முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: தாமத ராஜா!

யூனிஃபாரம் அவசரமா தேவைன்னு சொல்லி பெட்டி போடக் கொடுத்திருந்தேன்..., எட்டு மணிக்கு வரச்சொன்னாரு...நான் எட்டேகாலுக்குப் போனேன்...,கடை மூடியிருக்கு... இப்ப என்ன செய்யறது? நாளைக்கு யூனிஃபாரம் போடாமப் போனா கிளாஸ்ல உள்ள விடமாட்டாங்க...

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:32 PM
பகிர்:

காட்சி-1

இடம்-மோகன் வீடு

மாந்தர்-மோகன், அப்பா சிவமணி.

மோகன்: (சோர்வுடன் வருகிறான்)...யூனிஃபாரம் அவசரமா தேவைன்னு சொல்லி பெட்டி போடக் கொடுத்திருந்தேன்..., எட்டு மணிக்கு வரச்சொன்னாரு...நான் எட்டேகாலுக்குப் போனேன்...,கடை மூடியிருக்கு... இப்ப என்ன செய்யறது? நாளைக்கு யூனிஃபாரம் போடாமப் போனா கிளாஸ்ல உள்ள விடமாட்டாங்க...

சிவமணி: நீ ஏன் தாமதமாப் போனே? அது தப்புதானே....,மடிக்கணினியிலே விளையாடிக்கிட்டு இருந்தே....அதுலே விளையாட ஆரம்பிச்சா உனக்கு நேரம் போறதே தெரிய மாட்டேங்குது..., ம்...ஒரு வழி இருக்கு..., பெட்டி போடறவர் மூணாவது தெருவில்தான் இருக்கார்...உடனே போ! கெஞ்சிக் கூத்தாடிக் கடையைத் திறந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லு!

காட்சி-2

இடம்-மோகன் வீடு

மாந்தர்-மோகன், செல்வி, இரு நண்பர்கள்.

(நண்பர்கள் மோகன் வீட்டு வாசலில்)

நண்பர்கள் இருவரும்: தாமத ராஜா! தாமத ராஜா!

செல்வி: அப்படி யாரும் இங்கே இல்லே....நீங்க யாரு?

நண்பன்1: நாங்க "தாமத ராஜா'வோட நண்பர்கள்!

நண்பன்2: அதோ வரான்டா, நம்ம தாமத ராஜா! அக்கா! மோகனைத்தான் நாங்க அப்படிக் கூப்பிட்டோம்!

நண்பன்1: வாப்பா! தாமத ராஜா! கிரிக்கெட் விளையாடப் போகலாமா?

மோகன்: டேய்! என்னை ஏன்டா அப்படிக் கூப்பிட்டீங்க?

நண்பன்2: பின்னே என்னடா? "கிரிக்கெட் கிளப்' ஆரம்பிச்சதிலேர்ந்து ஒரு நாளாவது நேரப்படி கிரவுண்டுக்கு வந்திருக்கியா?

நண்பன்1: நேத்து "இண்டர் ஸ்கூல் மாட்ச்'சுக்குத் தேர்வு நடத்தினாங்க...மூணு மணிக்கு வரச்சொன்னா நீ மூணரை மணிக்கு வந்தே...அதனால நீ செலக்ட் ஆகலே...

நண்பன்2: ஆமாம்... நீ நல்லா விளையாடற ஆளு....,ஆனா தாமதமா வந்ததால நல்ல வாய்ப்பை இழந்துட்டே...

நண்பன்1: சரி, சரி சீக்கிரம் வா! மைதானத்துலே எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க!

காட்சி-3

இடம்-மோகன் வீடு

மாந்தர்-மோகன், செல்வி, சிவமணி.

செல்வி: என்னடா இது? திடீர்னு சாக்லெட் பெட்டியை நீட்டறே?

மோகன்: ஐயாவுக்கு கட்டுரைப் போட்டியிலே முதல் பரிசு! எங்க பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்காக நடத்தினாங்க...!

செல்வி: தலைப்பு?

மோகன்: "நேரப்படி வினை செய்!'

சிவமணி: உனக்கு சம்பந்தமில்லாத தலைப்பாயிருக்கே இது!

செல்வி: உண்மையைச் சொல்லு! இந்தக் கட்டுரையை நீயேவா எழுதினே?

மோகன்: நானேதான் எழுதினேன். ஆனால் ஒருத்தர் எழுதிக் கொடுத்தாரு...,அதை மனப்பாடம் செய்து எழுதினேன்.

செல்வி: யார் எழுதிக் கொடுத்தாங்க...

மோகன்: யாரோ கொடுத்தாங்க....எனக்கு மூவாயிரம் ரூபா  கிடைச்சிருக்கு! சந்தோஷப்படு!

காட்சி-4

இடம்-பள்ளிக்கூடம்.

மாந்தர்-மோகன், தலைமை ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி.

தலைமை ஆசிரியர்: மாணவர்களே! இவ்விழாவின் அடுத்த நிகழ்ச்சி பரிசளிப்பு! விழாத்தலைவர், சுபாஷ் ஐ.பி.எஸ், அவர்கள் காவல் துறையில் பல்லாண்டு பணியாற்றி பல பதக்கங்களைப் பெற்றவர்! அவர்களை சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

சுபாஷ்: மாணவர்களே! இவ்விழாவில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி! பேச நிறைய கருத்துகள் உள்ளன. ஆனால் தற்பொழுது வானம் கறுத்து வருகிறது. நல்ல மழை வரும்போல் இருக்கிறது. எனவே பரிசளிப்பை முடித்து விட்டுப் பின் பேசுகிறேன். "நேரப்படி வினை செய்'...நல்ல கட்டுரைத் தலைப்பு! நானே நடுவராக இருந்து மூன்று கட்டுரைகளைத் தேர்வு செய்துள்ளேன்! முதல் பரிசிற்கான கட்டுரையில், அச்சிறுவன் எழுதிய சிறு கவிதை அருமை! அதை படிக்கின்றேன் கேளுங்கள்....

""கோலப் பரிதி காலப்படி கிழக்கே உதிக்கக் காணீர்!

மாலை முடிந்து நிலவும் வானில் நேரப்படியே வருமே!

காலப்படியே நாமும் இங்கே கடுகி வினைகள் செய்தால்

ஞாலம் போற்றும் படியே உலகில் களித்து வாழ்வோம் அறிவீர்!''

(கை தட்டல்) இக்கட்டுரை எழுதிய சிறுவன் மோகனை மேடைக்கு அழைக்கின்றேன்....மோகன்! மோகன்!

தலைமை ஆசிரியர்: மோகன் இன்னும் வரவில்லை ஐயா! எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பியுள்ளோம்! மற்ற இருவர் வந்து விட்டனர்.

சுபாஷ்: பரிசு பெற்ற செய்தியினை எப்பொழுது அனுப்பினீர்கள்?

தலைமை ஆசிரியர்: இரு தினங்களுக்கு

முன்!....

சுபாஷ்: சரி, மோகன் வந்தபிறகு பரிசளிப்பை வைத்துக் கொள்கிறேன். மாணவர்களே, காலப்படி வினையாற்றல் என்பது ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பழக்கம். பல நிகழ்ச்சிகள் காலப்படி துவங்கி, காலப்படி முடிவதில்லை. காரணம், பங்கேற்பாளர்கள் காலத்திற்கு மதிப்பு தருவதில்லை. இது மிகத் தவறு! கண்டிக்கத்தக்கது!

மகாத்மா காந்தி ஒரு விழாவிற்கு தாமதமாகப் போக நேரிட்டது! இது குறித்து அவர், ""விழாவிற்கு வந்து காத்திருந்த அனைவரின் நேரத்தை நான் திருடிவிட்ட குற்ற உணர்வோடு நிற்கிறேன். மன்னிக்கவும்!''என்றார். இங்கே காந்தியின் பெயர் கொண்ட மோகன் இன்னும் வரவில்லை என்பது....

தலைமை ஆசிரியர்: ஐயா, அதோ மோகன் வந்துவிட்டான்!

சுபாஷ்: மோகன்! இங்கே வா! ஏன் தாமதம்? விழா துவங்கி அரைமணிக்கு மேல் ஆகிவிட்டது!

மோகன்: சரியான நேரத்தில் துவங்காது என்று நினைத்தேன். கணினி விளையாட்டில் இருந்தேன். நண்பர்களும்,....."இந்தியன் பன்ச்சுவாலிடி'தானே...,மெதுவாகப் போகலாம்....என்றார்கள்...., மன்னிக்கவேண்டும்!

சுபாஷ்: இப்படி நினைப்பதும், பேசுவதும் இமாலயத் தவறு! ஒரு எதிர்மறைப் பழக்கத்தைப் பழக்கிவிட்டு, அதை "இந்தியப் பழக்கம்' என்று சொல்வது நம் நாட்டிற்கே இழுக்கு! கட்டுரையின் தலைப்பே, "நேரப்படி வினை செய்!' இதில் உனக்கு முதல் பரிசு! ஆனால் நீயோ இப்படித் தாமதமாக வருகிறாய்!

மோகன்: மன்னிக்கவேண்டும்!

சுபாஷ்: இல்லை! உன்னைப் போன்றோர் திருந்த வேண்டும். இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய சதீஷும், ரமணியும் விழா துவங்குவதற்கு முன்பே வந்துவிட்டார்கள்! ஆகையால் நேரப்படி வந்துள்ள சதீஷிற்கே இந்த முதல் பரிசு மூவாயிரத்தை வழங்குகிறேன்! சதீஷ், வா! (கை தட்டல்) அடுத்ததாக மூன்றாம் பரிசு பெற வேண்டிய ரமணிக்கு இந்த இரண்டாம் பரிசு இரண்டாயிரத்தை வழங்குகிறேன். (கை தட்டல்) காலத்தை மதியாமல், போட்டியின் பொருளுக்கு ஏற்ப நீ நடவாததால் இந்த மூன்றாம் பரிசு ஆயிரத்தை நீ பெறுகிறாய்! உன்னைத் திருத்தவே இப்படிச் செய்கிறேன்! மற்றவர்களுக்கும் இது ஒரு பாடம்! தவறாக நினைக்காதே!

மோகன்: நன்றி ஐயா! இனிமேல் நான் காலந்தவறாமல் நடந்து கொள்வேன்.

(மழை தூறலாய்த் துவங்க, கூட்டம் கலைகிறது)

திரை

முழு கட்டுரையைப் படிக்க →