முகப்பு
சிறுவர்மணி

பள்ளி மணி ஓசையிலே!

சார்...,நீங்க நிதானமா இருங்க...வந்திருக்கிற ஆசிரியர்களையும், சில மாணவர்களையும் வெச்சுப் பேரவையை நடத்திடலாம்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

அரங்கம்
காட்சி-1
இடம்-தலைமை ஆசிரியர் அறை, 
மாந்தர்- பார்த்திபன், குமரன், மாணவர்கள். 

(தலைமையாசிரியர் பார்த்திபன் தன் அறைக்குள் நுழைகிறார். பள்ளி மணி ஓசை கேட்கிறது. திகைப்புடன் வெளியே வருகிறார். விளையாட்டுத் திடலில் குதித்த மாணவர்கள் அப்படியே பைகளைப் போட்டுவிட்டு....,காலைப் பேரவைக்கு வந்து குழுமுகிறார்கள். ஆசிரியர் குமரன் பார்த்திபனிடம் வருகிறார்.)

குமரன்: சார்...,நீங்க நிதானமா இருங்க...வந்திருக்கிற ஆசிரியர்களையும், சில மாணவர்களையும் வெச்சுப் பேரவையை நடத்திடலாம்.
(பார்த்திபன் நிம்மதி அடைகிறார்)
ஒரு மாணவன்: என்னடா இது?...,எட்டரை மணிக்கே அழைப்பு மணி?....பையைக் கூட வகுப்பிலே வைக்கலே...ஓடி வந்திட்டேன். 
மற்றவன்: அங்கே பார்...,ஒருத்தன் அவசரத்திலே மிதிவண்டியைப் போட்டு விழுந்திட்டான்...(சிரிக்கிறார்கள்)
முதல் மாணவன்: இன்று திங்கட்கிழமை...இன்னும் கொடிமரத்திலே கொடி கூடக் கட்டலே....
(குமரன் கொடியைக் கயிற்றில் கட்டுகிறார்)
குமரன்: (மாணவர்களிடம்) மணி அடிக்கிற ஊழியர் வேலுவுக்கு உடம்பு சரியில்லே....ஞாபக மறதியா முன்னாடி அடிச்சிட்டார்!....பள்ளிக்கு மாணவர்கள் வழக்கமா வர்றபடி வரட்டும்...பேரவைக்கு ஏன் வரலேன்னு கேட்கமாட்டோம்.
(பேரவை தொடங்குகிறது. மொழி வாழ்த்துக்குப்பின் பார்த்திபன் தேசியக்கொடியை ஏற்றுகிறார். பேரவை முடிந்தபின் எல்லோரும் வகுப்புக்குப் போகிறார்கள்)

ஒரு மாணவன்: சரி...,இடைவேளை மணியையும், பள்ளிக்கூடம் விடற மணியையும் அடிக்காம இருந்திடப் போறாங்க...
நமக்குத் தொல்லையாயிடும்.....கவனமா இருப்போம்....
மு.மா. : நீ வீட்டுக்கு ஓடறதிலேயே கவனமா இரு...
அடுத்தவன்: இப்போ முன்னாடியே அடிச்ச மாதிரி....போறதுக்கான மணியை அஞ்சு மணிக்கு அடிச்சா சோதனைதானே.....அடிக்காம இருந்தா அப்போதான் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும்....

காட்சி-2
இடம்-விளையாட்டுத் திடல்,
மாந்தர்-பெற்றோர், மாரியப்பன், சிவகாமி, தங்கராசு, அக்காள் மாலா, 
மாணவர்கள் மருது, ரமேஷ். 
 
(பெற்றோர் தங்கராசுவை அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்க வருகிறார்கள். மகள் மாலாவையும் தங்கராசுவையும் தலைமையாசிரியரின் அறைக்கு வெளியே பலகையில் அமர வைக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழை நகல் எடுக்க வெளியே போகின்றனர்....சற்று நேரத்தில் வருகின்றனர்)
மாலா: (அவர்களிடம்) அப்பா!....,தங்கராசு திடீர்னு எழுந்து இந்த மணியை அடிச்சுட்டு ஓடிட்டான்! அவன் பின்னால ஓடினேன்....எங்கே போனான்னே தெரியலே....சிட்டா மறைஞ்சிட்டான்! 
சிவகாமி: அஞ்சு நிமிஷத்திலே ஒரு களேபரத்தைப் பண்ணிட்டானே...
மாரிமுத்து: அவன் இப்படித்தான் தினமும் நம்மை நல்லா வேலை வாங்கறான்..., வாங்க, திடல்ல போய்ப் பார்க்கலாம். (மூவரும் போகிறார்கள்)
சிவகாமி: (வேப்ப மரத்தின் மேல் பார்க்கிறாள்) அங்கே பாருங்க....ஒண்ணும் தெரியாத மாதிரி "வானரம்' மரக்கிளையிலே இருக்கு...
தங்கராசு: அமமா...,மணியை அடிச்சேனா..., எல்லோரும் குபீர்னு ஓடி வந்தானுங்க....., பயத்துல மேலே ஏறிட்டேன்...இப்போ இறங்க முடியலே...இறக்கி விடுங்க...

(மருதுவும், ரமேஷும் வருகிறார்கள்...காவற்காரரிடம் சொல்ல, ஏணி வருகிறது. அவன் கீழே இறங்குகிறான்)
மருது: (தனக்குள்) பேரவையை முன்னாடியே நடத்த வச்சவன் இவன்தான்......இவன் வந்திருக்கான்....இவன் என்ன பயிற்சியைத் தரப்போறானோ...!

(மருது....தங்கராசுவுடன் குமரன் அறைக்குப் போகிறான்....அவனை அறிமுகம் செய்கிறான். பின்னர் ரமேஷ்...,தங்கராசுவையும், பெற்றோரையும் தலைமையாசிரியரிடம் அழைத்துப் போகிறான்)

காட்சி - 3
இடம்-தலைமையாசிரியர் அறை
மாந்தர்-பார்த்திபன், தங்கராசு, பெற்றோர், மாலா. 

பெற்றோர்: சார்...,எங்களை மன்னிச்சிடுங்க...
பார்த்திபன்: எதற்கு மன்னிப்பு?
மாரியப்பன்: இவன் என் பையன் தங்கராசு.
பார்த்திபன்: நல்ல பெயர்!
சிவகாமி: ஆனா..., ஒரு இடத்துல தங்கமாட்டான்! இவனைப் பார்க்கவே ஒரு ஆள் வேணும்.
மாரியப்பன்: முன்னாடியே மணியை அடிச்சதால....,ஒரு குழப்பம் ஏற்பட்டுதே....அதுக்கு இவன்தான் காரணம்!

(பார்த்திபன் புரிந்துகொண்டு புன்னகை செய்கிறார்)

சிவகாமி: அவனையும், எங்களையும் மன்னிச்சிடுங்க...
மாரியப்பன்: இவனை இங்கே ஏழாம் வகுப்பிலே சேர்த்துக்குங்க....நாங்க கவனமா இருப்போம்....

(பார்த்திபன்..., (தனக்குள்)....மணி அடித்தான்....மரம் ஏறினான்......எவரிடத்தில் என்ன திறமையோ...,இவன் எடிசனோ மார்க்கோனியோ.....ஜி.டி.நாயுடுவோ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.......-குமரனின் கருத்தை அறிய விரும்புகிறார். அவர்களை வெளியே அமர வைக்கிறார்)

காட்சி-4
இடம்-தலைமையாசிரியர் அறை
மாந்தர்-பார்த்திபன், குமரன், பெற்றோர், 
தங்கராசு, மாலா. 

(குமரன் வருகிறார்)

குமரன்: சார்...,தங்கராசுவைப் பற்றித்தானே கேட்க நினைக்கிறீங்க....அவனை என் அறைக்கு அழைச்சுப் பேசினேன்.....விளையாட்டுத் திடல்ல இன்னும் பத்து மரம் வைக்கணும்ங்கறான்......மிதிவண்டியெல்லாம் வெய்யில்ல கிடக்கு....நெருப்பா கொதிக்குது.....அதுக்கு ஒரு ஷெட் போடணும்.....குடிநீர்க் குழாய் ரெண்டு மூணு ஒழுகுது....தண்ணீர் வீணாப் போவுதுன்னு சொல்றான்.....இந்த வயசிலேயே குறும்புத்தனத்தோட சமூக அக்கறையும் இருக்கு. இவன் நம்ம பள்ளிக்கூடத்துக்கு அவசியம் தேவை. 
பார்த்திபன்: மருது, ரமேஷ் அணியிலே இவனையும் சேர்த்துக்கலாம்.
குமரன்: அவர்களும் தங்கராசுவை விரும்பறாங்க....
(பார்த்திபன் அவனைச் சேர்த்துக் கொள்கிறார்)
பார்த்திபன்: தங்கராசு...,உனக்குப் பள்ளிக்கூட மணி பிடிக்கும் போலிருக்கு....
தங்கராசு: சார்....,நான் கோயிலுக்குப் போகும்போது அங்கே உள்ள மணியை அடிக்க ஆசைப்பட்டேன்! முடியலே....அதான் இங்கே அடிச்சேன்....இனிமே இப்படிச் செய்யமாட்டேன்.
பார்த்திபன்: உனக்கு வேற என்ன ஆசை?
தங்கராசு: இங்கே இருக்கிற மணி ரொம்பப் பழசா இருக்கு அப்பாவிடம் சொல்லி புதுமணிக்கு எற்பாடு செய்யறேன்.
பார்த்திபன்: நீ ரொம்ப நல்ல பையன். பெயருக்கு ஏற்றபடி தங்கமான பையனா இருக்கணும்.....உன்னோட விருப்பப்படி மிதிவண்டிங்க இருக்கற இடத்துக்கு "ஷெட்' போடலாம். அடுத்த மாசம் உனக்குப் பிறந்தநாள் வருது....அப்போ இங்கே சில மரக்கன்றுகள் நடலாம்....தண்ணீர் ஊத்திக் காப்பாற்றலாம்....வேலி கட்டலாம்.....!

(அவனும், அவனுடைய பெற்றோரும், மாலாவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.