முகப்பு
சிறுவர்மணி

கதைப் பாடல்: தேக்கும் வாழையும்!

மலையடி வார அழகு வனம்வகைவகை தாவரம் பல நூறாம்!

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மலையடி வார அழகு வனம்
வகைவகை தாவரம் பல நூறாம்!
கலையழகுடைய விலங்குகளும்
கண்கவர் பறவைகள் பற்பலவாம்!

இருவர் கட்டிப் பிடித்திடவே 
இயலாப் பெரிய மரங்களுண்டே
அருமை வானைத் தொடுகின்ற 
அளவும் உள்ள மரங்களவை!

நதிக்கரை ஓர தேக்குமரம்
நாலா புறமும் விரிந்தமரம்!
அதன் சிறு தூரத்தில் வாழைமரம்
அவை இரண்டும்தான் நண்பர்களே!

இரண்டும் பேசி மகிழ்ந்திடுமே!
இனிதாய் பாடியும் இன்புறுமே!
இரண்டும் வனஉயி ரினங்களுக்கே
ஏற்ற விதத்தில் உதவிடுமே!

""என்றன் நண்பா! வாழையே
எனக்கொரு ஐயம் பல நாளாய்!
நன்றாய் இந்த மனிதருக்கே
நானும் பலவிதம் உதவுகின்றேன்

வீடுகள் கட்டிட நிலைக் கதவு
வீட்டினுள் பீரோ அலமாரி
நாடும் மேஜை நாற்காலி
நல்லதிற்கெல்லாம் உதவுகின்றேன்

இன்னும் பலவித வகைகளிலே
இனிய உதவிகள் செய்கின்றேன்
எண்ணிப் பார்த்தால் எனக்கேதான் 
ஏற்க இயலா வருந்தந்தான்!''

""தேக்கு மரமே என் அண்ணா
தேவை இல்லா வருத்தம் ஏன்?
ஏக்கம் வேண்டாம் கூறுங்கள்
இன்றே அதனைத் தீர்த்திடலாம்!''

""மனிதர் திருநாள் வீடுகளில் 
வாழை மரங்கள் கட்டுகிறார்!
அதுபோல் மதிப்பு எனக்கில்லை!
அதுதான் எனக்கு மிக வருத்தம்!''

""இத்தரை போற்றும் தேக்கண்ணா
ஒற்றுமையாய் நாம் உதவிடுவோம்!
சாய்த்தபின் நீ செய்யும் பேருதவி!
வீட்டிற்குதவும் பொருளாகும்! -

 நானும் என்னால் முடிந்தவரை
இலை, காய், பழங்கள்,தண்டோடு 
ஏனைய பட்டை நார்களுடன் 
பற்பல உதவிகள் செய்கின்றேன்...

...ஆகையினாலே மனிதரெனை
அன்புடன் புனித மாய் எண்ணி
வீட்டு வாசலில் கட்டுகிறார்!
இதனைப் பெரிதாய் எண்ணாதே...

....என்னைக் கட்டிட வாசல் நீயாவாய்!
நாம் கட்டிக் கொள்வோம் அன்புடனே!''
என்றே வாழை மரம் சொல்ல....,
ஏற்றுக் கொண்டது தேக்கு மரம்!

முழு கட்டுரையைப் படிக்க →