முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: நான் யார்?

கண்ணால் காண முடியாது! கையால் பிடிக்க முடியாது!

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

கண்ணால் காண முடியாது!

கையால் பிடிக்க முடியாது!

வண்ணம் வடிவம் கிடையாது!

வருவதும் போவதும் தெரியாது!

உணர்ந்து பார்க்க முடியுமன்றி

உருவைப் பார்க்க முடியாது!

எங்கும் நிறைந்து இருப்பதனால்

இறைவனும் நானும் ஒன்றாவோம்!

பூதம் ஐந்தில் ஒன்றாவேன்!

புல்லாங்குழலில் இசையாவேன்!

நாதஸ்வரத்தில் பாட்டாவேன்!

நாட்டைக் காக்கும் பொருளாவேன்!

திசைகள் எட்டிலும் என் பிறப்பு!

செய்திடும் செயலோ மிகச் சிறப்பு!

அசையும் மரங்கள் செடிகொடிகள்!

அன்புடன் விடுக்கும் எனக்கழைப்பு!

களத்தில் நெல்லைத் தூற்றுதற்கு

கருத்தாய் வந்து உதவிடுவேன்!

நாசியின் வழியே உட்சென்று

உயிர்களை நானே  இயக்குகின்றேன்!

தென்றல் என்றும் புயல் என்றும்

செயலுக்கு ஏற்ப பெயர் பெறுவேன்!

என்னை யாரெனத் தெரிகிறதா?

என்பேர் காற்றெனப் புரிகிறதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.