முகப்பு
சிறுவர்மணி

இயற்கையின் நண்பன்! 

ஞானம் வந்து அமர்வதற்கு முன்பே பாபு தயாராக நின்றான்."அக்கா!....உனக்கு என்ன பிடிக்கும்?'' 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

ஞானக்கிளி 16

ஞானம் வந்து அமர்வதற்கு முன்பே பாபு தயாராக நின்றான்.
"அக்கா!....உனக்கு என்ன பிடிக்கும்?''
"உங்க எல்லாரையும் ரொம்பப் பிடிக்கும்!...''
"அப்புறம்?''
"மரங்கள் பிடிக்கும்...''
"எங்கள் வாழ்வுக்கும் உங்கள் வாழ்வுக்கும் ஆதாரமே அவைதானே....நான் சொல்லப்போறதும் மரத்தைப் பற்றித்தான்!...''
ஞானத்தின் கண்களில் மகிழ்ச்சியான ஒளி தெரிந்தது!
"எங்கள் பள்ளியிலே அதியமான் என்று ஒரு மாணவன்...''
உடனே ஞானம், "அதியமான்னு ஒரு வள்ளல்...அவன் ஒüவைப் பாட்டிக்கு ஒரு நெல்லிக்கனி கொடுத்தானே....அதன் சிறப்பு என்ன?''
"அதை உண்டவன் நீண்ட நாள் வாழலாம்...'' பல குரல்களில் பதில் வந்தது!
"நீங்கள் தோற்றத்தில் குழந்தைகள்!....ஆனால் அறிவில் பெரியவர்கள்!....எனக்குத் தங்கமணி ஐயா சொன்ன தகவல்கள் எல்லாம் உங்கள் விரல் நுனியிலே துள்ளுதே!...'' அது தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது. 
பாபு தொடர்ந்தான்.....
"அதியமான் எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தான். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டான். அவனுக்கு இன்றைக்கு ஒரு பாராட்டு விழா!...''
அன்று பள்ளிக்குப் போகாத ரகுமான், "அதியமான் அதிகமான மதிப்பெண் வாங்கிவிட்டானோ' என நினைத்தான். 
"அதியமான் பள்ளியில் சேர்ந்த உடனேயே பள்ளி வளாகத்தில் ஒரு மஞ்சள் கொன்றை மரக்கன்றை நட்டான். தினம் என்ன வேலை இருந்தாலும் ஒரு சிறிய வாளியில் அதற்குத் தண்ணீர் ஊற்ற மறக்கமாட்டான். 
அந்தக் கன்று வளர்ந்து இன்று பெரிய மரமாகிவிட்டது! மஞ்சள் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கின்றன. அவனுக்கு மகிழ்ச்சி! அந்த மரத்துக்கு மகிழ்ச்சி! பள்ளியில் எல்லோருக்கும் மகிழ்ச்சி!
அதற்காக அவனுக்குப் பாராட்டு! அவன் தேர்விலும் நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறான்!...
ஞானம் அந்த நல்ல செய்தியால் ஆனந்தம் அடைந்தது! பிள்ளைகளின் முகங்களும் மலர்ந்தன. 
"இயற்கையின் நண்பனான அவனை நாமும் பாராட்டுவோம்! "என்னால் பள்ளி பெருமையடைய வேண்டும்....பள்ளியால் நான் பெருமை அடைய வேண்டும்' என்பதற்கு இந்த அதியமான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு....அவன் வழி 
நல்வழி....அதுவே நம் வழி!''
ஞானத்தின் மொழி, அதியமான் உயர்வை அவர்களுடைய உள்ளங்களில் ஆழமாய் பதித்தது!
கிளி வரும்....
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.