முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: வியர்வை

களத்து மேட்டில் அறுத்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டி தூக்கி ஒரு பாறாங்கல்லில் போர் அடித்துக் கொண்டிருக்கிறான் சின்னையா..

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

காட்சி - 1

இடம் - அறுவடை முடிந்த வயல் வெளி, 
களத்து மேடு, மாந்தர் - மன்னர் ராஜசிம்மர், அமைச்சர், 
அரண்மனை வைத்தியர், முனிவர், மகாராணி, விவசாயி சின்னையா

(களத்து மேட்டில் அறுத்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டி தூக்கி ஒரு பாறாங்கல்லில் போர் அடித்துக் கொண்டிருக்கிறான் சின்னையா.. அவன் மனைவி விளக்கு மாற்றால் கூட்டித் தானியங்களைச் சேகரிக்கிறாள்.. மன்னரைப் பார்த்ததும் நிறுத்தி விட்டு ராஜசிம்மரின் முன்னால் வந்து கை கட்டி வாய் பொத்தி நிற்கிறான் முண்டாசுத் துண்டைத் தன் கை கக்கத்தில் வைத்த படி. மன்னரின் பின்னால் அமைச்சர்)

அமைச்சர்: என்னப்பா சின்னையா.. மகசூல் எப்படி..? 
சின்னையன்: ஐயா,... பருவத்தில் மழை பெய்து, ஆற்றில் நீர் வந்து, நாங்க நட்டதால் நல்ல கண்டு முதலுங்க. காணி நிலத்துக்கு எண்பது மூட்டை வருமுங்க..
அமைச்சர்: பலே! போய் வேலையைப் பார்..
மன்னர்: (அமைச்சரிடம்) அந்த விவசாயியின் உழைப்பு கடினமானது. வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுதே! வியர்வை துர் நாற்றம் தான் அவன் மேல் வீசியது சகிக்கவில்லை..
அமைச்சர்: மன்னா!.... கடின வேலை செய்யும் போது மனித உடல் சூடு அடையும். குளிர்விக்க வியர்வை சுரப்பது இயற்கை. வியர்வையில் உடலில் இருந்து அசுத்தம் வெளியேறுவதாக வைத்திய சாத்திரம் சொல்கிறது. அதனால் தான் இந்த துர்வாசம்.... வியர்த்தால் தோலில் உள்ள துவாரங்கள் திறந்து உடல் தோல் மூலம் சுவாசித்து இரத்தம் புத்துணர்வு அடையுமாம்.....வியர்வை சிந்த உழைப்பவர்களுக்கு தோல் நோய் கிட்டவே வராதாம்!
ராஜசிம்மர்: பாருங்கள்!.. என் உடலில் வியர்வை வரவே வராது.. அதனால் எந்த துர்வாடையும் வீசாது. நான் வாசனை திரவியங்கள் கூடத் தெளித்துக் கொள்வதில்லை. மகாராணிக்குத்தான் அந்த புட்டிகள் எல்லாம்!


காட்சி -2

இடம் - அரண்மனை
மாந்தர் - மன்னர், அரண்மனை 
வைத்தியர், அமைச்சர், பணியாட்கள், 

(ஓரு மாதம் கழித்து மன்னருக்கு ஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. எது சாப்பிட்டாலும் செரிக்கவில்லை. உடலில் அரிப்பு வேறு. மன்னர் படுக்கையில்...)

அரண்மனை வைத்தியர்:(பரிசோதித்து விட்டு) அமைச்சரிடம்:- நான் தந்த தைலங்களைப் பூசிக்கொள்ளச் சொன்னேனே.. சீரணத்திற்குச் சில சூரணங்கள் தந்தேனே.. வென்னீரில் குழைத்துச் சாப்பிட வேண்டும் என. காலை மாலை..செய்தீர்களா?
அமைச்சர்: நீங்கள் சொன்னபடி அப்படியேதான் செய்தோம் வைத்தியரே! 

(பணியாட்கள் நூற்றுக் கணக்கில் காலி சூரணம், தைலக் குடுவைகளைக் காட்ட,.)

அமைச்சர் : மன்னருக்குத் துளியும் குணமாகவில்லை. மிகவும் சிரமப்படுகிறார்..பார்க்கப் போனால் மருந்து உட்கொண்ட பிறகு தான் வேதனை அதிகமாக உள்ளதாம்!
வைத்தியர்: (மெதுவாக), அமைச்சரிடம்,: மன்னருக்கு உடலில் வியர்த்தால் எல்லாம் சரியாகி விடும். உடல் பருமன் வேறே. நெய்யால் செய்த இனிப்புகளை அதிகம் உண்டதால் மந்தித்துப் போய் இருக் கிறது குடல். ஒரே வைத்தியம் சொட்டச் சொட்ட வியர்க்கணும். ( சீடன் பெட்டியைத் தூக்கியபடி செல்ல வைத்தியர் பின்னால் போகிறார்.)


காட்சி -3

இடம் - முனிவரின் ஆசிரமம்
மாந்தர் - அமைச்சர், முனிவர், 

அமைச்சர் :வணங்குகிறேன் குல குருவே..மன்னர் மிகவும் சிரமப்படுகிறார். உடல் பருமன் செரிமானக் கோளாறால் அவதிப் படுகிறார். வைத்தியரின் சூரணம், லேகியம், தைலம், குளிகம் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தாங்கள் தான் இதற்கு நல்ல வழி சொல்ல வேண்டும், 

(நடந்த வற்றை விளக்குகிறார் முனிவரிடம்)

குலகுரு முனிவர்: (ஒருகணம் யோசிக்கிறார்) சரி.. அமைச்சரே நான் சொல்லும் படி மன்னரைச் செய்யச் சொல்லுங்கள்! (அமைச்சரிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார்)

(அமைச்சர் முனிவர் யோசனையைக் கேட்டுக் கொண்டு அரண்மனை விரைகிறார்)


காட்சி 4

இடம் : அரண்மனை, அருகில் கோவில் நந்தவனம்
மாந்தர் - மன்னர், அமைச்சர்

அமைச்சர்: மன்னா தங்கள் உடல் நிலை குறித்து நமது குல குரு முனிவரிடம் கேட்டேன்.. தினசரி கோவில் நந்தவனத்தில் உள்ள துளசிச் செடி, நந்தியாவட்டை,முல்லை, மல்லிகை,சாமந்தி, செவ்வந்தி, அரளி,மருக்கொழுந்து, பச்சிலைச் செடி கொடிகள் உள்ளதல்லவா..அவற்றுக்கு காலை மாலை இருவேளை, தங்கள் கையால் கிணற்றில் நீர் இறைத்து, வாளிகளில் தூக்கிச் சென்று தண்ணீர் விட வேண்டுமாம். அப்படிச் செய்தால் அந்தத் தாவரங்களின் ஆசி கிட்டுமாம். உங்கள் உபாதை விரைவில் நீங்குமாம்.
மன்னர்:எத்தனை நாள் அப்படிச் செய்யச் சொன்னார்..?
அமைச்சர்: ஒரு மண்டலம் மன்னா.
மன்னர்: சரி. நாற்பத்தி எட்டு நாள் தானே.. செய்கிறேன்..

(மறு நாள் முதல் மன்னர் கிணற்றில் நீர் இறைத்து செடிகளுக்கு வாளிகளில் தூக்கிச் சென்று நீர் விடுகிறார் காலை மாலை இரு வேளையும்)

மன்னர்: (மெதுவாக அமைச்சரிடம்) கோவில் நந்தவனத்தில் பத்துப் பதினைந்து செடிகள் தானே இருந்ததாக ஞாபகம். இப்போது நூறு தொட்டிகளுக்கு மேலே இருக்கும் போலிருக்கிறதே. 
மந்திரி: (பேச்சை மாற்றி) என்ன மன்னா.. தண்ணீரை மேலே கொட்டிக் கொண்டீர்களா..? நனைந்து விட்டதே.
மன்னர்: அமைச்சரே நன்றாகப் பாரும்..! அது என் வியர்வை. அதன் நாற்றம் எனக்கே சகிக்கவில்லை!....

(நாற்பத்தி எட்டாவது நாள்)

மன்னர்: என்ன ஆச்சரியம். ஒரு மண்டலத்தில் எனக்கு பசியோ பசி. இப்போது சாப்பிட்டால் நெஞ்சு கரிப்பதில்லை. புளியேப்பம் இல்லை. எல்லா உபாதைகளும் அடியோடு போய்விட்டதே. கொஞ்சம் இளைத்தும் விட்டேன். கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் அழகாக தெரிகிறேன்..அமைச்சரே எனக்கு பத்து வயது குறைந்தாற் போல் உணர்கிறேன்.
அமைச்சர்: மன்னா.. தாங்கள் இதைத் தொடர்ந்தால் நல்லது. எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.
மன்னர்: உண்மை அமைச்சரே.. இனி அரண்மனை நந்தவனப் பராமரிப்பு என் கையால் தான்..


காட்சி - 5

இடம் -அரண்மனை நந்தவனம்
மாந்தர்- மகாராணி, மன்னர். 

(சில மாதங்களில் அரண்மனை நந்த வனத்தில் பூச்செடிகள் நிறைய மொட்டு விட்டு எங்கும் மலர்கள் பூத்து நறுமணம் அந்தப் புரத்தில் வீசுகிறது). 

மகாராணி: நல்ல விஷயம் தான். பூக்களின் மணம் கிறங்க வைக்கிறது தான். ஆனால் உங்கள் உடல் வியர்வை நாற்றம் தான் சகிக்கவில்லை!
மன்னர்: (புன்னகைத்தபடி,):- அப்படிச் சொல்லாதே ராணி. உலகிலேயே நறுமணம் மிக்க ஒன்று உண்டென்றால் அது உழைப்பாளிகளின் வியர்வைத்துளிகள் தான்..இதை நான் அனுபவத்தில் கற்றேன்.. அமைச்சருக்கும் முனிவருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

(மன்னரின் கூற்றைக் கேட்டு ராணி மிகவும் ஆச்சரியத்துடன் மன்னரைப் பார்க்கிறாள்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.