முகப்பு
சிறுவர்மணி

மகிழ்ச்சிக்குப் பின்னால்....  

"பாபு,...நான் இங்கே வரும் வழியில் ..."டமால்!...டமால்!' என்று சத்தம்!.... புகை மண்டலம்!....மிகவும் கவனமாகப் பறந்து வந்தேன்!.''

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

ஞானக்கிளி! 25
 ஞானம் மரக்கிளையில் வந்து அமர்ந்தது.
 அருகே பாபு நின்றான்.
 "பாபு,...நான் இங்கே வரும் வழியில் ..."டமால்!...டமால்!' என்று சத்தம்!.... புகை மண்டலம்!....மிகவும் கவனமாகப் பறந்து வந்தேன்!.''
 "அக்கா!...தீபாவளிப் பண்டிகை வருகிறது!....பிள்ளைகள் முன்பே அதற்குத் தயாராகி வெடிகளை கொளுத்துகிறார்கள்!.... புஸ்வாணம், சங்கு சக்கரம், ராக்கெட் என்று விதவிதமாக வைத்திருக்கிறார்கள்!....சத்தத்துக்கும், புகைக்கும் அதுதான் காரணம்!....
 எல்லோரும் வந்துவிட்டதை ஞானம் உறுதிப்படுத்தியது.
 "தங்கமணி ஐயா, ஒரு வாரமாக ஒரு செய்தியை மீண்டும், மீண்டும் சொன்னார். அதை உங்களுக்கு நான் சொல்கிறேன்.''
 "அப்படி என்ன செய்தி அது?''
 எல்லோரும் ஆவலாக இருந்தார்கள்!
 "நான் வருகிற வழியில் குடிசை வீடுகளும் கொட்டகைகளும் இருந்தன. இந்த வெடிகளால் ஏற்படுகிற தீப்பொறி அங்கே போய் விழுந்தால் என்ன ஆகும்?...''
 "அங்கே வாழுகிறவர்கள் உயிருக்கே ஆபத்தாயிற்றே!...'' எல்லோரும் குரல் கொடுத்தார்கள்.
 " அதைத்தான் தங்கமணி ஐயா சொன்னார். நமக்கு இது விளையாட்டாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் அந்த ஏழைகளுக்கு?...இதுவரை உழைத்துத் தேடியதெல்லாம் ஒரு நொடியில் ஒரு நெருப்புப் பொறியில் அழிந்து விடுமே!....அவர்கள் வெய்யிலிலும், மழையிலும் நின்று துன்பப்படுவார்களே.... கண், காது, மூக்கு, என்று உறுப்புகளுக்கும் ஆபத்தாயிற்றே!....''
 ஞானம் சொன்னதை பிள்ளைகள் ஒரு நிமிடம் சிந்தித்தார்கள்.
 "அந்தக் குடிசைகளில் இருந்து பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் புத்தகங்களும், நோட்டுக்களும் தீக்கு இரையாகிவிடுமே!....'' என்றான் பீட்டர்!
 ஞானம் ஒன்றை நினைவு படுத்தியது. "அன்றே பெரிவர்கள் சொல்வார்கள்....""காசைக் கரியாக்காதே!' என்று!...இது போன்ற பண்டிகைகளில் பழங்கள் வாங்கலாம். நல்ல நூல்கள் வாங்கலாம்....மற்றவர்களுக்கும் தரலாம். உடம்புக்கும் நல்லது!....அறிவு வளர்ச்சிக்கும் நல்லது!... பணம் பயனுள்ள விதத்தில் செலவானது என்ற மன நிறைவும் ஏற்படும். மிச்சமான தொகையைச் சேமிக்கவும் செய்யலாம்...''
 "அக்கா!....இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்து விடுமா?'' ... பாத்திமா கேட்டாள்.
 "சிறிய பிள்ளைகள் மத்தாப்பு,....வாணம் என்று ஆசைப்படுவார்கள்....அவர்களுடைய ஆசைக்கு ஒரே நாளில் தடை போட முடியாது. வளர, வளர அவர்களே மாறுவார்கள். வளர்ந்த பிள்ளைகள் சிந்தித்துப் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய கொண்டாட்டம். மற்றவருடைய வேதனையாக மாறக்கூடாது.
 ஞானத்தின் கருத்துக்கள் பிள்ளைகளைச் சிந்திக்க வைத்தன. அவற்றுக்குச் செயல் வடிவம் தரவும் முடிவு செய்தார்கள்!
 கிளி வரும்....
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.