சிறுவர்மணி

கதைப் பாடல்: சாலை விதிப் பாடல்

பி. வெங்கட்ராமன்

பிறந்து வளர்ந்து வாழ்வது
பெரிய செயல் அல்லவாம்
சிறந்து உணர்ந்து நடப்பதே
சிறப்பு வாழ்வு ஆகுமாம்!

சாலச் சிறந்து வாழ்ந்திட
சற்றே இங்கு நோக்குவீர்
சாலை விதிகள் அனைத்துமே
சரியாய் புரிந்து கொள்ளுவீர்!

பாது காப்பு உணர்வினை
பெரிதும் நீங்கள் கொள்ளுவீர்
ஏதும் அறியா திருந்திட்டால்
ஏற்படும் விளைவைக் கண்டிடுவீர்!

முன்னும் பின்னும் பார்க்காது
முண்டி யடித்து விரைவதுமே
இன்னும் பலவாம் குறைகளையே
இன்றே நீங்கள் நீக்கிடுவீர்!

 நன்றே வலது பக்கமதில்
நடப்பது நல்ல வழக்கமதாம்
நன்கே எதிரில் வருவதையும்
நன்கு பார்த்து நடந்திடலாம்

உரிய நடைப் பாதையிலே
உற்ற வகையில் நடந்திடுவீர்
அரிய சாதனை வீரமென
அறவே குறுக்கே விரையாதீர்!

வாழப் பிறந்த உங்களுக்கு
வாழ்வில் அக்கறை கொண்டிடுவீர்
வாழைப் பழத்தோல் கண்டுவிட்டால்
வீசித் தூக்கி எறிந்திடுவீர்!

அருகில் வரும் வாகனத்தின்
அலறும் பெருத்த ஒலிகேட்டு
மருகி மருண்டு ஓடுவது
மடமை தவிர வேறல்ல

கூடிப் பலரும் சைக்கிளிலே
கும்ப லாகச் செல்லுவதோ?
நாடி வரும் விபத்திற்கு
நாமே வழி வகுப்பதுவோ?

வீதி திரும்பும் விளைவினிலே
வேக உணர்வை கொள்ளாதீர்
விதியின் பயங்கர கொடுமைக்கு
வீணாய் வீழ்வது முறையாமோ?

சாலைப் பண்பு கொண்டிடுவீர்
சகதி மிகுந்த மழையினிலே
காலை ஊன்றி நடந்தேதான்
கடந்து செல்ல முயன்றிடுவீர்!

குறித்த நேரம் தவறவிட்டு
காலம் கடந்து செய்வதனால்
வெறித்த வேக நடைபோட
விளையும் பலனோ எதுவாகும்?

சரியாய் பிரேக்கும் மணியுமின்றி
சைக்கிள் ஓட்டுதல் பிழையாகும்
புரியாத் தனமாய் நடந்திட்டால்
பெரிதும் விபத்தில் சிக்கிடுவீர்!

ஓடும் பஸ்ஸில் ஏறுவதும்
உடனே தாவி இறங்குவதும்
கேடு காலத்தின் அழைப்பேதான்
கொடிய பெரிய விளைவேதான்!

இருவர் மூவராய் சைக்கிளிலே
ஏற்றிச் செல்லும் பழக்கமதை
அறவே யாரும் கொள்ளாதீர்
அனைவரும் உணர்ந்து நடந்திடுவீர்!

சொந்த நலனும் பொதுநலனும்
சிறிதும் கெடுவது நல்லதுவோ?
எந்த விபத்து நிகழ்வதையும்
எவரும் சகிக்க முடியாது

சரியாய் கவனம் இல்லாது
சிறிதும் நீங்கள் இருந்திட்டால்
அறியாச் சிறுவர் என்றெண்ணி
அனைவரும் உண்மை நகைத்திடுவர்!

எச்சிறு விபத்தும் நிகழாமல்
இனிதே நன்கு நடந்திடுவீர்
இச்சிறு பாடல் கருத்தினையே
இன்னும் பலரிடம் கூறிடுவீர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT