பாராட்டுப் பாமாலை! - 4
புதுவையைச் சேர்ந்த பனித்திட்டில் புதியன எண்ணும் மாணவர்கள்வெப்பம் புவியில் உயர்வதனால்
புதுவையைச் சேர்ந்த பனித்திட்டில்
புதியன எண்ணும் மாணவர்கள்
வெப்பம் புவியில் உயர்வதனால்
விளையும் தீமையைச் சிந்தித்தார்!
இன்னும் எண்பது ஆண்டுகளில் - கூடும்
மூன்று செல்ஷியஸ் கடும் வெப்பம்!
இதனால் ஏறும் கடல் மட்டம்...
இறப்பு உயரும் விளைச்சல் குறையும்!
பூமி அழிந்தால் எங்கே போவது?
புதிய தலைமுறை எப்படி வாழ்வது?
காண்போம் இதற்கு ஒரு தீர்வு - எனக்
களத்தில் இறங்கின அரும்புகள் ஐந்து!
முகுந்தன், ஹரிணி, பரணி, தரணி
மகாவிஷ்னி, சுவேதா என்போர்
ஆர்வத்தோடு ஒர் அணி சேர்ந்தனர்
ஆசிரியை ஜான்சி துணையாக நின்றார்!
மண்ணின் வெப்பம் குறைக்கக் கூடிய - நல்ல
மரங்கள் எவையெனக் காணத் தொடங்கினர்!
மரங்களைக் கொண்டே பூமிக்கு நிழற்குடை
மண்ணில் அமைந்திட முடிவு செய்தனர்
பூமியின் வெப்பம் பெரிதும் குறைப்பவை
பூவரசு, மகிழம், ஆலம், அரசு,....
மாமரம், வேம்பு... என்பதை அறிந்தார்!
மனத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியை அடைந்தார்!
உலகை மாற்ற நினைப்பவர் முதலில் - தம்
ஊரில் அப்பணி தொடங்குதல் மேன்மை!
பலமரம் நட்டனர் அப்பனித் திட்டில்!
பார்த்தனர் ஊரார்....பாராட்டி மகிழ்ந்தனர்!
உணர்வுடன் மாணவர் தொடங்கிய தொண்டில்
உதவிக்கு வந்தார் உள்ளூர் இளைஞர்....
சிவ சக்கர வர்த்தி....செயலில் உண்மை!
சிறுவர் படைக்குச் சேர்த்தார் வலிமை!
அகமதாபாத்தில் சிறுவர்க்காக
அண்மையில் நடந்தது அறிவியல் மாநாடு!
விருதுகள் பெற்றார் பூமியின் காவலர்! - அவர்க்குத்
தருவோம் வாழ்த்திப் பாமாலை ஒன்று!