முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: காலைப் பொழுது!

காலைக் கதிரவன் முகம்பார்க்க தாமரைப் பூக்கள் காத்திருக்கும்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

காலைக் கதிரவன் முகம்பார்க்க

தாமரைப் பூக்கள் காத்திருக்கும்!

சோலைப் பூக்களில் வந்தமர்ந்து

சுகமாய் வண்டுகள் தேன்குடிக்கும்!

சாலை யோர மரங்களிலே

சேர்ந்திடும் பறவைக் கூட்டங்கள்

ஆலோலம் இசைப்பதைக் கேட்பதற்கு

ஆயிரம் காதுகள் போதாது!

கடலின் அலைகள் தாலாட்டும்

களிப்புடன் நண்டுகள் விளையாடும்!

படகுகள் எல்லாம் மீன்பிடிக்க

படை வீரர்கள்போல அணிவகுக்கும்!

பாலைக் குடிக்கக் கன்றுகளைப்

பாசமாய் அழைத்திடும் தாய்ப்பசுக்கள்!

வாலை ஆட்டியே கன்றுகளும்

வந்திடும் துள்ளிக் குதித்தோடி!

தயிரைக் கடையும் கைகளிலே

தாளம் போடும் வளையல்கள்!

வயிற்றுப் பசியைப் போக்குதற்கு

வயலை உழுதிடும் ஏர்க்கலப்பை!

பனித்துளி நனைந்த புல்நுனிகள்

பச்சிளம் வெயிலில் தலைதுவட்டும்!

இனிய தமிழில் பாட்டிசைத்து

இறைவனை எழுப்பும் கோயில்கள்!

அரும்புகள் மெல்ல மொட்டவிழும்

கரும்புகள் காற்றில் சலசலக்கும்!

கருங்குயில் கூவி வரவேற்கும்

காலைப் பொழுதின் அற்புதம்பார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.