விதை!
மலைக்கோயிலிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர் ராஜேஷும் ரமேஷும். கடவுளுக்குப் படைத்த பழங்கள் இரண்டை கோயில் குருக்கள் அவர்களிடம் தந்தார்.
மலைக்கோயிலிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர் ராஜேஷும் ரமேஷும். கடவுளுக்குப் படைத்த பழங்கள் இரண்டை கோயில் குருக்கள் அவர்களிடம் தந்தார். ரமேஷ் ஒரு பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ராஜேஷுக்கு மாம்பழம் பிடிக்கவில்லை. அவனுக்குக் கொடுத்த மாம்பழம் ஓர் ஓரத்தில் அழுகியிருந்தது!
""ஒரு ஓரமாகத்தானே அழுகியிருக்கிறது!.... அந்தக் கடைக்காரரிடம் கத்தி வாங்கி அழுகிய அந்த சிறுபாகத்தை நறுக்கி எறிந்து விட்டு மீதிப் பழத்தை சாப்பிடேன்!'' என்றான் ரமேஷ்.
""வேண்டாம்!'' என்று அதை கைப்பிடிச் சவற்றுக்கு வெளியே எறிந்துவிட்டான் ராஜேஷ். அது கைப்பிடிச் சுவற்றுக்கு அப்பால் அவர்கள் வழக்கமாக அமரும் பாறைக்கு அருகில் விழுந்தது. மலை ஏறும்போது அங்குதான் அவர்கள் சற்று இளைப்பாறுவார்கள்.
""அடப்பாவமே நான் என் பழத்தை எச்சில் செஞ்சுட்டேனே!''
""பரவாயில்லை.... நீ சாப்பிடு!''
சில நாட்கள் சென்றன.
ஒரு நாள் நல்ல மழை. மழை ஓய்ந்த பிறகு இருவரும் மலைக்கோயிலுக்குச் சென்றனர். அங்கு மலை ஏறும்போது களைப்பினால் அவர்கள் வழக்கமாக அமரும் பாறையில் சற்று அமர்ந்தனர்.
ரமேஷின் காலுக்கு அடியில் ஏதோ குறுகுறு என்றது. அங்கு ஒரு மாஞ்செடி முளைத்திருந்தது!
பல வருடங்களுக்குப்பின் அழுகிய பழக்கொட்டையிலிருந்து வளர்ந்த அந்த மாமரம் பலருக்கு நல்ல காய்களையும், கனிகளையும் கொடுத்துக்கொண்டிருந்தது.
ராஜேஷுக்கு இறைவன் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தார்.