கதைப் பாடல்: பயம் எதற்கு?
தெள்ளத் தெளிந்த அறிவிருக்குதேர்வைக் கண்டு பயமெதற்கு?
தெள்ளத் தெளிந்த அறிவிருக்கு
தேர்வைக் கண்டு பயமெதற்கு?
துள்ளித் திரிந்து விளையாடு
துணிவாய்ப் பாடம் படித்துவிடு!
நிறைய இருக்கு படிப்பதற்கு
நீண்ட உறக்கம் உனக்கெதற்கு?
மறதியை நீயும் நீக்கிவிடு
மனதில் பயத்தைப் போக்கிவிடு!
ஆழ்ந்த அறிவு உனக்கிருக்கு
ஐயம் அதிலே உனக்கெதற்கு?
வாழ்வில் வெற்றியை உனதாக்கு
வென்றிட உழைப்பை உரமாக்கு!
உள்ளம் தெளிந்த நீரோட்டம்
உனக்குள் எதற்குப் போராட்டம்!
முள்ளைக் கண்டு அஞ்சாதே!
மலரைப் பறிக்கத் தயங்காதே!
ஆற்றல் உனக்குள் மிகுந்திருக்கு
ஆசான் சொல்லும் துணையிருக்கு
காற்றை வேலி தடுத்திடுமா?
கடின உழைப்பு தோற்றிடுமா?
வியர்வைத் துளிக்கோர் விலையில்லை!
வெற்றியும், தோல்வியும் நிலையில்லை!
உயர்வு என்பது மனத்தளவு
உரைத்த வள்ளுவன் குறள் கேளு!