முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: பிகார் மாநிலம்!

நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ராஜ்கிர்! இது மெளரியர்களின் மகத நாட்டுத் தலைநகரமாக இருந்துள்ளது..

சிறுவர்மணி

கருவூலம்: பிகார் மாநிலம்!

நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ராஜ்கிர்! இது மெளரியர்களின் மகத நாட்டுத் தலைநகரமாக இருந்துள்ளது..

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சென்ற இதழ் தொடர்ச்சி....

பெளத்த தொல்லியல் களங்கள்!

ராஜ்கிர்!

நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ராஜ்கிர்! இது மெளரியர்களின் மகத நாட்டுத் தலைநகரமாக இருந்துள்ளது. பல நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் இடம்! கெளதம புத்தரும், மகாவீரரும் இங்குள்ள குகைகளில் தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள அஜாதசத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். இங்கு பிரம்மகுண்ட் என்னும் வெந்நீர் ஊற்றும் உள்ளது. இங்குள்ள சோன்பந்தர் குகை. வேணுவனம், மலை உச்சியிலுள்ள சாந்தி ஸ்தூபா போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.

வைசாலி!

வைசாலி அற்புதமான பெளத்த சுற்றுலாத்தலம். அக்காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்பட்ட உலகின் முதல் குடியரசு நாடாக வைசாலி இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இங்குதான் 24 - ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பிறந்தார்.

கி.பி. 4 - ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த பாஹியானாலும், 7 - ஆம் நூற்றாண்டில் வருகை புரிந்த "யுவான் சுவாங்'காலும் வைசாôலி நகரம் அவர்களது நூல்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்குறிப்புகளைக் கொண்டு பிரிட்டிஷ் தொல்லியலாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1861 - இல் அகழ்வாராய்ச்சி செய்து வைசாலி நகரத்தைக் கண்டுபிடித்தார். இங்கு ஓர் அருங்காட்சியகம் உள்ளது.

இங்கு 36 அடி உயரம் கொண்ட அசோகரின் தூண் உள்ளது. தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் உள்ளது. அருகில் குன்று போன்ற ஸ்தூபியும் உள்ளது.

இவைதவிர குண்டல் பூர், ராஜ் விஷால் கா கார், காரனேஷன் குளம் புத்திமாய், ராம் செளரா, விஸ்வ சாந்தி ஸ்தூபா, குடகராசாலா விஹாரம் அகியவை வைசாலியில் காண வேண்டிய இடங்களாகும்.

மதுபனி ஓவியங்கள், கற்சிற்பங்கள், கைவினைப் பொருள்களுக்கும் வைசாலி புகழ் பெற்றது.

நாளந்தா

இங்குதான் இந்தியாவின் தலைசிறந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. இப்பல்கலைக்கழகம் கி.பி. 5 - ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் சநதிரகுப்தரால் நிறுவப்பட்டது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. இங்கு 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் வசதியுடன் இருந்தது. 540-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். 14 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. பல நாடுகளிலிருந்து இப்பல்கலைக்கழகத்திற்கு கல்வியறிவு பெறுவதற்காக மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

பெளத்த தத்துவங்கள், வேதங்கள், தர்க்கம், சாங்கியம், வானியல், மருத்துவம், மொழியியல் முதலிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. யுவான் சுவாங் தனது நூலில் இப்பல்கலைக்கழகம் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். 1193 - ஆம் ஆண்டு நடைபெற்ற துருக்கிப் படையெடுப்பின்போது இப்பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.

மெளரியா நந்தன் காட்!

இந்நகரம் இந்திய நேபாள எல்லை அருகே கங்கை ஆற்றின் துணையாறான புர்கி கண்டகி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மெளரியப் பேரரசின் அடையாளமாய் இங்கு நடந்த அகழ்வாய்வில் அசோகர், நிறுவிய 15 தூண்கள், ஸ்தூபிகள், விகாரங்கள், கல்லறைகள், செப்பு நாணயங்கள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் இரும்புக் கருவிகள் உட்பட பல பொருள்கள் கிடைத்துள்ளன. தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் புதுப் பொலிவுடன் 2014 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு நாளந்தா பல்கலைக் கழகத்தை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

விக்கிரம சீலா!

இதுவும் புகழ் பெற்ற ஒரு பெளத்தக் கல்வி மையமாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கிப் படித்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு போதித்தனர். பாலப் பேரரசர் தர்மபாலர் (783 - 820) இதை நிறுவினார். இக்கல்வி மையமும் கி.பி. 1200 - இல் நடந்த போரில் டில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகளால் முற்றிலும் சிதைந்து விட்டது.

கேசரியா!

கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள பழைமையான நகரம் இது. இங்கு அசோகர் நிறுவிய, உலகின் உயரமான 104 அடி உயர ஸ்தூபி உள்ளது. இது பெளத்தர்களின் புனிதத் தலம்.

கும்ஹரார்!

இது பாட்னா மாநகராட்சிக்கு உட்பட்ட இடம். பண்டைய பாடலிபுத்திரம் நகரத்தின் சிதிலமடைந்த தொல்லியல் அகழ்வாய்வுக் களம்! மெளரியப் பேரரசின் தியான மண்டபத்தின் மேற்கூரையைத் தாங்கும் 80 தூண்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 600 காலத்திய சான்றுகள் இங்கு கிடைத்துள்ளன. இப்பகுதி கி.மு. 600 முதல் கி.பி. 600 வரை மிகப் புகழுடன் விளங்கியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லெளரியா!

பண்டைய லெளரியா - ஆராராஜ் நகரம் இந்திய நேபாள எல்லையின் அருகில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கும் அசோகர் நிறுவிய தூண் உள்ளது. இத்தூண் மணற்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. 36.6 அடி உயரம் கொண்டது. சுற்றளவு 3.6 அடி கொண்டது.

பராபர் குகைகள்!

இந்தியக் குடைவரைக் கட்டடங்களில் பராபர் குகைகள் மிகவும் பழைமையானவை. இவை ஜீகான்பாத் மாவட்டத்தில் முக்தம்பூர் என்ற ஊரில் உள்ள பராபர் மற்றும் நாகர்ஜீனி மலைகளில் அமைந்துள்ளன. இவை மெளரியர் காலத்தவை. இக்குடைவரைகளை புத்த பிக்குகள் மற்றும் சமணத்துறவிகள் பயன் படுத்தியுள்ளனர்.

பாட்னா!

1942 - இல் நடைபெற்ற"வெள்ளையனே வெளியேறு!' இயக்கத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஏழு சுதந்திரப் போராளிகளுக்கான நினைவுச் சின்னம், பாட்னா அருங்காட்சியகம் போன்றவை காணக்கூடியவை.

பாட்னா -பதர் கி மஸ்ஜித்!

கங்கைக் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய மசூதி மன்னர் ஜஹாங்கீரின் மகன் பர்வேஷ் ஷா என்பவரால் கட்டப்பட்டது.

பாட்னா - ஷெர் சூரி மஸ்ஜித்!

இக்கட்டிடம் ஆப்கனிஸ்தான் கட்டடக் கலையில் கட்டப்பட்டது. மன்னர் ஷேர் ஷா சூரி, தனது ஆட்சியின் நினைவாக 1545 - இல் இம்மசூதியைக் கட்டினார். பாட்னாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

புத்த கயா!

கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் இது. பால்கு நதிக்கரையில் உள்ளது. சுற்றிலும் மலைக் குன்றுகளும், கோட்டை கோபுரங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கு இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா முதலிய நாடுகளின் சார்பாக புத்தருக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

மகா போதி கோயில்! - புத்த கயா!

கெளதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு அதாவது கி.மு. 250 - ஆண்டளவில் பேரரசர் அசோகர் புத்தகயாவுக்கு வந்தார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் ஒரு துறவி மடத்தையும், கோயில் ஒன்றையும் கட்டினார்.

தற்போதுள்ள மகாபோதி கோயில் குப்தர்கள் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது. முழுமையாக செங்கல்லில் கட்டப்பட்டு இன்றும் நிலைத்திருக்கும் மிகப்பழைமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்று.

பெளத்த மதத்தை ஆதரித்த மன்னர்களால் சிறப்புற்று விளங்கிய இக்கோயில் பின்பு தகுந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. 1880 - களில் அன்றைய பிரிட்டிஷ் அரசு மகாபோதி கோயிலை புனரமைத்து, பராமரிப்புப் பணிகளையும் செய்தது.

மகாபோதி கோயிலின் உயர்ந்த கோபுர அமைப்பு 55 மீ. உயரம் கொண்டது. இங்கு 80 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தரின் சிலையை தரிசிக்கலாம்.
இந்த இடம் யுனெஸ்கோ அமைப்பால் உலகில் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்...

திருநெல்வேலி டவுன்.

முழு கட்டுரையைப் படிக்க →