சிறுவர்மணி

குப்பையில் கிடைத்த மருமகள்!

ஓர் ஊரில் ஒரு விவசாயி. அவருக்குச் சொந்தமாக ஒரு தரிசு நிலம் இருந்தது. நல்ல உழைப்பாளியான

DIN

ஓர் ஊரில் ஒரு விவசாயி. அவருக்குச் சொந்தமாக ஒரு தரிசு நிலம் இருந்தது. நல்ல உழைப்பாளியான மனைவியும் இருந்தாள். விவசாயியும், அவரது மனைவியும் நன்றாகப் பாடுபட்டு அந்தத் தரிசு நிலத்தை நல்ல பழத்தோட்டமாக ஆக்கிவிட்டனர். பழத்தோட்டம் விவசாயிக்கு நல்ல பலனைத் தந்தது. அவ்வளவு செழிப்பு! விவசாயி நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்.
 சிறிது காலத்தில் அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். விவசாயிக்கு திருமண வயதில் ஒரு மகன் இருந்தான். அவனுக்கு சீக்கிரம் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று விவசாயி விரும்பினார். 
 தன் மருமகள் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தன் பழத்தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாள்  என்று நினைத்தார் விவசாயி. 
அவர் ஊரில் அப்படிப்பட்ட பெண் கிடைக்கவில்லை. அவர் கவலையோடு இருந்தார்.
 அவரைப் பார்க்க ஒருநாள் ஒரு பழவியாபாரி வந்தார். பழவியாபாரியிடம் தன் கவலையைச் சொன்னார் விவசாயி. 
 பழ வியாபாரி, "எப்படிப்பட்ட மருமகள் உங்களுக்கு வேண்டும்?''என்று கேட்டார்.
"பெண் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும்...அப்போதுதான் தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாள்..இந்த ஊரில் அம்மாதிரி பெண் கிடைக்கவில்லை'' 
 "நீங்கள் ஏன் பக்கத்து ஊரில் முயற்சி செய்யக் கூடாது?'' என்று கூறி விட்டு விவசாயியின் காதில் ஏதோ ரகசியம் சொன்னார் பழவியாபாரி. 
 விவசாயியின் முகம் மலர்ந்தது!
 மறுநாள் காலை...விவசாயி தன் வண்டியைப் பூட்டினார். வண்டி நிறைய கூடை கூடையாகக் கொய்யாப்பழங்களை ஏற்றினார். பக்கத்துக் கிராமத்துக்குப் போனார். ஊரின் நடுவில் இருந்த ஒரு தெருவில் வண்டியை நிறுத்தினார். 
 "பெண்களே வாங்க...,வாங்க...! சின்னஞ்சிறு பெண்களே! குப்பை கொண்டு வாங்க....,கொய்யாப் பழம் தாரேன்'' என்று கூவினார். எல்லாப் பெண்களுக்கும் ஒரே ஆச்சரியம்! 
 "கொய்யாப்பழம்...! கொய்யாப்பழம்! குப்பைக்குப் பதிலா கொய்யாப் பழம்!''என்று கூவினார் மறுபடியும்!
 "குப்பைக்குப் பதிலா கொய்யாப்பழமா? இது என்னா விநோதம்! இந்த ஆள் என்ன கிறுக்கனா?'' என்று பேசிக்கொண்டே போட்டி போட்டுக் கொண்டு விரைந்தார்கள். தங்கள் வீடுகளைக் கூட்டிப் பெருக்கினார்கள். வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தைப் பெருக்கினார்கள். சாக்கு சாக்காக குப்பையை அள்ளிக் கொண்டு வந்தார்கள். கூடை கூடையாக கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு போனார்கள். 
 வண்டியில் குப்பைகள் குவிந்தன! பழங்கள் குறைந்தன! விவசாயிக்கு ஒரே கவலை! தான் வந்த வேலை நடக்குமோ நடக்காதோ என்று நினைத்தார்.
 அப்போது ஓர் இளம் பெண் வந்தாள்! அவள் வருத்தமான முகத்துடன் காணப்பட்டாள். விவசாயியின் அருகே வந்தாள். அவள் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. அவளைப் பார்த்து விவசாயி, "ஏன் அம்மா வருத்தமாக இருக்கிறாய்?'' என்று கேட்டார். 
 வருத்தமான தோற்றத்துடன் அந்தப் பெண், "ஐயா! என் வீட்டில் குப்பையே இல்லை! தினசரி வீட்டைக் கூட்டிவிடுவேன்...ஒட்டடை அடித்து விடுவேன். வேலை பார்க்க சளைக்க மாட்டேன். தேடித் தேடிப் பார்த்தேன். வீட்டில் ஒரு இடத்தில் கூட குப்பையே இல்லை. வீடு சுத்தமாக இருக்கிறது. நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். எனக்காக என் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொஞ்சம் குப்பையைக் கொடுத்தார்கள். ஐயா! இதை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு கொய்யாப் பழமாவது கொடுங்கள்...'' என்று கேட்டாள். 
 விவசாயி வண்டியிலிருந்து குதித்தார்! கை தட்டினார்! மகிழ்ச்சி அடைந்தார்! "கொய்யாப்பழத் தோட்டமே உனக்குத்தான்!'' என்று சொன்னார் விவசாயி! அவளுக்கு ஒன்றும் புரியவில்லை! விழித்தாள். விவசாயி அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லி, அந்த சுறுசுறுப்பான உழைப்பாளிப் பெண்ணையே தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்! கடவுளுக்கும், நல்ல யோசனையைக் கூறிய பழவியாபாரிக்கும் நன்றி கூறினார். 
மகனுக்கும் மகிழ்ச்சி! அவனும் அவளும் தோட்டத்தில் இப்போது பாடு படுகிறார்கள்! 
ஒரு நாள் மருமகள் விவசாயியிடம், "நீங்கள் பெரிய சாமர்த்திய சாலி'' என்றாள். 
 "எப்படி?'' என்றார் விவசாயி.
 "ஒரு கொய்யாப்பழ வண்டியால் எங்க ஊரே சுத்தமாயிடுச்சு. உங்களுக்கு மருமகளையும் தேடிக்கிட்டீங்க'' என்றாள் கிண்டலுடன்!
விவசாயி சந்தோஷமாகச் சிரித்தார்!

-விஜயலட்சுமி கங்காதரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

இல. கணேசன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி! | ADMK | EPS

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு! 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை!

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

SCROLL FOR NEXT