முகப்பு
சிறுவர்மணி

ஞானக்கிளி! - 27: ஊர்வலத்தில் சிறுவன்! 

ஞானம் ஒரு செய்தியுடன் வந்து கிளையில் அமர்ந்தது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

ஞானம் ஒரு செய்தியுடன் வந்து கிளையில் அமர்ந்தது. 
பிள்ளைகளும் கேட்கத் தயாராக இருந்தார்கள். 
""தங்கமணி ஐயாவிடம் ஊர்ப் பெரியவர் ஒருவர் வந்தார். சோலைமலைப் பகுதியில் இருக்கிற ஒரு பள்ளியின் ஆசிரியர் இளஞ்
செழியன்....பிள்ளைகளின் கல்விக்காக எவ்வளவு முயற்சி எடுக்கிறார் என்று மனம்  குளிர்ந்து பாராட்டினார்...''
""அக்கா!....அந்த ஆசிரியர் என்ன செய்தார்?''
""ஒரு நாள் அந்தப் பகுதியிலே பள்ளி ஆசிரியர்கள்..., மாணவர்கள் ஊர்வலம் ஒன்று நடந்தது!...''
""என்ன ஊர்வலம்?''
""டெங்கு காய்ச்சல் கொசுவால் எப்படிப் பரவுகிறது..., அதன் விளைவுகள் என்ன....அதைத் தொடக்கத்திலேயே எச்சரிக்கையாக இருந்து எப்படித் தடுக்கலாம் என்று ஓவியங்கள்....படங்கள் கொண்ட தட்டிகளை எடுத்துச் சென்றார்கள்....அந்தப் பகுதி மக்கள் அதைப் பார்த்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சி நடந்தது....''
அதை அறிய எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள்.
அது குடிசைகள் நிரம்பிய பகுதி. ஒரு சிறுவன்..... பெயர் முருகன் கையில் சிறு தட்டியோடு ஓடி வந்தான்....அதில் டெங்குவைப் பரப்பும் கொசுவின் படம்..... நோய் பரவும் விதம்.... தடுக்கும் முறை எல்லாவற்றையும் ஓவியமாக வரைந்திருந்தான்... ஊர்வலத்தில் சேர்ந்து கொள்ள ஆவல்!....ஆனால் தயக்கத்தோடு நின்றான்.... காரணம் அவன் பள்ளி மாணவன் அல்ல.... அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவன்...''
கதையைக் கேட்ட பிள்ளைகள் அவனை நினைத்து வியப்படைந்தார்கள்...
""அந்த ஊர்வலத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர் இளஞ்செழியன். அவர் அவனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார். பள்ளியின் சீருடையை அணிவித்து ஊர்வலத்தில் பங்கேற்க வைத்தார்...''
""நல்ல ஆசிரியர்!...''
""இன்னும் கேளுங்கள்... தலைமை ஆசிரியரின் அனுமதியோடு அவனைப் பள்ளியில் சேர்த்தார். அவனுடைய பெற்றோரைச் சந்தித்தார். கல்வியும் படிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துச் சொன்னார். எடுத்துக் காட்டாக ஒரு மீனை வாங்கி சுட்டுக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அவன் வாழ்நாள் முழுவதும் உதவும் என்றார்....அவனுக்கென படிப்புச் செலவையும் அவரே ஏற்றார்!.... அந்தப் பகுதியில் இருந்த மற்ற பிள்ளைகளையும் தேடிச் சென்று பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கினார்....''
""மெர்சியைப் போல இவரும் ஒரு முன் மாதிரியான ஆசிரியர்!....'' என்று குரல் கொடுத்தார்கள். 
""எப்பாடு பட்டாவது ஒரு பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்... அவனுடைய படிப்பு இடையில் நின்று போகாதபடி கவனமாக இருக்க வேண்டும் என்று தங்கமணி சொல்வார்.... இளஞ்செழியனை  மனம் நெகிழ்ந்து பாராட்டினார்...''
""அந்தப் பாதையில் நாங்கள் படிப்போம்!....  மற்றவர்களையும் படிக்க வைப்போம்!....''
ஞானம் அதைக் கேட்டு மகிழ்ந்தது!

...கிளி வரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.