முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: யார் அறிவாளி?

அஸ்வின் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

முத்திரை பதித்த முன்னோடிகள்!


காட்சி - 1

இடம்  - பள்ளி வளாகம் மாந்தர் - அஸ்வின், சிவா

(அஸ்வின் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  ஆங்கிலத்தை அதிகம் நேசிப்பவன்.  ஆங்கிலம் தெரியாதவர்கள் மனிதர்களே அல்ல என்ற எண்ணம் உடையவன்.  யாராவது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினால் அவன் வியந்து போவான்.  ஆங்கிலம் பேசுபவர்கள்தான் அறிவாளிகள் என்ற எண்ணமும் அவன் மனதில் மிகுந்திருந்தது.  அஸ்வின் விடுமுறை நாட்களில் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பேச்சு ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டிருந்தான்.  இதனால் மற்ற மாணவர்களைவிட அவன் சற்று
சரளமாக பயமின்றி ஆங்கிலம் பேசும் திறமை பெற்றிருந்தான்.  அருகிலிருந்து, பாலூர் என்ற இடத்திலிருந்து சிவா என்றொரு மாணவன் அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்)

அஸ்வின்:  டேய் ஊரான்!   இத்தனை வருஷம் இங்கிலீஷ் மீடியத்திலே படிக்கிறியே.  நாலு வார்த்தை என்கூட இங்கிலீஷ்லே பேசுடா பார்ப்போம்!
சிவா:  டேய் அஸ்வின்.  என்னாலே உன் அளவுக்கு இங்கிலீஷ் பேச முடியாது.

ஒத்துக்கறேன்.  என்னை கேலி செய்யறதை விட்டுட்டு வேற வேலை இருந்தா பாரு!
அஸ்வின்:   ம்..., அந்த பயம் இருக்கட்டும்.  சரி சரி போ.

(அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான் சிவா)
    

காட்சி - 2

இடம் -  பள்ளி வளாகம் மாந்தர் -அஸ்வின், தமிழரசன்

(அஸ்வின் எட்டாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பிற்குச் சென்றான்.  அந்த வருடம் புதிதாக தமிழரசன் என்ற மாணவன் அந்த பள்ளியில் சேர்ந்திருந்தான்.   அவனுடைய அப்பா பெங்களுரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார்.  அதனால் தமிழரசன் இந்த பள்ளியில் சேர்ந்திருந்தான்)

அஸ்வின்:  டேய்.  என்ன பேருடா இது?...,  உனக்கு வேற பேரே கிடைக்கலையா?..... இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி ஸ்டைலா வெச்சுக்க வேண்டியதுதானே?....
தமிழரசன்:  ஏன் இந்த பேரு ரொம்ப நல்ல பேருதானே?....
அஸ்வின்:  இதுகூட உனக்குத் தெரியலை....,  சரி சரி.  உனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியுமா ?
தமிழரசன்:  தெரியுமே!  
அஸ்வின்:  அப்படியா ?   சரி.  என்கூட இங்கிலீஷ்லே பேசேன்!..........பார்க்கலாம்!
தமிழரசன்: உனக்கும் தமிழ் தெரியும்,  எனக்கும் தமிழ் தெரியும். அப்புறம் எதுக்குத் தேவையில்லாம நாம ஆங்கிலத்திலே பேசணும்?  எந்த ஒரு மொழியையுமே தேவையில்லாம பேசறது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம்!

(இதைக் கேட்ட அஸ்வின் கேலியாகச் சிரித்தான்)

அஸ்வின்:  உனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியலைன்னா தெரியாதுன்னு சொல்லிட்டுப் போ! 
அதைவிட்டுட்டுத் தேவையில்லாம புத்திசாலி மாதிரி பேசாதே!  சரியா ?

(அஸ்வின் தமிழரசனை கேலி செய்து பேசினான். ஆனால் தமிழரசன் கோபப்படாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டான்.  ஒரு புன்னகையை மட்டும் பதிலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்)


காட்சி - 3

இடம் - பள்ளி வளாகம்,  மாந்தர் - அஸ்வின், தமிழரசன்.

(ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் அஸ்வின் சாப்பிட்டுவிட்டு பள்ளி மைதானத்தில் தன் நண்பர்களோடு உட்கார்ந்திருந்தான்.  அருகில் தமிழரசன் ஒரு ஆங்கில நாவலைப் படித்துக் கொண்டிருந்தான்)
அஸ்வின்: பார்றா.  தமிழே தகறாறு!....,   இதுலே இங்கிலீஷ் நாவல் வேற!..... ரொம்பத்தான் சீன் போடறான்!

(அருகில் இருந்த தமிழரசனின் காதில் விழுமாறு தன் நண்பர்களிடம் பேசி தமிழரசனை வம்பிற்கு இழுத்தான்.  ஆனால் தமிழரசன் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.  தொடர்ந்து புத்தக வாசிப்பில் கவனத்தைச் செலுத்தினான்.   அப்போது அவனுடைய கைப்பேசி அழைத்தது.  கைப்பேசியை எடுத்து தமிழரசன் யாருடனோ சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினான்.  நுனிநாக்கு ஆங்கிலம் என்று சொல்வார்களே அவன் பேச்சு அதுபோல இருந்தது.  இதைக் கேட்ட அஸ்வின் மற்றும் அவன் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.  அஸ்வின் மெல்ல அங்கிருந்து நழுவினான்)
    

காட்சி - 4

இடம் - பள்ளி வளாகம் மாந்தர்:  தலைமையாசிரியர், அஸ்வின், தமிழரசன், சிவா.

(காலை பள்ளியில் வழக்கம் போல இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு விஷயத்தை அங்கே கூடியிருந்தவர்களுக்கு அறிவித்தார்.)

தலைமையாசிரியர்:  இன்னைக்கு உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன்! நம்ம பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பிலே படிக்கிற தமிழரசன் என்ற மாணவன் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒரு பிரபலமான ஆங்கில வார இதழில் பிரசுரமாகியிருக்கு!..... அந்த பத்திரிகையிலே படைப்புகள் பிரசுரமாகறது அவ்வளவு சுலபம் இல்லை!  உண்மையைச் சொல்லணும்னா, அந்த பத்திரிகைக்கு நான் பலமுறை கவிதைகளை அனுப்பியிருக்கேன்....., ஆனா ஒருமுறை கூட பிரசுரம் ஆகலை!      சிறந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலே நம்ம பள்ளி மாணவனோட கவிதை பிரசுரமாகியிருக்கிறதை நான் ரொம்ப பெருமையாகக் கருதறேன்!
இதுமட்டுமில்லாம, தமிழரசனின் படைப்புகள் பல்வேறு ஆங்கில தமிழ் இதழ்களில் பிரசுரமாகியிருக்கு!

(தமிழரசனை மேடைக்கு அழைத்த தலைமையாசிரியர் அவனுக்கு ஒரு விலையுயர்ந்த பேனாவை பரிசளித்து மகிழ்ந்தார்.   கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது!...அஸ்வின் அரண்டு போகிறான்.)

அஸ்வின்: தமிழரசன்.  என்னை மன்னிச்சிடுடா!  உன்னோட திறமையைத் தெரிஞ்சுக்காம நான் உன்னை கேலி பண்ணிட்டேன்.
தமிழரசன்:  அஸ்வின்.  ஆங்கிலம் எல்லா மொழிகளையும் போல ஒரு சாதாரண மொழிதான்!....,  எல்லா மொழிகளையும் நாம மதிக்கணும்.  தாய்மொழியை சற்று அதிகமாக மதிக்கணும்!  நான் தொடக்கக் கல்வியை அமெரிக்காவிலே படிச்சேன். அமெரிக்காவிலே தாய்மொழியை மதிக்கிறவங்களுக்கு அதிக மரியாதை தருவாங்க!  தாய்மொழி நம் தாயைப்போல.  எங்க வீட்டிலே எல்லோருக்கும் ஆங்கிலம் சரளமா வரும். ஆனா நாங்க தமிழ்லேதான் பேசிப்போம்! தேவைப்படும்போதுதான் ஆங்கிலத்தை உபயோகிப்போம்.

(தமிழரசனின் பேச்சு அஸ்வினின் கண்களைத் திறந்தது.   அந்தப் பக்கமாக சிவா வந்தான்)

அஸ்வின்:  டேய் சிவா.  என்னை மன்னிச்சிடுடா!....  உன்னை நான் பலமுறை கேலி செய்திருக்கேன்.  தமிழரசன் என் கண்ணைத் திறந்துட்டான்டா.

(சிவா அஸ்வினின் கைகளைப் பிடித்து நட்புடன் குலுக்கினான்........இப்போதெல்லாம் அஸ்வின் தமிழிலேயே பேசுகிறான்.  தமிழில் பேசுவதை பெருமையாகவும் நினைக்கிறான்.)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.