சிறுவர்மணி

முத்திரை பதித்த முன்னோடிகள்: ஈ. ஸ்ரீதரன்

லக்ஷ்மி பாலசுப்ரமணியம்


உயிரினங்களின் முதன்மை இயல்பே புலம்பெயர்வு தான். அதிலும் மனிதர்களால் ஓரிடத்தில் மட்டுமே இருக்க முடியாது.ஆகவே பல்வேறு போக்குவரத்து சாதனங்களையும் வழிகளையும் உருவாக்கிக்கொண்டனர். மனிதர்கள் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப பல்வேறு போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்த தொடங்கினர்.

அவற்றுள் மக்கள் பலரும் விரும்பும் சாதனம் தொடர்வண்டி ஆகும்.அத்தகைய தொடர்வண்டிப் பயணத்தில் பல்வேறு திட்டங்களை வடிவமைத்தவர் இன்றைய கட்டுரையில் நாம் காண இருக்கும் சாதனையாளர் திரு ஸ்ரீதரன் ஆவார்.

இவரது சாதனைகளுக்கு மணிமகுடமாக விளங்கியது தமிழகத்தில் உள்ள பாம்பன் பாலத்தின் சீரமைப்பு ஆகும். 1964ஆம் ஆண்டு மிகப்பெரிய புயல் ஒன்று தமிழகத்தின் தெற்கு கரையை தாக்கியது.இதனால் பாம்பன் பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது .தென்னக ரயில்வே இந்த பாலத்தை சீரமைக்க ஆறு மாதங்கள் கெடு  அளித்திருந்தது.

அந்த சமயத்தில் திரு ஸ்ரீதரன் தென்னக ரயில்வேயில் உதவிப் பொறியாளராக கட்டுமானப் பிரிவில் (ஸ்ரீண்ஸ்ண்ப்) பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் பாம்பன் பாலத்தை சீரமைக்கும் பணியை ஏற்றுக்கொண்டார்.இவர் தலைமையிலான பொறியாளர் குழு இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி 46 நாட்களில் பாம்பன் பாலத்தை முழுவதுமாக சீரமைத்தது.இது ஒரு மாபெரும் சாதனையாகும்!

திரு ஸ்ரீதரன் 12.6.1932 அன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார். கட்டுமான பொறியியல் பட்டப்படிப்பை ஆந்திர மாநிலம் காக்கிநாடா பொறியியல் கல்லூரியில் பெற்றார். ஒரு ஆசிரியராக கோழிக்கோட்டில் உள்ள பாலிடெக்னிக்கில் தமது பணியை தொடங்கினார்.

1953ஆம் ஆண்டு இந்திய கட்டுமான பொறியியல் தேர்வில் (Engineering Services Examination) தேர்ச்சி பெற்று தென்னக ரயில்வேயில் 1954ம் ஆண்டு உதவி பொறியாளராக பணிக்கு சேர்ந்தார். இவர் ஆற்றிய மற்றொரு மாபெரும் சாதனை கொல்கட்டா மெட்ரோ ரயில் திட்டமாகும்.

1970ஆம் ஆண்டு கோல்கட்டா மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவாக்கம் செய்து உருவாக்கினார்.அதுவே இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டமாகும்.அதுவரை போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு கொண்டிருந்த கொல்கட்டா மாநகரம் இத்திட்டத்தால் பெரும் நிம்மதியை அடைந்தது என்று கூறலாம்.ஏனெனில் ஒரு நாளைக்கு பிற பகுதிகளில் இருந்து கொல்கட்டா நகரத்திற்குள் வந்து செல்வோர்(floating population) எண்ணிக்கை மட்டும் 10 லட்சம் ஆகும்.இதன் காரணமாக வாணிப வளர்ச்சியும்,பொருளாதார வளர்ச்சியையும் மெட்ரோ ரயில் திட்டம் மூலமாக மேற்கு வங்க மாநிலம் அடைந்தது.

இவரது சேவைகளை அறிந்த இந்திய கப்பல் கட்டும் துறை இவரை கொச்சின் கப்பல் கட்டும் துறைமுகத்தின் தலைவராக 1979ஆம் ஆண்டு நியமித்தது. இவர் பணிக்கு சேர்வதற்கு முன் முறையான திட்டமிடல் மற்றும் மேற்பார்வை இல்லாத காரணத்தால் அந்நிறுவனம் சரியாக செயல்படவில்லை. இவர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு வேலைகள் சீக்கிரமாக நடைபெற்றன .1981-ஆம் ஆண்டு முதல் கப்பல "எம் வி ராணி பத்மினி'(MV Rani Padmini) உருவாக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது!

இதன் பின்னர் மேற்கு ரயில்வேயின் பொது மேலாளராக இவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.1990ஆம் ஆண்டு இவர் பணி ஓய்வு பெற்றார். இச்சாதனையாளரின் நிர்வாகத் திறமை, பொறியியல் அறிவு ஆகியவற்றை உணர்ந்து கொண்ட இந்திய அரசு பணி ஓய்வு அடைந்த பிறகும் இவரை கொங்கன் ரயில்வே திட்டத்தின் தலைவராக நியமித்தது.

கொங்கன் ரயில்வே திட்டம் மிகவும் சவாலான ஒன்றாகும். பல்வேறு வெளிநாட்டு ரயில்வே நிறுவனங்கள் அத்திட்டத்தில் இருந்த இடர்பாடுகள் மற்றும் சவால்களை கண்டு திட்ட உருவாக்கத்தில் இருந்தே விலகி கொண்டன. ஆனால் திரு ஸ்ரீதரன் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். இந்த ரயில்வே லயன் அமைக்கவேண்டிய மொத்த தூரம் 760 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த தூரத்தில் ஏறக்குறைய 82 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையில் 93 குகைப் பாதைகள் அமைந்து இருந்தன.மேலும் 150 மேம்பாலங்களை கடந்து ரயில்வே லயன் அமைக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய சவால் அங்கிருந்த மணற் பகுதியே ஆகும்.அது உறுதி இல்லாமல் புதைமணல் போன்று நெகிழ்வாக இருந்தது. இத்தகைய புவியியல் கூறுகளுக்கு இடையே ரயில் பாதை அமைப்பது ஒரு மாபெரும் சவாலாக இருந்தது.

1990ஆம் ஆண்டு தமது பணியை துவக்கிய திரு ஸ்ரீதரன் 1997ஆம் ஆண்டு முழுமையாக நிறைவு செய்தார்! இத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு இந்தியர்களின் அறிவுத்திறன்,நிர்வாகத் திறமை, கடின உழைப்பு,விடா முயற்சி, கூட்டுறவு மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக கொங்கன் ரயில்வே திகழ்கிறது என்று உலக நாடுகள் போற்றின.

இதற்குப் பிறகு டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் நிர்வாக இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டார்.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அத்திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். இவரை பல்வேறு நாடுகள் பாராட்டின.இந்த அறிஞர் பெருமகனார் 2011 ஆம் ஆண்டு தமது பணியிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்

(1) இந்திய அரசு இம்மாபெரும் சாதனையாளருக்கு 2001 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ'விருதையும் 2008ஆம் ஆண்டு "பத்ம விபூஷன்' விருதையும் வழங்கி சிறப்பித்தது.
(2) பிரான்ஸ் நாட்டு அரசு 2005 ஆம் ஆண்டு இவருக்கு "செவாலியே விருது'வழங்கி சிறப்பித்தது.
(3) பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்ததால் இவர் "மெட்ரோ மனிதர்'(ஙங்ற்ழ்ர் ஙஹய்) என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
(4)  உலகப் புகழ்பெற்ற டைம் நாளிதழ் 2003 ஆம் ஆண்டு இவரை "ஆசியாவின் கதாநாயகன்' என்று போற்றி புகழ்ந்தது.
(5) ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் திரு பான் கி மூன் இவரை ஐக்கிய நாடுகளுக்கான உயர்மட்ட திட்டக்குழுவின் தலைவராக நியமித்தார்.இவர் அப்பதவியில் மூன்று ஆண்டுகள் அங்கம் வகித்தார்.
(6) பாம்பன் பாலம் சீரமைப்பு பணிகளுக்காக ரயில்வே அமைச்சகம் இவருக்கு சிறப்பு விருது வழங்கியது.
(7) தற்பொழுதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
(8) இவர் கையில் எப்பொழுதும் இருக்கும் ஒரே நூல் பகவத் கீதை ஆகும்.அந்நூலில் குறிப்பிட்டுள்ள "கடமையை செய! பலனை எதிர்பார்க்காதே!'என்ற வாக்கியம் இவரை வெகுவாக கவர்ந்துள்ளது.
(9) இவரது வாழ்க்கை வரலாற்றை திரு ம்.ள். அசோகன் என்பவரும் திரு ராஜேந்திர அக்லேகர் என்பவரும் நூலாக எழுதியுள்ளனர. அந்நூல் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்று பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது. நாட்டுப் பற்று, மனித நேயம், எடுத்துக்கொண்ட காரியத்தில் தீவிர முயற்சி, சமூக அக்கறை போன்ற முத்திரைகளை வாசகர்கள் மனதில் இச்சாதனையாளர்கள் பதித்திருப்பார்கள் என்பது நிச்சயம்! இப்பெரியோர்கள் நம் முயற்சிக்கும் லட்சியத்திற்கும் முன்னோடிகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT