மாம்பழத்தின் பின்னணி!: ஞானக்கிளி!
ஞானம் வந்ததும் அதன் பார்வையில் ரகுமான் நின்றான். அவன் ஒவ்வொருவருக்கும் ஒரு மாம்பழம் கொடுத்தான்.
ஞானம் வந்ததும் அதன் பார்வையில் ரகுமான் நின்றான். அவன் ஒவ்வொருவருக்கும் ஒரு மாம்பழம் கொடுத்தான்.
பாத்திமா சொன்னாள்...""அவனுக்கு ஒரு பெரிய மாந்தோப்பு
உள்ளது...''
""அதைவிட அவன் உள்ளம் பெரியது!...மகிழ்ச்சியோடு தருகிறானே...'' ஞானம் அவனை வாழ்த்தியது.
""அக்கா!....இந்தப் பழம் உனக்கு!...உள்ளங்கையில் வைத்து நீட்டினான். அலகால் கொத்தி சுவை பார்த்தது.
""இன்று ரகுமான் நமக்கு ஏதாவது சொல்வான்!....கேட்போம்...''
""நான் எதற்கு மாம்பழம் தந்தேன் தெரியுமா?...''
எல்லோரும் ஆவலாய் இருந்தார்கள்.
""உடல் நலமில்லாமல் இருந்த என் தங்கை ஆயிஷா குணமாகிவிட்டாள்!''
""ஏன்? அவள் உடம்புக்கு என்ன?''
""முகமெல்லாம் வாடிப்போனது....உடல் சோர்ந்து போனது....காய்ச்சல் வந்ததைப் போலப் படுக்கையில் விழுந்து விட்டாள்....மருத்துவர் வந்தார் சோதித்தார்...''....
""அவர், ... "இவளுக்கு உடம்புக்கு எதுவுமில்லை....மனத்தளவில் ஏதோ பரபரப்பு!....இவளோடு பழகும் தோழி யார்?...அவளை நான் பார்க்க வேண்டும்...'' என்றார். ஆயிஷாவின் தோழி அருளம்மை. நான் அவரோடு அங்கே போனேன். அவளுக்குக் காய்ச்சல்....ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது. ஏழைக் குடும்பம். மருத்துவர் அவளுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்தார். நம்பிக்கையோடு அவளிடம் பேசினார்.
எங்கள் அப்பா பணம் கொடுத்தும் அவர் வாங்கவில்லை. ""இது எனக்கு ஒரு புண்ணியம்...'' என்று முகமலர்ச்சியோடு சொன்னார்.
அப்பாவும், அம்மாவும் நானும் பழங்கள், பேரீச்சை, பாதாம்பருப்பு, சிறு தானிய சத்துமாவு என்று வாங்கிக்கொண்டு அருளம்மை வீட்டுக்குப் போனோம்.
இரண்டு நாளில் அவள் ஆயிஷாவைத் தேடி வந்தாள். இருவரும் கைகோர்த்தவாறு பள்ளிக்குச் சென்றார்கள்.
ரகுமான் தந்த மாம்பழத்தின் பின்னணி எல்லோருக்கும் தெரிந்தது.
""இருவரும் உயிருக்குயிராகப் பழகி இருக்கிறார்கள்...'' என்றது ஞானம்.
""அக்கா, நீ சொன்னது சரி. தினமும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வார்கள். படிப்பார்கள். உண்பார்கள். விளையாடுவார்கள். மரத்தடி நிழலில் கதை பேசுவார்கள். வீட்டுக்குத் திரும்புவார்கள். ஆருளம்மைக்கு உடம்பு சரியில்லை என்றதும் ஆயிஷாவும் மனத்தளவில் சோர்ந்து விட்டாள். அவளுடைய முகத்தைப் பார்க்காமல் உண்ணவும் பிடிக்காமல் உடலும் சோர்ந்து விட்டாள்...'' என்றான் ரகுமான்.
""இதுதான் நல்ல நட்புக்கு அடையாளம். நல்ல நண்பர்கள் தங்கள் நலனைவிடத் தங்களோடு பழகும் நண்பர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆயிஷாவுக்கு வாழ்த்துக்கள்!....உங்கள் பெற்றோர்களின் நற்குணம் வாழ்க....அந்த நல்ல மருத்துவர் வாழ்க!....''
எல்லோரும் பலத்த கையொலி எழுப்பினார்கள்! ஞானம் ரகுமானின் தோளில் வந்து அமர்ந்தது.
அவன் தந்த மாம்பழம் எல்லோருக்கும் இனித்தது. மாந்தோப்பில் மகிழ்ச்சிக் காற்று வீசியது.
தொடரும்....