அரங்கம்: மயிலும் குயிலும்!
ரதி,...ரதி!....எங்கே போறே நீ? ...., நான் கூப்பிடும்போதெல்லாம் பதில் பேசாம போய்க்கிட்டே இருக்கே.....மத்தவங்க கிட்டே மட்டும் எவ்வளவு அன்பா பேசறே? ஏன் என்னை உனக்குப் பிடிக்கலையா?
காட்சி-1
இடம் - வீட்டுவாசல்
மாந்தர் - மீரா, ரதி, சுதா.
மீரா: ரதி,...ரதி!....எங்கே போறே நீ? ...., நான் கூப்பிடும்போதெல்லாம் பதில் பேசாம போய்க்கிட்டே இருக்கே.....மத்தவங்க கிட்டே மட்டும் எவ்வளவு அன்பா பேசறே? ஏன் என்னை உனக்குப் பிடிக்கலையா?
ரதி: ஆமாம்!....
மீரா: ஏன்?
ரதி: உன்னோட ஒரு கால் வளைஞ்சிருக்கு....நீ கறுப்பா இருக்கே....
மீரா: இது என்னோட தப்பில்லே....நான் சின்னக் குழந்தையா இருந்தப்போ எங்க அப்பா, அம்மா எனக்குப் போலியோ சொட்டு மருந்தைக் கொடுக்காம விட்டுட்டாங்க....,அதனாலதான் இந்த இளம்பிள்ளை வாத நோய்!....நிறம் கடவுள் கொடுத்ததுதானே....நீதான் பேருக்கேத்த மாதிரி அழகா இருக்கே!....வா, ரதி, கேரம்போர்ட் விளையாடலாம்!
ரதி: ம்ஹூம்....நான் வரல்லே!.....
(ரதி சென்றதும் மீரா வீட்டு வழியே சுதா வருகிறாள்)
சுதா: ஏய் மீரா!....என்ன ஆச்சு?....ஏன் கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கே?
மீரா: சுதாக்கா! ரதி என்னைக் கேலியா பேசிட்டுப் போறா!....
சுதா: விடு மீரா!....ரதிக்குத் தான் ரொம்ப அழகுங்கிற கர்வம்!....அதனாலதான் இப்படி அலட்டிக்கிறா....அவள் கர்வம் ஒருநாள் தன்னால அடங்கிடும்.....வா!.....நாம கேரம் விளையாடலாம்!.....
காட்சி - 2
இடம் - சுதா வீடு
மாந்தர் - சுதா, ரதி.
ரதி: சுதா!....சுதா!....
சுதா: வா ரதி!
ரதி: அடேடே!....என்ன சுதா இது? போன வாரம் நான் வந்தப்போ இந்தப் பூவேலை அலங்காரங்கள் இருந்ததா?
சுதா: இல்லை!....ஒரு மாசமா தயார் செய்து இன்னிக்குத்தான் வாசல்படிகள்ளேயும், ஜன்னல்கள்ளேயும் மாட்டியிருக்கேன்!....எப்படி இருக்கு?
ரதி: அபாரம்!....அபாரம்!....எல்லாம் கண்ணைப் பறிக்குது!......, சுதா, எனக்குக் கூட இப்படி துணியிலேயும், காகிதத்துலேயும் பூவேலை செஞசு அழகு பார்க்க ஆசையாயிருக்கு.....எனக்கும் கத்துக் கொடுக்கறியா?
சுதா: ரதி இதை எனக்குக் கத்துக் குடுத்தது மீராதான்!....நீயும் மீராவிடமே கத்துக்கோ!....நல்லா சொல்லித் தருவா!...
ரதி: அது என்னால முடியாது!....
சுதா: ரதி, மீரா எவ்வளவு கெட்டிக்காரி தெரியுமா? கைவினைப் போட்டிகள்ளே எவ்வளவோ பரிசு வாங்கியிருக்கா!....மீரா ஜாதி மல்லிகை மாதிரி!.... மல்லிகையைவிட தாமரை அழகா இருக்கலாம்....ஆனால்
மல்லிகையோட மணம் தாமரைக்குக் கிடையாது!.... மயிலின் குரலைவிட, கறுப்புக் குயிலோட குரல்தான் கேட்க இனிமையாயிருக்கும்!....அதனால நீ மீராகிட்டே அன்பா நடந்துக்கோ ரதி...
ரதி: (கோபத்துடன்) உன் புத்திமதி எனக்கு வேண்டாம்! நான் வரேன்!....
காட்சி - 3
இடம் - விஜி வீடு
மாந்தர் - விஜி, ரதி.
ரதி: விஜி, விஜி!.....
விஜி: வா ரதி!
ரதி: உனக்குத் துணிகள்ளேயும், காகிதத்திலேயும் பூவேலைகள் செய்யத் தெரியுமா?
விஜி: தெரியாது ரதி!....நம்ம சுதாவுக்கும், மீராவுக்குந்தான் நீ சொல்றா பூ அலங்காரம் தெரியும்! ஆனா எனக்குக் கண்ணாடி மண்டபம் செய்யத் தெரியும்!.....இதோ பாரு, விதம், விதமா செய்து வெச்சிருக்கேன்!.....
ரதி: கண்ணைப் பறிக்கறது விஜி!....,ஏய், எனக்கும் இதைக் கத்துக் கொடேன்!
விஜி: எனக்கு இதைக் கத்துக் கொடுத்தது மீராதான்....நீயும் மீரா கிட்டே கத்துக்கோ!.....பொறுமையா அன்போடு சொல்லித் தருவா!
ரதி: ஆனா அவனை எனக்குப் பிடிக்காது!
விஜி: என்ன ரதி சொல்றே? " உருவு கண்டு எள்ளாமை வேண்டும் ...உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னாருடைத்து!' இந்தக் குறளை நீயும் படிச்சிருக்கே! அழகான தேர் ஓட அச்சாணி அவசியம்!..... அச்சாணி அவகில்லாம இருக்கலாம்....,ஆனா அது இல்லாம தேர் ஓட முடியாது......கடவுள் படைப்பிலே அங்கக் குறைபாடுகள் உள்ளவங்க கிட்டேயும் நல்ல திறமைகள் இருக்கும்....யாரும் அவங்களை அலட்சியப் படுத்தக் கூடாது.
ரதி: (கோபமாக) உன் புத்தியைக் கேட்க நான் இங்கே வரலே!.....வரேன்!....
காட்சி - 4
இடம் - கீதா வீடு
மாந்தர் - கீதா, ரதி.
(கீதா வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருக்கே.....பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.....
கீதா: நீயும் போடலாம் ரதி!....
ரதி: ஆசையாய்த்தான் இருக்கு!....நீதான் எனக்குக் கத்துக் கொடுக்கணும்...
கீதா: நான் இதை மீரா கிட்டேதான் கத்துக்கிட்டேன்...., மனசுலே பதியற மாதிரி நல்லா சொல்லிக் கொடுப்பா....நீயும் அவகிட்டேயே கத்துக்கலாமே!
ரதி: முடியாது கீதா!.....அவளை எனக்குப் பிடிக்காது!....
கீதா: அப்படிச் சொல்லாதே ரதி......நேத்து வகுப்பிலே நடத்தின அந்த "நாலடியார்' பாடலை நினைச்சுப் பாரு!.....அதுலே சொன்னது போல, "மடிப்புள்ள ஆடை, மயிர் முடி, முகப்பூச்சு இவற்றாலே வர அழகு உண்மையான அழகில்லை....நாம நல்ல குணங்களோடு இருக்க, நமக்குத் துணையா
இருக்கிற கல்வியறிவுதான் உண்மையான அழகு!.... புரிஞ்சுக்கோ ரதி!
ரதி: எனக்கு எதுவுமே வேண்டாம்....,நான் வரேன்!....
காட்சி - 5
இடம் - மீரா வீடு
மாந்தர் - மீரா, ரதி.
ரதி: மீரா!....மீரா!
மீரா: வா ரதி!....வா உட்கார்!....பத்து நாளா உன்னை இந்தப் பக்கமே பார்க்கல்லே!.....ஏய் ரதி!....என்ன இது? உன் முகத்துலே திடீர்னு இவ்வளவு கீறல் தழும்பு? என்ன ஆச்சு?....
ரதி: மீரா!....உன்னை அழகில்லாதவள்னு வெறுத்தேன்!.....கேலி செய்தேன்!....அதுக்குச் சரியான தண்டனை கிடைச்சுட்டுது!....
மீரா: என்ன நடந்தது ரதி?
ரதி: எங்க வீட்டுப் பூனை பத்து நாளைக்கு முன்னாலே நாலு குட்டிகள் போட்டுது!.....அதுலே ஒரு குட்டி கறுப்பு!.....ஒரு காலும் கோணல்!.....அதை எனக்குப் பிடிக்கல்லே.....அதனால அதைத் தூக்கித் தெருவிலே போட்டேன்!.....அதைப் பார்த்த தாய்ப்பூனை என் மேலே பாய்ந்து, என் முகத்துலே கால் நகங்களால் நல்லாப் பிராண்டிடிச்சு!.....ஒரு வாரமா படுக்கையிலே இருந்தேன்!.....நேத்துத்தான் டாக்டர் கட்டை அவிழ்த்தார்!.....சாரி மீரா!.....
மீரா: ரதி, அழாதே!.....இந்தத் தழும்புகள் சீக்கிரம் ஆறிடும்!.....உன் அழகான முகத்துக்கு ஒண்ணும் ஆகாது!
ரதி: மீரா!.....உன்னை வெறுக்கறது தவறுன்னு எல்லாரும் சொன்னாங்க....,குறள்,....நாலடியார்...,சொன்னதையும் எடுத்துக் காட்டினாங்க!.....அதெல்லாம் இப்பதான்எனக்குப் புரியுது!.....மன்னிச்சுடு மீரா!
மீரா: சரி, உனக்கு இப்போ நான் என்ன கத்துத் தரணும்?....பூ வைலையா?....கண்ணாடி மண்டபமா?....ரங்கோலிக் கோலமா?...சொல்லு!...
ரதி: எதுவும் வேண்டாம்!...
மீரா: ஏன் மறுபடியும் கோபமா?...
ரதி: இல்லை மொதல்லே கேரம் போர்டு விளையாடுவோம் வா!
திரை