குழந்தைகளே நலமா, நான் தான் மகோகனி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மீலியேசி என்பதாகும். அறிவியல் பெயர் ஸ்விடினியா மாக்ரோபைலா என்பதாகும். நான் மெலியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
எனது தாயகம் மேற்கிந்திய தீவுகள். நான் டொமினிக் ரிபப்ளிக் நாட்டின் தேசிய மரமாவேன். ஆப்பிரிக்கா நாடுகளில் நான் அதிகமாக காணப்படுகிறேன். நான் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மரமாவேன். நான் 40 முதல் 60 மீட்டர் வரை வளரக் கூடிய இலையுதிர் மரம். என் தண்டு நேராக, உருளையாக வளரும்.
நான் பல கோடி ஆண்டுகள் பழமையானவன். நான் தேக்கு மரத்தைப் போலவே, மிகவும் வலிமையாகவும், மென்மையாகவும் இருப்பேன். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் என்னை அதிகமாக விரும்புவாங்க. நான் ஆண்டிற்கு 1000 மில்லி மீட்டர் மழை பொழிவு பெறும் இடங்களில் நன்றாக வளரும் பசுமை மாறா மரமாவேன். ஆனால், குழந்தைகளே, மற்ற மரங்களை விட நான் வளர அதிக சத்துக் கொண்ட மண் வளம் எனக்குத் தேவை. மரம் வளர்ப்பில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் மரங்களில் நான் முதன்மையானவன்.
என் இலை வேப்ப மரத்தின் இலையைப் போன்று கூட்டிலையை உடையது. என் பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் நல்ல வாசமுடன் இருக்கும். என் காயானது பல விதைகளைக் கொண்டிருக்கும். என் விதை இறகு வடிவிலிருக்கும். வறட்சியைத் தாங்கியும் வளருவேன். வயல் ஓரங்களில் நிழலுக்காகவும் என்னை வளர்க்கலாம். மணற்பாங்கான செம்மண் மற்றும் செம்பொறை மண்ணில் நான் நன்றாக வளருவேன். சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளிலும் நான் வளருவேன். நான் ஒரு ஒளி விரும்பி, அதே சமயம் நிழலைத் தாங்கி வளருவேன். ஆனால், என்னால் பனியைத் தாங்கிக் கொள்ள முடியாது.
என் மரப் பட்டைகளுக்கு மருத்துவ குணம் உண்டு. ஒரு சமயம் குழந்தைகளே, 1890-ஆம் ஆண்டில் அமிபியாஸ் எனப்படும் வயிற்றுப் போக்கால் பலர் உயிரிழந்தனர். அப்போது, என் பட்டைகளை அரைத்து மருந்தாகக் கொடுத்து பலரை காப்பாற்றினார்களாம். நான் பெருங்காற்றையும், புயலையும் தாங்கி வளருவேன். புவி வெப்பமயமாதலையும் நான் தடுப்பேன். புயல் பாதிக்கும் இடங்களில் என்னை நட்டு வளர்த்து வந்தால் உங்களுக்கு நான் பல வகைகளில் பயன்படுவேன். அதிக தண்ணீர் இருந்தால் என் வளர்ச்சி வேகமாக இருக்கும். 10 ஆண்டுகளில் 120 செ.மீ. சுற்றளவு கொண்ட பெரிய மரமாக உயரமாக நான் வளருவேன். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் என்னை வளர்த்தீர்களேயானால், அங்கு அடிக்கடி மக்களைத் தாக்கும் புயல்கள் என்னை கண்டு பயந்து ஓடி விடும். நட்ட பத்து வருடத்தில் உங்களுக்கு அதிக பலன் கொடுப்பேன். என் தண்டு வைரம் பாயும் தன்மை கொண்டது.
வெட்டிய மரத்திலிருந்து பசைகள் எடுக்கிறார்கள். இந்த பசை மிகவும் உறுதி வாய்ந்தது. என் மரப்பட்டை சடானின் நிறைந்தது என்பதால் சாயமேற்றவும் பயன்படுத்தலாம். என் மரத்திலிருந்து அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேசை, நாற்காலிகள், வீட்டின் நிலைக் கதவுகள், வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள், அலமாரிகள் தயாரிக்கலாம். இசைக் கருவிகளும் செய்யலாம். கப்பல் கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருள்கள், பென்சில்கள் தயாரிப்பதற்கும் ஏற்ற மரம் நான். டைனோசர்ஸ் காலத்தில் வாழ்ந்த மரமாக கருதப்படும் என் மரத்தின் ஒரு பாகத்தை கனடா நாட்டு தொல்லியல் துறை அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 8 கோடி ஆண்டுகள், உலகிலேயே பழைமையான மரமாக இது தான் இருக்கும் என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலும், இங்கிலாந்து அரசியின் பக்கிங்காம் அரண்மனையிலும் நானிருக்கேன்.
மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உறவு மனித வரலாற்றினுடைய பழமையின் அளவுக்கும் பழமையானது. மரம் வளருங்கள், வளம் பல பெறுங்கள். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.