே அவர் கரும்பலகையில் சம்பந்தா சம்பந்தமில்லாத பத்துப் பெயர்களை எழுதினார்.
-நீலம், தொப்பி, படகு,புயல், ஊஞ்சல், சுறா, கலங்கரை விளக்கம்,மணல், சுண்டல்,கூடை.-
""இதை சில நிமிடங்கள் பார்த்து விட்டு உங்கள் நோட்டில் பார்க்காமல் அதே வரிசையில் எழுதுங்ககள் பார்ப்போம்!''
பலரால் நான்கு அல்லது ஐந்து மட்டுமே ஞாபகம் வைத்து எழுத முடிந்தது. அப்படியும் வரிசை மாறி இருந்தது.
ஆனந்தராஜ், ""இப்போது நான் சொல்லும் வழியில் இதை கதையாகப் படியுங்கள்.. அந்தக் கதையை நினைவில் கொள்ளுங்கள்..
கதையாக அந்தப் பெயர்களை இப்படிச் சொன்னார்.. ""நம்ம சந்தானம் நீலத் தொப்பி அணிந்து படகில் மீன் பிடிக்கப் போனார்.. புயல் அடிக்க, படகு ஊஞ்சல் ஆடியது! சுறா ஒன்று தாக்க, படகு கவிழ, நீந்தி வந்தார்.. பார்த்தால் கண்ணில் கலங்கரை விளக்கம்! கடற்கரை மணலில் சூடாக சுண்டல் விற்றார் ஒருவர் கூடையில்.''
இந்தக் கதையை நீங்கள் ஞாபகம் வைத்தபடி பொருட்களை வரிசையாக எழுதலாம்..
என்ன ஆச்சரியம்! எல்லா மாணவர்களாலும் பத்து பெயர்களையும் வரிசையாக விடுபடாது எழுத முடிந்தது!
ஒரு நாள் அவர் வகுப்பில், ""இது நினைவுப் பயிற்சிக்கு ஒரு வழி.. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல எண்களை ஞாபகம் வைத்துக் கொள்ள பிற்காலத்தில் நேரிடும். பிறந்த தேதி, ஊர்களின் பின் கோடுகள், முக்கிய செல் போன் எண்கள், பான் நம்பர், கணினி கடவுச் சொற்கள், மின் அஞ்சல் முகவரி, அதற்கான கடவுச் சொற்கள், ஏடி எம் அட்டைகளின் எண்கள்.. இப்படியாக.. நினைவு கொள்ள ஏராளமாக இருக்கும்....,
.....அவற்றை ஏதாவது ஒன்றுடன் சம்பந்தப் படுத்தி விட்டால் நம் மூளை அதை மறக்காது.... உதாரணமாக தாஜ் மகால் எப்போது கட்டப்பட்டது..? 1632 ஆம் ஆண்டு. 16 ஐ ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்..அதன் இரட்டிப்பு அடுத்து வரும் எண்கள் 32. 1632 சரியா..?
.....இது போல மொகலாய மன்னர்களின் வம்சாவளி வரிசையை எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள "BHAJSHA'....! அதாவது பாட்ஷாதான்! மறக்க மாட்டீர்கள் அல்லவா?... இது சற்று மாற்றமுள்ள பாட்ஷா! அதாவது பாபர், ஹுமாயூன், அக்பர், ஜெஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் பெயர் முதல் எழுத்துக்கள்! இதில் ஷாஜஹானுக்குமட்டும் நஏ என இரண்டு வரும்....''என்றார்!
""அட! ஆமாம்! உண்மைதான்!''என்றனர் மாணவர்கள்!
விஞ்ஞானப் பாடத்தில் மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியவர் ஆனந்த ராஜ்.
விஞ்ஞானப் பாடத்தைக் கண்டு பயந்து ஓடிய மாணவர்களும் சுவாரஸ்யமாகப் பயின்றனர். நல்ல மதிப்பெண்கள் பெற்றனர்.
ஆனந்தராஜ் இப்போது ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவரிடம் படித்த மாணவர்கள் காதிலும், மனதிலும் அவர் சொன்ன உதாரணங்களும் எடுத்துக்காட்டுக்களும் பசுமரத்தாணியாகப் பதிந்து எப்போதும் ஒலிக்கும்.
அவர் உதாரணங்களும் மறக்கவில்லை.. அவரையும் மாணவர்கள் மறக்கவில்லை..!