சென்ற இதழ் தொடர்ச்சி.....
மேலும் சில தகவல்கள்!
மணிப் பிரவாளம் நடை!
தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும் தமிழ் இலக்கியத்தின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை 5 காலப் பகுதிகளாக வகைபடுத்தி உள்ளனர்.
அவை....
சங்க காலம் - கி.மு. 400 - கி.பி. 300
சங்கம் மறுவிய காலம் - கி.பி. 300 - கி.பி. 700
பக்தி இலக்கிய காலம் - கி.பி. 700 - கி.பி. 1200
மையக்காலம் - கி.பி. 1200 - கி.பி. 1800
தற்காலம் - கி.பி. 1800 - இன்று வரை...
இதில் பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன.
மணிப் பிரவாளம் என்பதற்கு மணியும், பவளமும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மாலை போல் இரண்டு மொழிகளும் கலந்து உருவான இலக்கிய நடை என்பது பொருளாகும்.
அதாவது தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்திப் பேசுவதோ, அல்லது எழுதுவதோ மணிப்பிரவாள நடையாகும்.
கிரந்த எழுத்துகள்!
கிரந்த எழுத்துகள் என்பது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இது இன்று வரை வேத பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கிறது.
சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்தபொழுது கிரந்த எழுத்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்த பின் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடும் குறைந்து விட்டது.
தமிழ் எண்கள்!
உதாரணம்.
1 முதல், 9 வரைக்குமான எண்களும், மற்றும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கும் தமிழ் எண் வடிவங்கள்.
அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் ஆகிய சொற்களை குறிக்கக் குறியீடுகளும் உள்ளன.
உதாரணம்.
"ழ்'
மெய்யெழுத்துகளில் ஒன்றான "ழ்' என்ற எழுத்து தரும் ஒலி தமிழிலும், மலையாளத்திலும், மாண்டரின், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது.
செம்மொழி!
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் இலக்கிய வளம் இல்லாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழைமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளைச் செம்மொழி என்று அடையாளப்படுத்துகின்றனர்.
செம்மொழிக்கான தகுதி
செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள், வளம் மிகுந்ததாகவும், பழைமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்.
"அபுகிடா' எழுத்து முறை.
எழுத்து முறை பலவாறாக வகைப் படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகள் என எழுத்துகளை வகுக்கும் எழுத்து முறை "அபுகிடா' எழுத்து முறை என்று அழைக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம், தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய எழுத்து முறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும்.
உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளில் பாதி அளவினாலான எழுத்து முறைகள் "அபுகிடா' வகையைச் சார்ந்தனவையே.
இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கண நூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவில் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நூலுக்கு நக்கீரர் உரை எழுதியுள்ளார். இவர் சங்க கால நக்கீரர் அல்ல. தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்நூல் இந்த உரைநூலே ஆகும்.
ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். மேலும், தமிழ் நாட்டிலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ், அரசு அலுவல் மொழியாக இருக்கிறது.
அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது.
இலங்கையின் 3 ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.
சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் தமிழ் இடம் பெற்றுள்ளது.
மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூலாகும். இதனை எழுதியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் என்ற நூல் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியரின் காலம் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. செம்மொழித் தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு. 711 என்று குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்று வரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்! தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்கள் தோன்றியுள்ளன.
தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொல்காப்பியர் காலத்து பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.
தமிழ்த்தாய் கோயில்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் வலப்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் காட்சி தருகின்றனர். கோயிலின் பரிவாரத் தெய்வங்களாக வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் காட்சி தருகின்றனர்.
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள்!
வீரமாமுனிவர்
இவர் 1680 - ஆம் ஆண்டு நவம்பர் 8 - ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் "கான்ஸ்டன்டைன் ஜோசப்பு பெஸ்கி' ஆகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த மதகுரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709 - ஆம் ஆண்டு தமிழகம் வந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளை தமிழ் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி' என்ற காவியமாக இயற்றியுள்ளார்.
இவர் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ் சொற்களுக்கு லத்தீன் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி (அகராதி) ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் போர்த்துகீசிய அகராதியை உருவாக்கினார்.
வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான நவம்பர் 8 - ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு முதல், "தமிழ் அகராதியியல்' நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சங்க இலக்கியங்கள்
பதினெண் மேற்கணக்கு
எட்டுத் தொகை - ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, பொருநறாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை.
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்று ஐம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நாற்பது, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவை ஆகும்.
ஐம்பெருங்காப்பியங்கள்!
சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
பக்தி இலக்கியங்கள்
தேவாரம், திருவாசகம் உள்ளடங்கிய பன்னிரு திருமுறை, கம்ப இராமாயணம், வில்லி பாரதம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அகத்தியர்!
அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதியவர் இவரே!
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இயற்றப்பட்ட மிகப் பழமையான இலக்கண நூலை இயற்றியவர் அகத்தியரே என்ற கருத்தும் உள்ளது! தொல்காப்பியருக்கும் முன்னால் இருந்தவர் என்ற கருத்தும் உள்ளது.
அகத்தியர் பல்வேறு மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார்.
பல்வேறு சித்தர்கள் இயற்றிய பாடல்களும், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு கவிஞர்கள் இயற்றிய பாடல்களும், உரைநடை நூல்களும் பிற்காலத்தில் எழுதப்பட்டன. அனைத்தும் தமிழன்னையை அலங்கரிக்கின்றன.
ஒரு நண்பர் கூறினார். ""ஆங்கிலத்தில் ரரர என்ற குறியீடு, "வேர்ல்டு, வைடு, வெப்' என்பதன் சுருக்கமாகும். என்று கூறினார்!.... அது மட்டுமல்ல!.... தமிழில் அதற்கு, "வைய, வலை, விரிவு' என்றும் கூறலாம்!.... இதற்கும் அந்த ரரர என்னமாய்ப் பொருந்துகிறது! "வ"
காரம் ர விற்கு சரியாகப் பொருந்துகிறது!'' என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது! நவீன வடிவங்களையும் உள்வாங்கும் சக்தி தமிழுக்கு இருக்கிறது!
தமிழிலக்கியங்களைப் படிக்குங்கால் நமது முன்னோர்களின் பண்பாடும், வாழ்க்கை முறைகளும் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன. இன்றளவும் தமிழ் இளமையோடும், எளிதாகக் கருத்துகளைச் சொல்லும் அழகோடும் சிறந்து விளங்குகிறது!
தமிழன்னையை வணங்குவோம்! தமிழ்ச் சுவை திகட்டாதது! சுவைப்போம்! பகிர்வோம்!
நிறைவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.