உழைத்தால் அருள் பெறலாம்!
மதீனா பள்ளி வாசலிலே முழந்தாளிட்டு ஓர் அன்பர்காலை மாலை எப்போதும்
மதீனா பள்ளி வாசலிலே
முழந்தாளிட்டு ஓர் அன்பர்
காலை மாலை எப்போதும்
கடவுளை நன்கு தொழுது வந்தார்!
அண்ணல் நபிகள் தினந்தோறும்
அந்தக் காட்சியைப் பார்த்து வந்தார்!
""என்றும் இங்கே நாம் காணும்
இவர் யார்?'' தோழரை அவர் கேட்டார்!
""நல்லார் பக்திமான் இவரே
நாளும் இறையைத் தொழுகின்றார்!''
என்றே தோழர் பதில் சொன்னார்!
இன்முகத்தோடு நபி கேட்டார்....
....""அப்படியாயின் இவர் வாழ்க்கை
எப்படிச் செல்லும் சொல்லுங்கள்!''
""இவர் தம் சகோதரர் விறகு வெட்டி
இவர்க்கும் உணவு தருகின்றார்!''
தோழர் உரையைக் கேட்ட நபி,
தோன்றிய கருத்தை உடன் சொன்னார்!
""உழைக்கும் தோழர், இவரைவிட
உண்மையில் பலமுறை மேலாவார்!....
.... இல்லம் காக்க உழைப்பதுவும்
இறையைத் தொழுதல் போலாகும்!....
.... இவருக்கு இதனைச் சொல்லுங்கள்!.....
எங்கும் இன்ப ஒளி பரவும்!''
நல்லுரை கேட்ட அம்மனிதர்
நாளும் உழைத்து நலம் பெற்றார்!
இல்லத்தில் துன்பம் நீங்கியது!
இறைவன் அருளும் ஓங்கியது!