முகப்பு
சிறுவர்மணி

செங்கோட்டை - புனலூர் ரயில்பாதை!

ரயில் வழித்தடத்திற்கு என்று ஒரு தொகுப்புக் கட்டுரையா?....என்று வியப்பாக இருக்கலாம்!...இது சாதாரண ரயில் பாதை அல்ல.....வித்தியாசமானதும், சிறப்பானதும் கூட!

Updated On : 29 ஜூலை, 2018 at 3:25 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:52 PM

ரயில் வழித்தடத்திற்கு என்று ஒரு தொகுப்புக் கட்டுரையா?....என்று வியப்பாக இருக்கலாம்!...இது சாதாரண ரயில் பாதை அல்ல.....வித்தியாசமானதும், சிறப்பானதும் கூட!

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்ல 3 முக்கியமான ரயில் வழித்தடங்கள் உள்ளன. 

1.கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்வது.
2.நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்வது.
3. செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்வது.

Advertisement

இதில் முதல் இரண்டு ரயில் பாதைகளும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள செங்கோட்டை புனலூர் மீட்டர்கேஜ் பாதை மட்டும் அகல ரயில் பாதையாக மாற்றப் படுவதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி மூடப்பட்டது. 

இப்பொழுது அந்த மார்ச் 30 ஆம் தேதி சோதனை ஓட்டமாக தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரயில் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டது. 
 
.....எப்பொழுதுமே ரயில் பயணம் என்பது சுகமான பயணம்தான். அதிலும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலத்தின் புனலூருக்கு இந்த வழித்தடத்தில் ரயில் பயணிப்பது புதுமையான அனுபவத்தை தரும் சுகமான பயணம்! 

இந்தப் பயணத்தில் நாம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் கிழக்குப் பக்கத்திலிருந்து, (தமிழகம்) .... மேற்குப் பக்கத்திற்கு (கேரளப் பகுதி)கடந்து சென்று விடுவோம்.

இப்பயணத்தின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதுடன், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைகள், மலைகளை இணைத்துச் செல்லும் பாலங்கள் என, பயணமே மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள சிறப்பான இயற்கைக் காட்சிகள் கொண்ட ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று!

மீட்டர்கேஜ் பாதையின் தொடக்கம்!

செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு இடையிலான 49.38 கி.மி. தூரத்திற்கு ரயில் பாதையை ஏற்படுத்த 1873 இல் அப்போதைய ஆங்கிலேய  அரசால் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு சென்னை மாகாண அரசு 17 லட்சம் ரூபாயும், ரயில்வே துறை 7 லட்சம் ரூபாயும், மற்றும் திருவிதாங்கூர் அரசு  8 லட்சம் ரூபாயும் வழங்கின. (அக்காலத்தில் இந்தத் தொகை மிக மதிப்பு மிக்கதாகும்!)  

பணிகள் தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்து 1901 இல் முடிக்கப்பட்டது.  1902 இல் சரக்குப் போக்குவரத்து துவங்கப்பட்டது. பின்னர் 1904 இல் நவம்பர் 24ஆம் தேதி 21 குண்டுகள் முழங்க கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு முதல் பயணிகள் ரயில் புனலூர் வழியாக இயக்கப்பட்டது. அதன்பின் இந்த வழித்தடத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கின.  அகல ரயில் பாதைக்கான பணிகள் 2011 இல் இருந்து நடைபெற்று தற்போது முடிவடைந்து விட்டது. 

இருந்தபோதிலும் செங்கோட்டை மற்றும் புனலூர் ரயில் நிலையங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த 50 கி.மீ. தூரம் மட்டும் பணிகள் முடிவடையாததால் ரயில்கள் இயக்கப்படவில்லை.  

இப்போது சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் இந்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதத்தில் இருந்து (தாம்பரம் - கொல்லம்) ரயில்கள் இயங்குகிறது.

செங்கோட்டை புனலூருக்கு இடையிலான 49.38 கி.மீ.  தூரத்தில் 13 கி.மீ. தமிழகப் பகுதியிலும் 36.38 கேரளப் பகுதியிலும் உள்ளது.

செங்கோட்டை ரயில் நிலையத்தைத் தொடர்ந்து பகவதிபுரம், ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, எடப்பாளையம், கல்துருத்தி, தென்மலை, ஒத்தக்கல், எடமண் ஆகிய ரயில் நிலையங்களைக் கடந்து புனலூர் ரயில் நிலையம் வரும்! 

குகைகளும், பாலங்களும்!

இந்த இடைப்பட்ட 49.38 கி.மீ. தூரத்திற்கான ரயில் பாதையில் ஏற்கனவே இருந்த நூற்றாண்டை கடந்த 5 குகைகளுடன், புதிதாகக் குடையப்பட்ட ஒரு குகையும் சேர்ந்து 6 குகைகளும், 23 பெரிய பாலங்களும், 178 சிறிய பாலங்களும் உள்ளன. 

யோசித்துப் பாருங்கள்!  இப்பகுதி எப்படியிருக்கும் என்று!....

பிரமிக்க வைக்கும் குகைகள்!

பகவதிபுரத்தை அடுத்து உள்ள "புளியரை' என்ற இடத்தின் தரைப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான சாலை, ..."ந'... வடிவில் வளைந்து செல்லும்.  இந்த சாலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ரயில் செல்லும். 

இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் முதல் குகை வரும். இது ஆரியங்காவு பகுதிக்குச் செல்வதற்காகக் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. 900 மீ. நீளம் கொண்ட இந்த குகைப் பாதையில் 180 மீ. மட்டும் தமிழக எல்லைக்குள் வரும். இந்த குகையில் தேவையான அகலம் இருந்த போதும் உயரம் குறைவாக உள்ளதால், தற்போது குகையை மேற்புறமாகக் குடைந்து உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

"கழுதுருட்டி' யினை ரயில் கடந்து சரியாக 1 கி.மீ. தூரம் செல்லும்போது, இந்த பாதையின் பெரிய பாலம் வரும்! கழுத்துருட்டி 13 கண் ரயில் பாலம்தான் அது. 150 மீ. நீளமும், 60 அடி உயரமும் உள்ள இப்பாலம், 13 ஆர்ச் முகப்புகளுடன் (வளைவு) 12 பெரிய தூண்களுடனும் பிரமாண்டமாய் இருக்கும்! இந்த பாலம் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாலத்தில் இருந்து 50 மீ. தூரத்திலேயே இரண்டாவது குகை வந்து விடும்! 102.72 மீ.  நீளம் கொண்ட இந்தக் குகைக்கு 100 மீ.  தூரத்தில் மூன்றாவது குகை உள்ளது! இது 80 மீ. நீளம் கொண்டது.  

இதனை அடுத்து தென்மலைக்கு முன்பாகவே சுமார் 200 மீ. நீளத்திற்கு புதிய குகை அமைக்கப்பட்டுள்ளது.  தென்மலையிலிருந்து 500 மீ. தூரத்தில் ஐந்தாவது குகை உள்ளது. 125 மீ. நீளம் கொண்ட இந்த குகைப் பாதை வளைந்து செல்லும். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் "உருகுன்னு' என்ற இடத்தில் 6 ஆவது குகை உள்ளது! இவ்வூருக்கு அருகிலேயே உயரமான இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் 200 அடி உயர கல்பாலம் உள்ளது. 

இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கற்பகாலங்கள் மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டவைதான்.  இவற்றை எல்லாம் கடந்தபின். அழகிய மலைகளின் நடுவே ரயில் சென்று புனலூர் ரயில் நிலையத்தை அடைகிறது.  

இப்பாதையில் "கழுதுருட்டி' யில் இருந்த ஒரே ரயில்வே கேட்டும் தற்போது அகற்றப்பட்டு விட்டது.அவ்விடத்தில் ரயில்வே தண்டவாளத்திற்கு வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த 49.38 தூர ரயில் பாதையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளது. இதில் 52 வளைவுகள் 10 டிகிரியிலும், 5 வளைவுகள் 12.3 டிகிரியாவும் உள்ளது. அதனால் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்தான் ரயில்கள் செல்லும்!

இதனை அகல பாதையாக மாற்றுவதற்காக பல இடங்களில் மலைகள் வெடிவைத்துத் தகர்த்தப்பட்டும், குடையப்பட்டும், பாலங்கள் சீரமைக்கப்பட்டும், பாறைகளும், மணலும் அகற்றப்பட்டும் பெரும் சவால்களுக்கு இடையில் பணிகள் நடந்துள்ளது. இதற்காக 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

தென் தமிழகத்தின் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோயில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர் கொல்லம் பகுதிகளுக்கு செல்லும் சரக்குகளும் இத்தடத்தில்தான் முன்பு போல், இனிமேலும் கொண்டு செல்லப்படும். 
 இனி வரும் நாட்களில் திருநெல்வேலி பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ரயில் பயணத்தையும் திட்டமிட்டு வருவது நல்லது! 

50 கி.மீ. தூரத்திற்குள் கம்பீரமான மலைகள், அழகிய பசுமையான மலைச்சரிவுகள், மனதைக் கவரும் பள்ளத்தாக்குகள், சலசலவென தவழ்ந்தோடும் சிறு நீரோடைகள், விதவிதமான பாலங்கள், திகைப்பூட்டும் குகைகள் என வியப்பையும், மகிழ்ச்சியையும் ஊட்டும் இனிய பயணமாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.