முகப்பு
சிறுவர்மணி

தேர்ந்து வெல்வோம் வாழ்க்கையிலே!

உருசிய நாட்டின் உழவரவர்ஓயா துழைப்பார் வயல்வெளியில்!

Updated On : 7 ஜூலை, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:39 PM

உருசிய நாட்டின் உழவரவர்
ஓயா துழைப்பார் வயல்வெளியில்!
பெருமை மிக்கது உழவென்பார்!
பேருலகில் அது தலையென்பார்!

ஒருநாள் "டிராக்டர்' மீதேறி
உழுதார் வயலை! அப்பொழுது
சிறிய பழுதால் வண்டியின்பின் 
சேர்ந்த கலப்பை புதைந்ததுவே!

கலப்பை புயலால் புரண்டிடவே
கவிழ்ந்து விட்டது அவர் மேலே!
கலப்பை மலையாய் அழுத்தியது!
கடிதின் முயன்று வெளிவந்தார்!

Advertisement

இடது தோளில் வலி அதிகம்!
ஏதற்கே என்று தோள் பார்த்தார்!
இடது தோளில் கையில்லை!
இற்று விட்டது கலப்பையினால்!

எடுத்தார் பனியின் கட்டிகளை!
இடது தோளில் அவை அப்பி
தொடுத்தார் அதன்மேல் கட்டுகளை!
தொலைவில் கிடந்த கையினையும் 

எடுத்தே அதன்மேல் பனிக்கட்டி
எடுத்து வைத்துக் கட்டிட்டார்!
முடித்து வைத்த கையோடு
முடுக்கி விட்டார் "டிராக்டரினை...!

அடுத்த ஊரின் பக்கத்தில் 
அமைந்த மருத்துவ மனை சென்றார்!
உடனே அவர்க்கு மருத்துவரும் 
உரிய மருத்துவம் செய்தார்கள்!

இற்று விழுந்த கையினையும் 
எடுத்துப் பொறுத்தி விட்டார்கள்!
சற்றும் அஞ்சா அவ்வுழவர்
தனித்து வென்றார் சாவினையே!

அறிவும், துணிவும் விரைந்து செய்யும் 
ஆற்றல் வேண்டும் என்பதனைத் 
தெரிந்து கொண்டோம் தம்பிகளே!
தேர்ந்து வெல்வோம் வாழ்க்கையிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.