அரங்கம்: தேடாதே!
தொலைஞ்சு போச்சுப்பா! நேத்து பால்கனியிலேதான் உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருந்தேன். எழுதி முடிச்சப்புறம் பால்கனி சுவர் மேலேதான் வெச்சேன்.
காட்சி-1
இடம்-குமார் வீடு
மாந்தர்-குமார், அப்பா
குமார்: பேனா வாங்க காசு வேண்ம்பா!
அப்பா: என்னது, பேனாவா? ஒரு வாரம் முன்னாலதானே வாங்கினே?
குமார்: தொலைஞ்சு போச்சுப்பா! நேத்து பால்கனியிலேதான் உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருந்தேன். எழுதி முடிச்சப்புறம் பால்கனி சுவர் மேலேதான் வெச்சேன்.
அப்பா: அதான் பேனா வெக்கற இடமா? நல்லா தேடிப்பாத்தியா?
குமார்: பாத்தாச்சு! கிடைக்கலே..., பத்து ரூபாதானேப்பா! கொடுங்கப்பா!
அப்பா: ஓ!....,பத்து ரூபா பொருள்னா அலட்சியமா உனக்கு? இப்படிப் பேசறதை நிறுத்திககோ...,இல்லேன்னா பெரியவனானதும் இதே நினைப்பில் பணத்தைக் கரைச்சுக்கிட்டு இருப்பே! இந்தா பத்து ரூபாய்! இனிமேயாவது ஜாக்கிரதையா இரு!
காட்சி-2
இடம்-குமார் வீடு
மாந்தர்-குமார், மீனா, அம்மா.
குமார்: அம்மா! பத்து ரூபா குடும்மா! பேனா வாங்கணும்!
அம்மா: என்னது பேனாவா? வாங்கின பேனா என்னாச்சு?
மீனா: நான் சொல்றேன்மா! அந்தப் பேனாவையும் எங்கேயோ தொலைச்சுட்டான்!
குமார்: நான் ஒண்ணும் தொலைக்கலை. நேத்து நம்ம வீட்டு மாமர நிழல்லே உட்கார்ந்து எழுதிக்கிட்டுருந்தேன். எழுதி முடிச்சதும் அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன். இன்னிக்குப் போய்ப்பாத்தா கிடைக்கலே.
மீனா: எப்படிக் கிடைக்கும்? தோட்டத்தை வேலைக்காரம்மா பெருக்கும்போது குப்பையோட குப்பையா அள்ளிப் போட்டிருப்பாங்க.
அம்மா: எந்தெந்தப் பொருளை எங்கெங்கே வெக்கணுமோ அங்கங்கே வெக்கணும்.
குமார்: சரிம்மா...,பத்து ரூபாதானே குடும்மா ப்ளீஸ்...!
காட்சி-3
இடம்-குமார் வீடு
மாந்தர்-குமார், மீனா, அம்மா
(மீனா தெருவில் தன் சைக்கிளுடன் குமாருக்காகக் காத்திருக்கிறாள். குமார் சைக்கிளும் அருகில் இருக்கிறது)
அம்மா: கிளம்புடா சீக்கிரம்! கீழே மீனா காத்திக்கிட்டிருக்கா...,என்னடா...,என்ன தேடறே?
மீனா:(மேலே வந்து) என்னடா...? என்ன தேடிக்கிட்டிருக்கே?
அம்மா: இவனைக் கிளப்ப நீ எதுக்கு இப்போ படிக்கட்டு ஏறி வந்தே?....,கிளம்புடா சீக்கிரம்...
குமார்: இரும்மா...,சைக்கிள் சாவியைக் காணோம்.
அம்மா: சாவி மாட்டற ஸ்டேண்டுலே பாத்தியா?
குமார்: பாத்தேன்.....காணோம்....,ஆனா நான் சாவியை அங்கே வெக்கலே...,பாண்ட் பாக்கெட்டுலேதான் வெச்சிருந்தேன்.
மீனா: அம்மா...,நீ அதை சலவைக்குப் போட்டே இல்லே?...அடடா...! சலவைக்காரர் அடுத்தவாரம்தான் வருவாரு!
குமார்: போம்மா! சைக்கிள் இல்லாம இப்போ நான் எப்பிடி ஸ்கூலுக்கு போறது?
மீனா: என் சைக்கிள்ளியே வா! உன்னால டீச்சர்கிட்டே திட்டு வாங்கப் போறோம்!
காட்சி-4
இடம்-குமார் வீடு
மாந்தர்-குமார், மீனா, அம்மா.
மீனா: இவனால கிளாஸ் டீச்சர் கிட்டே நல்ல திட்டு! நாங்க உள்ளே போறப்போ மணி அடிச்சு எட்டு நிமிஷம் ஆயிடுச்சி!
அம்மா: குமார்! நீ ஏன் இப்பிடி இருக்கே? அடிக்கடி எதையாவது தொலைச்சிட்டு வந்து நிக்கறே..., மாறவே மாட்டியா?
மீனா: அப்படித்தான்மா ஒரு நாள் "ஸ்கூல் பேட்ஜை' படுக்கையில் கழட்டிப் போட்டிருக்கான். அது போர்வைக்குள்ள மறைஞ்சுடுச்சு. அதை ரொம்ப நேரம் தேடித் தேடிக் கண்டுபிடிச்சேன்...,இதேமாதிரி அன்னிக்கும் ஸ்கூலுக்கு லேட்...,ரெண்டு பேரும் ஃபைன் கட்டினோம்!
காட்சி-5
இடம்-குமார் வீடு.
காலம்-இரவு சுமார் 7மணி.
மாந்தர்-குமார், மீனா, அம்மா, அப்பா.
அப்பா: குமார் சாப்பிட வரலையா? என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
மீனா: வராந்தாவிலே எதிர் வீட்டு நாய்க்குட்டி கிட்டே பந்தை காட்டிக்காட்டி விளையாடிக்கிட்டு இருக்கான்.
அப்பா: சரி, அவன் வரப்போ வரட்டும்! நாம சாப்பிட ஆரம்பிக்கலாம்.
மீனா: டேய் குமார்! இன்னிக்கு உருளைக் கிழங்கு சிப்ஸ்! நீ வரலேன்னா உன் பங்கு சிப்ûஸ நாங்களே ஒரு கை பாத்துடுவோம்.
குமார்: இதோ வரேன்!
அம்மா: அப்படியே சாப்பிட உட்கார்ந்துடாதே. கையை நல்லாக் கழுவிக்கோ...
(மின் விளக்குகள் அணைய)
மீனா: அச்சச்சோ...! சாப்பிடுற நேரத்திலே கரெண்ட் போயிடுச்சு!
குமார்: கொஞ்சம் இருங்க..., நான் கீழே போய் "த்ரீ பேஸ்' ஸ்விட்ச்சை மாத்திட்டு வந்துடறேன்.
அம்மா: ஸ்விட்ச் போர்டுல பாத்து கை வைடா! இருட்டா இருக்கு....
மீனா: சிப்ஸ் எங்கேம்மா....
அம்மா: கொஞ்சம் பொறு...விளக்கு வரட்டும்!
குமார்: அய்யோ...! அம்மா...! அப்பா.... ஹா!
(மின் விளக்குகள் எரிகின்றன...மீனா ஓடுகிறாள்)
அம்மா: (கீழே இறங்கிக் கொண்டே) என்னடா குமார்....,எங்கேடா இருக்கே....,என்ன ஆச்சு உனக்கு?
மீனா: கீழ்ப் படிக்கட்டுலே ஸ்விட்சி போர்டு பக்கமா விழுந்து கிடக்கான்மா...,வாங்க...பாக்கலாம்!
அம்மா: ஏங்க, உடனே டாக்டருக்குப் போன் பண்ணுங்க...
அப்பா: டேய் குமார்! என்னடா ஆச்சு? "ஷாக்' அடிச்சுதா?
குமார்: இல்லே, நான் அதைத் தொடறதுக்கு முன்னாலயே படிக்கட்டிலேர்ந்து உருண்டு கீழே விழுந்துட்டேன்.....ஹாங்....வலிக்குதுப்பா!...அந்தப் பந்துதாம்பா காரணம்...!
மீனா: நாய்கிட்டே காட்டி விளையாடிக்கிட்டு இருந்தியே அந்த பந்தா?
குமார்: ஆமாம்...,விளையாடி முடிச்சப்புறம் பந்தை படிக்கட்டு மேலே தூக்கிப் போட்டேன்...,அது மேல் படிக்கட்டு மேலே ஒரு மூலையிலே ஒதுங்கி நின்னிருக்கு...அதைக் கவனிக்காம அதுமேலே காலை வெச்சுட்டேன்.......ம்ம்ம்மா....வலிக்குது!
அம்மா: சரி, மெதுவா மேலே வா!
அப்பா: டாக்டருக்குப் போன் பண்ணிட்டேன்! வந்திக்கிட்டு இருக்காரு! இப்பவாவது நல்லா யோசிச்சுப் பாரு...இதுக்கெல்லாம் காரணம் நாங்க சொல்றபடி நீ நடந்துக்கறதில்லே...
அம்மா: ஆமாம்...,எந்தப் பொருளை எடுத்தாலும் உபயோகிச்சுட்டு அதுக்குன்னு இருக்கிற இடத்துலே வைக்கப் பழகியிருந்தா இப்படி நடந்திருக்காது.
மீனா: நினைச்சுப்பாரு. பேனாவையும், பேட்ஜையும் மறக்காம உன் புத்தக அலமாரியிலேயே வைக்கப் பழகியிருந்தா, டீச்சர்கிட்டே "பைன்' கட்டியிருக்க மாட்டோம் இல்லியா?
குமார்: உண்மைதான்!
அம்மா: சைக்கிள் சாவியைப் பொறுமையா சாவி ஸ்டேண்டுலேயே மாட்டப் பழகியிருந்தா, ஸ்கூலுக்கு லேட் ஆகியிருக்காது....சாவி தொலைஞ்சும் இருக்காது இல்லியா?
குமார்: ஆமாம்...! இப்போ கூட இந்தப் பந்தை விளையாடி முடிச்சப்புறம் உடனே அந்த சின்னப் பெட்டிக்குள்ள வெச்சிருந்தா பந்து மேல காலை வெச்சிருக்கமாட்டேன்! இப்படி அடியும் பட்டிருக்காது....ம்ம்மாடி....
அப்பா: குமார், எந்தப் பொருளையும் உபயோகிச்சப்புறம் திருப்பி அதோட இடத்துலே வைக்கிறப் பழக்கம் நல்ல பழக்கம்! தெரிஞ்சுக்கோ! அவசரத்துல தேடி பதட்டம் அடைய வேண்டாம்! நேரம் வீணாகாது! பொருளும் பறிபோகாது!
குமார்: ஆமாம்ப்பா!.....நல்லா புரிஞ்சுண்டேன்...!
மீனா, அப்பா: ஹப்ப்பா! இப்பவாவது நல்லா புரிஞ்சிகிட்டியே......டாக்டர் வந்துட்டாரு......
........,வாங்க டாக்டர்!
குமார்: அக்கா ப்ளீஸ்..., பந்தை ப்ரவுன் கலர் சின்னப் பெட்டியிலேயே திருப்பி வெச்சுடுக்கா...
(அனைவர் முகத்திலும் புன்னகை....டாக்டர் வைத்தியம் பார்க்கிறார்.)
திரை