முகப்பு
சிறுவர்மணி

அரங்கம்: பதக்கப்பெட்டி! 

தலைமை ஆசிரியர் : மாணவச் செல்வங்களே! நிறைவாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி! தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஓவியப் போட்டியிலும், ஐந்நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஈட்டி எறியும் போட்டியிலும் முதலிடம் பெற்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

காட்சி - 1
இடம் - பள்ளி மைதானம்
மாந்தர் - தலைமை ஆசிரியர், பள்ளிச் செயலர், சிறப்பு விருந்தினர், கலைச்சுடர், கணபதி, நிறைமதி, 
வெற்றிவேல், பாஸ்கர், வைரமணி.
(பள்ளி ஆண்டு விழா. சில நிகழ்ச்சிகள் முடிந்தபின், தலைமை ஆசிரியர் பேசுகிறார்.)

தலைமை ஆசிரியர் : மாணவச் செல்வங்களே! நிறைவாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி! தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஓவியப் போட்டியிலும், ஐந்நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஈட்டி எறியும் போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் இப்பொழுது சிறப்புப் பரிசு பெற உள்ளார்கள். (கரவொலி!) ரூபாய் ஐயாயிரம் மதிப்புள்ள இரு வெள்ளிப் பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் விழா சிறப்பு விருந்தினர் கொடைவள்ளல் சிவமணி அவர்கள் இரு மாணவர்களுக்கும் அளித்து வாழ்த்த உள்ளார்! (கரவொலி) சிவமணி : மாணவமணிகளுக்கு என் வாழ்த்துகள்!.... அனைவருக்கும் என் வணக்கம். இன்று ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் பெருகி வருகிறார்கள். எதிர்காலத்தில் ஓவியக்கலைûக்கு நல்ல சிறப்பிடமுள்ளது. ரவிவர்மாவின் ஓவியங்களை இன்றும் உலகம் பாராட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் பரிசு பெற்று வரும் நம் பள்ளி மாணவன் கலைச்சுடரும், எதிர்காலத்தில் ஒரு ரவிவர்மாவாக புகழ் பெறுவார் என்பது உறுதி!  (கரவொலி!).....
...... அதுபோல நீண்ட தூர ஓட்டம், குறி பார்த்து ஈட்டி எறியும் கலை, ஆகிய இரண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றுவரும் வெற்றிவேலும், எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஒலிம்பிக் வீரனாகப் புகழ் பெறுவார் என்பதும் உறுதி! (கரவொலி!) ... இப்பொழுது வெற்றிவேலையும், கலைச்சுடரையும் மேடைக்கு அழைக்கின்றேன். 
(நீண்ட நேர கரவொலி) இருவரும் வெள்ளிப் பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். விழா முடிகிறது. கூட்டம் கலைகிறது. விழா மைதானத்தின் ஒரு பகுதியில் வெற்றிவேல், பாஸ்கர், வைரமணி, ஒரு குழுவாகவும், கலைச்
சுடர், கணபதி, நிறைமதி ஒரு குழுவாகவும் தனித்தனியே பேசிக் கொண்டிருக்கின்றனர். 
பாஸ்கர் : பெரிய பெரிய இடத்துலே, விளையாட்டு வீரர்களுக்குத்தான் சுலபமா வேலையும் கிடைக்கும்! புகழும் வளரும்!
வைரமணி : டேய், கலைச்சுடர் உனக்கு ஏன்டா வாழ்த்து சொல்லலே?.... 
வெற்றிவேல்: நானும் அவனுக்குச் சொல்லலே!.... 
பாஸ்கர் : டேய் அவன்தான்டா மொதல்லே உனக்கு வாழ்த்துச் சொல்லணும்!.... உன் திறமைதான் ஓவியத் திறமையைவிடப் பெரிசு!.... 
வைரமணி : ஆமாம்!.... ஓவியத் திறமையை யார் பெருசா மதிக்கப் போறாங்க?... 
(அருகிலுள்ள கலைச்சுடர் நண்பர்கள் இதனைக் கேட்டபடி அங்கு வந்து)
நிறைமதி : அப்படிச் சொல்லாதே வைரமணி!.... ஓவியங்கள் இல்லேன்னா எந்தப் பத்திரிகையும் விற்காது!.... டல்லடிக்கும்!.... கதை, கட்டுரை, நாவல் எல்லாத்துக்கும் ஓவியம்தான் உயிர்!.
கணபதி : அது மட்டுமில்லை!.... விளையாட்டுத் திறமையெல்லாம் உடம்புலே பலம் இருக்கிற வரைக்கும்தான்!.... அப்புறம் திறமையும் குறைஞ்சுடும்!
நிறைமதி : ஆனா ஓவியத்திறமை அப்படிக் குறையாது!.... வயசானாலும் திறமை வளரும். தெரிஞ்சுக்கோ!.... ஓவியம் இல்லேன்னா சாமி படங்களும், இல்லை.
பாஸ்கர் : டேய், விளையாட்டுவீரர்களுக்குத்தான் உலகப் புகழ் சீக்கிரம் கிடைக்கும்! மக்களோட கரவொலி நேருக்கு நேரா கிடைச்சுக்கிட்டே இருக்கும்!
வைரமணி : அதனாலே விளையாட்டு வெற்றிவேல் வாழ்க! 
நிறைமதி மற்றும் கணபதி : ஓவியத் திலகம் கலைச்சுடர் வாழ்க!
பள்ளிச் செயலர் : (நெருங்கி வந்து) என்ன சத்தம்?
பாஸ்கர் : ஒண்ணுமில்லை சார்!.... எங்களுக்குள்ளே ஒரு சின்ன பட்டி மன்ற விளையாட்டு! 
வைரமணி : ஓவியர்களுக்குப் புகழ் அதிகமா? இல்லை விளையாட்டு வீரர்களுக்குப் புகழ் அதிகமா? விளையாட்டு வீரர்களுக்குத்தானே?... சொல்லுங்க சார்!
செயலர் : ம்.... இப்படி ஒரு விளையாட்டா? ரெண்டுமே தராசுலே வெச்சு எடை போட்டுப் பார்க்கிற விஷயமில்லை.... அனுபவத்திலேதான் தெரியும்!.... சரி, சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்புங்க!.... உங்க கிராமம் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலே இருக்கு.... மழை வேறே வரமாதிரி இருக்கு.... எல்லோருக்கும் சைக்கிள் இருக்கு இல்லே?
நிறைமதி : இல்லே சார்!.... ரோடு மொத்தம் போன மழையிலே குண்டும் குழியுமா போயிடுச்சு!.... புதுசா ரோடு போட்டுக்கிட்டிருக்காங்க.... சைக்கிளை ஓட்டவே முடியாது. அதனாலே கொஞ்ச நாளா நடந்துதான் வரோம். போறோம்.
செயலர் : அப்படீன்னா சீக்கிரமா கிளம்புங்க.... உங்க பட்டிமன்ற விளையாட்டு சண்டையா மாறாம பாத்துக்குங்க!.... இன்னொரு விஷயம்!.... பதக்கத்தை பெட்டிக்குள்ளே ஆடாம, அசையாம அழகா பொருத்தியிருக்காங்க. பதக்கத்தை வெளியே எடுத்தா, எடுத்தபடி மறுபடியும் அப்படியே வச்சுடுங்க!.... அப்பத்தான் மெருகு போகாம பளிச்சு ன்னு இருக்கும்.

காட்சி - 2
இடம் - கிராமத்துச் சாலை
மாந்தர் - கலைச்சுடர், கணபதி, நிறைமதி, 
வெற்றிவேல், வைரமணி, பாஸ்கர், திருடன்.


கணபதி : டேய் கலைச்சுடர்!.... நீயும் அந்த வெற்றிவேலும் வெள்ளிப் பதக்கங்களை வாங்கியிருக்கிறது நம்ம கிராமத்துக்கே பெருமை!
நிறைமதி : அதுவும் ஐயாயிரம் ரூபா மதிப்புள்ள பதக்கப் பெட்டி பைக்குள்ளே பத்திரமாயிருக்கான்னு ஒரு தடவை பாத்துக்கோடா! 
(பின்னால் வந்துகொண்டிருந்த 
வழிப்பறித் திருடன் கத்தியை நீட்டி...)
திருடன் : ஏய் நில்லுங்கடா!.... எடுடா  அந்த வெள்ளிப் பதக்கத்தை!.... இல்லேன்னா இந்தக் கத்தி உங்க மூணு பேரையும் பதம் பார்த்துடும்!
கணபதி : பதக்கமா?
திருடன் : ஏய், நானும் விழாவுக்கு வந்திருந்தேன்!.... நீயும், அதோ முன்னால் போய்க்கிட்டிருக்கிறானே ஒரு பையன்.... அவனும் வெள்ளிப் பதக்கப் பரிசு வாங்கினது எனக்கும் தெரியும்!.... ம்!.... எடு அந்தப் பதக்கப் பெட்டியை!  (கலைச்சுடர் பதக்கப் பெட்டியை எடுத்துக் கொடுத்துவிடுகிறான். ) ம்!.... இதோ பாருங்க!.... கூச்சல் கீச்சல் போட்டீங்க, திரும்ப வந்து குத்துவேன்!... 
(திருடன் வேகமாக வெற்றிவேலை நோக்கி ஓடுகிறான்)
கணபதி : டேய், திருடன் வெற்றிவேலை மிரட்டிக்கிட்டிருக்கான் பாரு.... நாமும் அங்கே போய் திருடனை மடக்கப் பார்ப்போம்!
நிறைமதி : ஐயய்யோ!.... வெற்றிவேலும் பதக்கப்பெட்டியைக் கொடுத்துட்டான்!.... 
வெற்றிவேல் : என்ன கலைச்சுடர்,.... மூச்சிறைக்க ஓடி வரீங்க.... உன் பதக்கமும் போச்சா?
கலைச்சுடர் : ஆமாம்!.... வெற்றிவேல்!.... டேய், திருடன் வேகமா ஓடறான்,.... என்னடா செய்யறது?.... 
பாஸ்கர் : டேய் ஒரு ஐடியா!.... நீதான் குறிபார்த்து அடிக்கிறதுலே திறமைசாலியாச்சே!..... இந்தா, சவுக்குமரத்துத் துண்டுக் கட்டை!.... திருடன் மேலே இந்தக் கட்டையை வீசு!
வெற்றிவேல் : டேய் எங்கேடா திருடனை காணோம்?.... 
கணபதி : அதோ அந்த மரத்துக்குப் பின்னாலே ஒளிஞ்சுக்கிட்டிருக்கான்!  கிட்டே யாரும் போயிடாதீங்க!.... 
நிறைமதி : டேய், திருடன் மறுபடியும் ஓட ஆரம்பிச்சுட்டான். இப்போ விடு கட்டையை!
வெற்றிவேல் : இப்போ பாரு!.... (என்றபடி, கொஞ்ச தூரம் ஓடி, கட்டையை வீச, திருடன் காலைத் தாக்க, திருடன் வலி தாளாமல் உட்கார்ந்து விடுகிறான்.) 
திருடன் : ஏய், யாரும் கிட்டே வராதீங்க!.... வந்தா குத்துதான்!
கலைச்சுடர் : ஐயா, இப்போவாவது அந்த ரெண்டு பதக்கப் பெட்டிகளையும் இப்படித் தூக்கிப் போடுங்க.... 
வெற்றிவேல்  : இல்லேன்னா இன்னொரு சவுக்குத் தண்டு இதோ!... இன்னும் பலமா அடி விழும்!.... நடக்க முடியாம போயிடும்!..... வீட்டுக்குப்போய் போன் பண்ணி போலீûஸ வரவழைச்சுடுவோம்!.... 
திருடன் : ஆ!.... ஆ!.... அதெல்லாம் வேண்டாம் தம்பி!.... இந்தாங்க உங்க பதக்கப்பெட்டி ரெண்டும்!.... என்னை ஒண்ணும் செய்துடாதீங்க!.... 
(என்றபடி திருடன் காலை அமுக்கிவிட்டுக் கொள்கிறான். பாஸ்கர் பெட்டிகளை எடுக்க முயற்சிக்க, கணபதி 
அவனைத் தடுத்து, ஏதோ சொல்ல, இருவரும் தங்கள் 
தங்கள் கைக்குட்டைகளால் பெட்டிகளை 
மூடியபடி எடுத்துத் தங்கள் பைக்குள் 
பத்திரப் படுத்திக் கொள்கிறார்கள். )
கணபதி : ஐயய்யோ!.... நான் நினைச்சது சரியாப் போச்சு..... பெட்டிக்குள்ளே பதக்கத்தைக் காணோம்!.... பாஸ்கர் நீ அந்தப் பெட்டியைத் திறந்து பாரு!.... கைக்குட்டையை எடுக்காம அப்படியே திறந்து பாரு....
பாஸ்கர் : ஆமாம்!.... இதிலேயும் பதக்கம் இல்லே!
கணபதி : ஆமாம்,... இதிலேயும் பதக்கம் இலலே!.... திருடன் மரத்துக்குப்பின்னாடி ஏன் ஒளிஞ்சிருந்தான்னு இப்பதான் புரியுது!.... பதக்கங்களை மட்டும் ரகசியமா வெளியே எடுத்து பத்திரப்படுத்திக்கிட்டு வெறும் பெட்டிகளை வீசியிருக்கான். நல்லா நடிச்சு ஏமாத்திட்டான்.
பாஸ்கர் : அவனை விடக்கூடாது!.... வாங்க, மறுபடியும் துரத்துவோம்!.... 
கணபதி : ஆனா அவன் அந்தக் கால்வலியோடு ஓடி சவுக்குத் தோப்புக்குள்ளே போயிட்டான்!.... பாருங்க!... இனிமே நாம ஒண்ணும் செய்ய முடியாது. பலமா இடிஇடிக்க ஆரம்பிச்சுட்டுது.... எங்க அப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.... இன்னிக்கு வீட்லேதான் இருóககார்.... எல்லாருமா போய் விஷயத்தைச் சொல்வோம்!.... வாங்க!...

காட்சி - 3
இடம் - கணபதி வீடு
மாந்தர் - சப்-இன்ஸ்பெக்டர் (கணபதியின் தந்தை), 
மற்றும் ஆறு சிறுவர்கள். கான்ஸ்டபிள்
(சப் இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு...) 

இன்ஸ்பெக்டர் : பரவாயில்லை.... பதக்கம் பறிபோனாலும், பெட்டி கிடைச்சிருக்கு!.... உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்!.... இந்தப் பெட்டிகள் மேலே படிஞ்சிருக்கிற திருடன் கைரேகைகளைப் பதிவு செய்துட்டு, உங்களுக்குத் திருப்பித் தரேன். சரி, அந்தத் திருடன் எப்படியிருந்தான்?.... முக்கியமா அவன் முகவெட்டு எப்படியிருந்தது?.... 
கணபதி : டேய், கலைச்சுடர்!.... நீதான் ஓவியம் வரையறதிலே திறமைசாலியாச்சே!.... திருடன் முகத்தையும் வரைஞ்சு காண்பிக்கலாம் இல்லே!
கலைச்சுடர் : ஓ!.... தாராளமா இதோ ரெண்டே நிமிஷத்துலே வரைஞ்சுடறேன்.
இன்ஸ்பெக்டர் : சரி, அவன் வரையட்டும்!.... நீங்க நாளைக்கு என் கூட ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கடிதம் கொடுத்துடுங்க!.... எப்படியும் திருடனைக் கண்டுபிடிச்சுடலாம்!.... திருடனைப் பிடிச்சதும் நேரே உங்க பள்ளிக்கூடத்துக்கே வரோம்!.... அடையாளம் காட்டிடுங்க!.... 
கலைச்சுடர்: இந்தாங்க ஐயா ஓவியம்!..... 
இன்ஸ்பெக்டர் : இவன் புதுத் திருடனா இருக்கான்!.... நல்லா வரைஞ்சிருக்கே தம்பி!.... கூடுதல் விவரங்களையும் கொடுத்திருக்கே!.... இந்த ஓவியம், கைரேகை ரெண்டையும் வச்சு சுலபமா திருடனைப் பிடிச்சுடுவோம்!.... போயிட்டு வாங்க!

காட்சி - 4
இடம் - பள்ளிக்கூடம்
மாந்தர் - தலைமை ஆசிரியர், செயலர், 
இன்ஸ்பெக்டர், திருடன், ஆறு சிறுவர்கள்.

இன்ஸ்பெக்டர் : (உள்ளே நுழைந்தபடி) ஆசிரியர் சார் வணக்கம்!.... ஓ பிள்ளைகளையும் தயாரா பக்கத்திலேயே நிக்கவச்சுட்டீங்களா?.... நல்லது.
தலைமை ஆசிரியர் : ஆமாம்!.... உங்க போன் செய்தி வந்ததும் இவங்களைத் தயார் பண்ணிட்டேன்!.... 
இன்ஸ்பெக்டர் : பிள்ளைகளா,.... உங்களை மிரட்டி பதக்கத்தைத் திருடினவன் இவன்தானா?.... 
ஆறுபேரும் : ஆமாம், இவனேதான் சார்!
இன்ஸ்பெக்டர் : ஆசிரியர் சார், இந்தாங்க பிள்ளைகளோட பதக்கப்பெட்டிகள்!.... உள்ளேயே பதக்கங்களும் இருக்கு.... பாத்துக்குங்க!... கைரேகையும், ஓவியமும் இல்லேன்னா, இந்தத் திருடனை இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிருக்க முடியாது! வரோம்! ம்....இவனை ஜீப்பிலே ஏத்துங்க!....
ஆறுபேரும் : நன்றி ஐயா!
தலைமை ஆசிரியர் : நன்றி இன்ஸ்பெக்டர் சார்!.... வெற்றி, கலைச்சுடர் இந்தாங்க உங்க பதக்கப் பெட்டிகள்!
செயலர் : வெற்றிவேல், கலைச்சுடர்,.... நடந்த சம்பவங்களை பாஸ்கர் விரிவா எங்கிட்டே சொல்லிட்டான்.... வெற்றிவேல் குறி தப்பாம அடிச்சதனாலதான் திருடன் ஓடமுடியாம உட்கார்ந்துட்டான்.... வெற்றிவேல் அடிக்கு பயந்து பெட்டியையும் திருப்பிக் கொடுத்திருக்கான். ஆனா அதுலே படிஞ்ச கைரேகை போலீஸூக்கு உதவியிருக்கு!.... அதோடு கலைச்சுடர் வரைந்த ஓவியமும் ரொம்ப உதவியா இருந்திருக்கு!... ஒரு இடத்திலே அடையாளம் கண்டு போலீஸ் துரத்தினப்போ திருடன், கால்வலியாலே  ஓட முடியாம மாட்டிக்கிட்டான்!.... அடிக்குப் பயந்து பதக்கங்களையும் திருப்பிக் கொடுத்துட்டான். ஆக, விளையாட்டுத் திறமையும், ஓவியத்திறமையும் ஒண்ணா சேர்ந்துதான் திருடனுக்கு விலங்கு மாட்டியிருக்கு!.... இப்போ சொல்லுங்க!.... எது பெரிசு?.... விளையாட்டுத் திறமையா?.... ஓவியத் திறமையா?.... 
அனைவரும் : ரெண்டும் பெரிசுதான் சார்!
பாஸ்கர் : ஆனா எங்க புத்திதான் சிறிசு!

(சிரிப்பலைகள்!)

திரை

முழு கட்டுரையைப் படிக்க →