அரங்கம்: ஆமை!
( நதிக் கரையில் உள்ள உள்ள முனிவர் குலகுருவிடம் ஆசி வாங்கவும் முக்கிய வழக்கு ஒன்றைப் பற்றிய ஆலோசனைக்கும் ஆசிரமம் நோக்கி மன்னர் அவசரமாகத் தேரில் விரைகிறார்)
காட்சி - 1
இடம் - ஆசிரமம், மாந்தர் - மங்களபுர நாட்டு மன்னர் தருமசேனர்,
ரோட்டி தினகரன் இடம் - தலைநகரை ஒட்டிய பிரதான சாலை
( நதிக் கரையில் உள்ள உள்ள முனிவர் குலகுருவிடம் ஆசி வாங்கவும் முக்கிய வழக்கு ஒன்றைப் பற்றிய ஆலோசனைக்கும் ஆசிரமம் நோக்கி மன்னர் அவசரமாகத் தேரில் விரைகிறார்)
தருமசேனர்: தினகரா.. சீக்கிரம். கொஞ்சம் விரைவாகப் போ. இன்று பெளர்ணமி. சூரியன் உதயமாகி விட்டால் முனிவர் காசி யாத்திரைக்குக் கிளம்பி விடுவார். அதற்குள் அவரிடம் முக்கிய ஆலோசனை செய்ய வேண்டும்.. அவர் கிளம்பி விட்டால் வர ஆறு மாதம் ஆகும்.
(மன்னர் ஒரு முக்கிய வழக்கில் தீர்ப்பு என்ன சொல்வது என குழப்பத்தில் இருக்கிறார். அது ஒரு வியாபாரி, வேடன் சம்பந்தமானது)
தினகரன்: அப்படியே மன்னா!....
(சாட்டையை விண்ணில் சொடுக்குகிறான். "சுளீர், சட், சரக்' என சத்தம் கேட்ட குதிரைகள் தேரோட்டி குறிப்பு அறிந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடுகின்றன.. மன்னர் தன் அங்க வஸ்திரத்தை கழுத்தின் முன்புறமாக போட்டுக்கொள்கிறார்.அது காற்றில் பின்னோக்கி பறக்கிறது)
(சிறிது தூரத்தில் ஒரு திருப்பம். வளைந்து ரதம் திரும்ப....)
தருமசேனர்: தினகரா.. நிறுத்து, நிறுத்து!.... உடனே நிறுத்து!.....
(மன்னரின் கூச்சலைக் கேட்ட தினகரன்
கடிவாளத்தினை இழுத்து காலை ஊன்றி பின் பக்கம் சாய்ந்த படி இழுக்கிறான். குதிரைகள் அப்படியே முன் கால்களைத்தூக்கியபடி பின் காலை தரையில் அழுத்தி நின்று லேசாகக் கனைக்கின்றன)
மன்னர் வேகமாக இறங்கி ரதத்தின் முன் சென்று தரையில் குறுக்கே சாலையைக் கடந்த சில ஆமைகளை மெல்லத் தூக்குகிறார்.
தினகரன்: மன்னா என் கண்ணில் படவில்லையே.. உங்கள் பார்வை கூர்மையானது. ரதம் சென்றிருந்தால் ஆமைகள் நசுங்கி இருக்கும்.
(தருமசேனர் ஒவ்வொருஆமையாகக் கையில் ஏந்தி சாலையைக் கடக்க அவை முயற்சித்ததை உணர்ந்து சாலைக்கு மறுபுறம் உள்ள குளக் கரையில் ஒவ்வொன்றாக வைக்கிறார். பின் ரதத்தை நோக்கி நடக்கிறார். அப்போது பெரிய ஆமை ஒன்று மெல்ல அவரைத் தலை தூக்கிப் பார்க்கிறது)
மன்னர்: ம்.. ரதம் விரையட்டும்!.....
காட்சி - 2
இடம் - முனிவர் ஆசிரமம். மாந்தர் - மன்னர், சீடன், தினகரன், ஒரு ஆமை.
(மன்னரின் ரதம் குடிசையை அடையவும் சூரியன் உதிக்கவும் சரியாக இருக்க,
முனிவர் படகில் ஏறி நதியைக் கடந்து போய்விட்டார். அவர் சென்ற காலி படகு திரும்ப வந்துவிட்டது.)
மன்னர்: முனிவரின் சீடனிடம் . "அப்பா முனிவர் எப்போது கிளம்பினார்?.....'
சீடன்: ஒரு நாழிகை ஆகிறது அரசே. போகுமுன் இந்த ஓலையைத் தங்களிடம் தரச் சொன்னார்.
(அதில் "ஆமை விடை சொல்லும்' என ஒரு குறிப்பு இருந்தது.)
மன்னர்: (மனதுக்குள்) .... சே ஆமை குறுக்கிட்டதால் முனிவரிடம் கலந்து ஆலோசிக்க முடியவில்லையே....
(குளக்கரையில் ரதம் திரும்பி வரும் போது ஒரு பெரிய ஆமை வழி மறிப்பது போல சாலையில் இருந்து தலையை நீட்டி ஆட்ட....மன்னர் இறங்குகிறார்......ஆமை தன் காலால் தரையில் ஏதோ கிறுக்குகிறது.....மெல்லப் படிக்கிறார் - "புறாக்கள் விடை சொல்லும்' என கிறுக்கலாக எழுதி விட்டு அது குளக்கரையை நோக்கிப் போனது.)
மன்னர்: தினகரா,..... அரண்மனைக்குத் திரும்பு!.... போகலாம்....
(ரதம் அரண்மனை நோக்கிப் பயணிக்கிறது)
காட்சி 3,
இடம் - ஏரிக்கரையில் ஒரு மரத்தின் அடி, மாந்தர் - மன்னர், அமைச்சர்.
(ஏரிக்கரை ஓரமாக நடக்கிறார்கள்.)
அமைச்சர்: வழக்கு விசாரணை முடிந்து விட்டது மன்னா!... வியாபாரி மகிபாலன் நெஞ்சில் அம்பெய்தவன் வேடன் வில்லவன்தான்!....கொள்ளை அடிக்கவே அவன் இக்காரியத்தை செய்திருக்கிறான். மரத்தடியில் படுத்திருந்த வியாபாரி மகிபாலன் நெஞ்சில் அம்பு பாய்ந்து படுகாயம் அடைந்து விட்டாரே!.... இதில் சந்தேகமே இல்லை. வில்லவன் தண்டனைக்குரியவன். விசாரணைக் குழு நன்கு தீர ஆராய்ந்து விட்டோம்.
மன்னர்: இல்லை அமைச்சரே. எனக்கு ஏதோ கொஞ்சம் உதைக்கிறது. மகிபாலனைக் காயப்படுத்திய அம்பு வேடனுடையதே. அதில் சந்தேகமில்லை. அந்த அம்புக் கூர் முனையில் வி என்ற எழுத்து வேடன் வில்லவன் அம்பு தான் எனச் சொல்கிறது. வேடனும் அவனுடையது என ஒப்புக் கொண்டான். ஆனால் வியாபாரி படுத்திருந்த இடத்துக்கு அவன் வரவே இல்லை. அன்று பக்கத்து மலை நாட்டில் தேன் சேகரிக்கப் போயிருக்கிறான். அதை நான் ஒற்றர்கள் மூலம் விசாரித்து விட்டேன்!.....'
அமைச்சர்: ஆச்சரியமாக இருக்கிறதே!..... நீங்கள் வழியில் பார்த்த ஆமை, புறாக்கள் விடை சொல்லும் எனச் சொன்னதாகச் சொல்கிறீர்களே.
மன்னர்: இதோ இந்த மரத்தடியில் தானே வியாபாரி மகிபாலன் படுத்திருந்தார்.
அமைச்சர்: ஆம் மன்னா!
(அப்போது அங்கு மன்னர் மரக் கிளையில் ஒரு ஜோடிப்புறாக்களைப் பார்க்கிறார். ஆமை எழுதியதே,....."புறா விடை சொல்லும்'.... என.....அவை மெல்ல பேசுவதை மன்னர் கூர்ந்து கவனிக்கிறார். அமைச்சரிடம் "ஷ்' என சைகை காட்டுகிறார். புறாக்களின் பாஷை தெரிந்தவர் மன்னர்!.... மன்னரும் அமைச்சரும் புறாக்களின் கண்களில் படாமல் மறைந்து கவனிக்கிறார்கள்.)
பெண் புறா: என்னங்க.. நாம செஞ்ச தப்பால் ஒரு வேடனைத் தண்டிச்சிடுவார் போலிருக்கே மன்னர்.
ஆண்புறா: நாம என்ன பண்றது?.... இலைகளில் கொம்பு இடுக்கில் செருகி இருந்தது வேடன் என்றோ விட்ட அம்பு. அதன் மீது நீ உட்கார்ந்ததும் உச்சியில் இருந்து நழுவி கீழே பாய்ந்தது. நேராகக் கீழே படுத்திருந்த வியாபாரி நெஞ்சில் தைத்துக் காயப்படுத்தி விட்டது. அம்பில் இருந்த எழுத்தை வைத்து வேடனைத் தேடி சிறையில் அடைத்து விட்டார்கள். நாளை தீர்ப்பில் தண்டிக்கப் போகிறார்கள். வேடன் அப்பாவி. பாவம். பிள்ளை குட்டிக் காரன்.
பெண் புறா: ம் விதி வலியது. (இரண்டும் சிறகடித்துப் பறக்கின்றன.)
மன்னர்: நல்ல வேளை... பெரும் தவறு செய்ய இருந்தோம். கொள்ளையர்களுக்கு நம் நாட்டில் தரும், கடும் தண்டனையை வேடனுக்குத் தர எல்லோரும் முடிவெடுத்தீர்கள் அல்லவா.?
அமைச்சர்: ஆம் மன்னா. தவறு செய்ய இருந்தோம்.
மன்னர்: நிதானம் முக்கியமல்லவா. அதனைத்தானே நம் நாட்டின் சின்னமான ஆமைக் கொடி குறிக்கிறது. ஒருமையில் ஆமை போல் என வள்ளுவரும் அடக்கத்துக்கு ஆமையைத்தானே சொல்கிறார்.
அமைச்சர்: மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மாவதாரம். தெய்வாம்சம் பொருந்தியதாச்சே ஆமை.
காட்சி 4,
இடம் - பாதாளச் சிறை, மாந்தர் - அமைச்சர், சிறைக் காவலன்,
வேடன் வில்லவன்.
(வேடன் விடுதலை செய்யப் படுகிறான்)
அமைச்சர்: (வேடனிடம்) இந்தாப்பா. நீ குற்றமற்றவன். போ வீட்டுக்கு. இனி ஆமை, புறாக்களை வேட்டையாடாதே!.....அவற்றால் தான் உனக்கு விடுதலை.
வேடன்: (ஒன்றும் புரியாமல் விழிக்க..). ஐயா.. ஆமைக் கொடி நமது நாட்டின் சின்னமல்லவா. இனி ஆமை, புறா மட்டுமல்ல..... எந்த உயிரையும் வேட்டையாட மாட்டேன். விவசாயம் கூலி வேலை செய்து பிழைப்பேன். தேன் எடுத்து விற்பேன். மரம் வெட்டி விறகு விற்பேன். ஆயுதங்களைத் தொடேன்.
அமைச்சர்: இந்தா மன்னர் அளித்த இந்த பொன் முடிப்பை வைத்துக்கொள்.. போ.
(வேடன் வணங்கி விடை பெறுகிறான்)
சிறைக் காவலன்: ஏ வில்லவா!.... என்ன, வில் அம்பை வச்சு மறந்துட்டுப் போறே?..... எடுத்துப் போ!.....
வேடன் வில்லவன்: இல்லீங்க ஐயா.. இனி கலப்பை தான் என் ஆயுதம்!
திரை