குறள் நெறிக் கதைகள்!: மூட அரசனும் முட்டாள் பண்டிதனும்
முமுன்னொரு காலத்தில் "விக்கிரமன்' என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு "பிருங்கி' என்ற பெயரில் முட்டாள் ஒருவன் அமைச்சராக இருந்தான். அவனே அந்த நாட்டில் தலைமைப் பண்டிதன்.
சிறுவர்மணிகுறள் நெறிக் கதைகள்!: மூட அரசனும் முட்டாள் பண்டிதனும்
முமுன்னொரு காலத்தில் "விக்கிரமன்' என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு "பிருங்கி' என்ற பெயரில் முட்டாள் ஒருவன் அமைச்சராக இருந்தான். அவனே அந்த நாட்டில் தலைமைப் பண்டிதன்.
முமுன்னொரு காலத்தில் "விக்கிரமன்' என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு "பிருங்கி' என்ற பெயரில் முட்டாள் ஒருவன் அமைச்சராக இருந்தான். அவனே அந்த நாட்டில் தலைமைப் பண்டிதன்.
வறுமையில் வாடிய புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடிப் பரிசுகள் பெற்றுச் செல்லலாம் என வருவர். அவர்களிடம் இந்த முட்டாள் மந்திரி, "" உங்கள் பாட்டில் அது சரியில்லை ! இது சரியில்லை! எழுத்துப் பிழை உள்ளது!'' என்று கூறி பரிசு பெற விடாமல் தடுத்து விடுவான். அப்படி மீறிப் பரிசு கொடுக்க மன்னன் நினைத்தால் "பாட்டில் விஷயம் ஒன்றும் இல்லை! அப்படி நீங்கள் பரிசு கொடுக்க நினைத்தால் ஓலைச் சுவடியின் எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்தால் போதும்!'என்று கூறி விடுவான்.
அப்படி யாராவது ஒரு புலவர் அவனை எதிர்த்துப் பேசினால் அவர் தலையை மொட்டை அடித்து ஒரு பக்க மீசையை மழித்து விட்டுக் கழுதை மேல் அவர்களை ஏற்றி ஊர்வலம் வரச் செய்து ஊர்க் கோடியில் உள்ள திடலில் இறக்கி விடுவான். இதனால் மன்னரிடம் ஒருவரும் நெருங்க முடியவில்லை.வேறு மந்திரிகள் யாராவது நாட்டின் நிலையைப் பற்றிக் கூற விரும்பினால் அதையும் எதையாவது பேசித் தடுத்து விடுவான்.
அந்த முட்டாள் பண்டிதனுக்கு சில பேர் உதவியாளர்களாக இருந்தனர். அவர்கள், அவன் கூறுவதற்கு எல்லாம் "ஆஹா! ஓஹோ!'என்று கூறிக் கொண்டே இருந்தனர்.
இப்படி இருக்கையில் அந்த முட்டாள் அமைச்சனை புலவர் ஒருவர் எதிர்த்துப் பேசி விட்டார்! உடனே அவரைக் கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்து கொண்டிருந்தனர்அமைச்சரின் சீடர்கள்! அந்த வழியே பயணம் செய்து கொண்டிருந்த "சத்திய சீலன்' என்ற வியாபாரி இதைக் கண்டான்.அவன் தன் பெயருக்கு ஏற்றார் போல் சத்திய சீலனாகவே விளங்கினான். அவன் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல மொழிகள் பேசக் கற்று இருந்தான்.
அவன் அங்கு கூடி இருந்த மக்களிடம் காரணம் கேட்டான். மிகவும் மனம் வருந்தினான். அமைச்சர் பிருங்கியின்சீடர்களால் அவமானப் படுத்தப் பட்ட புலவரை அழைத்தான்.
""அப்பண்டிதானால் அவமானப் படுத்தப்பட்ட உங்களில் சிலர் எனக்கு உதவினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம்! அவனை இந்நாட்டை விட்டே துரத்தி விடலாம்!'' என்று கூறினான். புலவரும் ஒத்துக் கொண்டார். சத்தியசீலன் தனது திட்டத்தைக் கூறினான். புலவர் உடனே தனது நண்பர்கள் சிலரை அழைத்து இத்திட்டத்தை செயல் படுத்த உதவுமாறு வேண்டினார். அவர்களும் ஒத்துக் கொண்டனர்.
அதன்படி மறுநாள் சத்தியசீலன் தனது தோற்றத்தை ஒரு பண்டிதன் போல் மாற்றிக் கொண்டான். பிருங்கியால் அவமானப் படுத்தப் பட்ட புலவர்கள் மாறு வேடமணிந்து தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டனர்.
அவர்கள் அரண்மனைக்குச் சென்றனர். மன்னரிடம் சென்று, பண்டிதன் வேடத்தில் இருந்த சத்தியசீலனைக் காட்டி, ""மன்னா!இவர் ஒரு மிகப் பெரிய அறிவாளி! இவர் காந்தார தேசத்திலிருந்து வந்துள்ளார். உங்கள் புகழ் காந்தார தேசம் வரை பரவி இருப்பதாகவும் உங்களைப் புகழ்ந்து பாட விரும்புவதாகவும் கூறுகிறார்!'' என்றனர்.
இதைக் கேட்ட அரசவைப் பண்டிதர் பிருங்கி, ""எங்கே உங்கள் பாடலைக் கூறுங்கள் கேட்போம்!''என்றார். உடனே சத்தியசீலன் தன் பையில் இருந்து கருங்கல் பலகை ஒன்றை எடுத்து அரசனிடமும் அவையோரிடமும் காட்டினான். ஓலைச் சுவடியை எதிர் பார்த்த பிருங்கிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. சத்திய சீலன் காட்டிய கருங்கல் பலகையில் வேற்று மொழியில் ஏதோ எழுதப் பட்டிருந்தது. மன்னர் உடனே தன் அருகில் இருந்த அமைச்சர் பிருங்கியிடம் ""உங்களுக்குத் தான் பல மொழிகள் தெரியுமே! அதில் என்ன எழுதப் பட்டுள்ளது? படியுங்கள்!'' என்றார்.
தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் அறியாத பிருங்கி, ""மன்னா! நான் படிப்பதைக் காட்டிலும் அந்த காந்தார நாட்டு பண்டிதரையே படிக்கச் சொல்லிக் கேட்கலாம்!'' என்று கூறிவிட்டு, ""புலவரே ! உங்கள் கவிதையைப் படியுங்கள் அனைவரும் கேட்கலாம்!''என்றான்.
அறிஞர் வடிவில் இருந்த சத்திய சீலன் கவிதையைப் படிக்கத் தொடங்கினான்.
“மே பிருங்கி ஏக் புத்தூ ஹூம்!
முஜ்கோ காம் தியா தா ஏ மஹா ராஜா
பஹுத் படா புத்தூ ஹை !”
இதன் அர்த்தம் எதுவும் புரியாத பிருங்கி, ""ஆஹா! அருமை! அருமை! திருக்குறள் போல் இரண்டே வரிகளில் உம்மைப் பற்றி இவர் சிறப்பாக எழுதியுள்ளார்!'' என்றார்.
""அதில் பிருங்கி என்று உங்கள் பெயர் ஏன் வருகிறது?'' என்று கேட்டார் அரசர்.
""மஹாராஜா! உங்களால் பிருங்கியாகிய எனக்கும் பெருமை என்று எழுதி இருக்கிறார்!'' என்றார் பிருங்கி. மேலும் அரசரிடம் ""இக்கல்வெட்டின் எடைக்கு எடை பொன் அளிக்கலாம்! அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்தக் கவிதை ! நாளை இளவரசியாரின் சுயம்வரம் நடக்க இருக்கிறது! எனவே இக்கல்வெட்டை அரண்மனை வாயிலில் பதித்திடலாம்!'' என்றார்.
அவர் கூறியபடியே அரசனும் அந்த கல்வெட்டின் எடைக்கு எடை பொன்னையும் பொருளையும் பரிசாக அளித்தான்.அவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்த சத்தியசீலன் பிருங்கியால் அவமதிக்கப் பட்ட புலவர் பெருமக்கள் அனைவருக்கும் அத்தொகையை சமமாகப் பகிர்ந்து அளித்தான்.
""புலவர் பெரு மக்களே !உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! இச்செல்வத்தைக் கொண்டு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் கவிதை மற்றும் கவிஞர்களின் அருமையை உணராத இத்தகைய மூட அரசர்களிடம் பரிசில் வேண்டி செல்லாதீர்கள்!'' என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.
மறு நாள் இளவரசியாரின்சுயம்வரத்திற்கு வந்திருந்த வேற்று நாட்டு அரசர்களும் அவர்களுடன் வந்திருந்தவர்களும் அரண்மனை வாயிலில் இருந்த கல்வெட்டைப் பார்த்துத் திகைத்தனர்.சிலர் கைகொட்டி சிரித்தனர்.
இதைக் கண்டு திகைப்படைந்த அரசன், ""அந்தக் கல்வெட்டில் எழுதியிருப்பது என்ன?'என்று வேற்று நாட்டு மன்னன் ஒருவரிடம் கேட்டான். அதற்கு அவர் "பிருங்கியாகிய நான் ஒரு முட்டாள்! எனக்கு வேலை கொடுத்த இந்த மஹாராஜா ஒரு மிகப் பெரிய முட்டாள் என்று எழுதி இருக்கிறது!'' என்று அர்த்தம் கூறினார்.
இதைக் கேட்ட அரசன் பெரும் ஆத்திரம் அடைந்தான்.
""போயும் போயும் இதற்குப் பெரும் செல்வத்தைப் பரிசாக அளித்து இழந்தோமே! உன்னைப் போன்ற அமைச்சரை அருகில் வைத்திருப்பதற்கு பதில் நூறு பகைவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம்!'' என்று கூறியபடியே பிருங்கிக்கு நூறு கசையடிகள் வழங்குமாறு உத்தரவிட்டான். இதைக் கேட்ட பிருங்கியின் சீடர்கள் தலைதெறிக்க ஓடினர்.
இதே கருத்தையே பொய்யாமொழிப் புலவரும் "அமைச்சு' அதிகாரத்தில்,
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடியுறும்' - (639 -வது குறள்) என்கிறார்.
இதன் பொருள் "அருகில் இருந்து கொண்டு தன் அரசனுக்குத் தீங்கு நினைக்கும் ஓர் அமைச்சனை விட எழுபது கோடிப் பகைவர்கள் இருந்தாலும் பாதகமில்லை !' என்பதாகும்.