கருவூலம்: உத்தரப் பிரதேசம்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமா?
உத்தரப் பிரதேசம் மாநிலம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமா?
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே! இம்மாநிலத்தின் தலைநகரம் லக்னோ. அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்களாகும். ஹிந்தி மற்றும் உருது ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய மொழிகளாகும்.
புவியமைப்பு
Advertisement
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ளது. 243,290 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மாநிலத்தினை உத்தரகண்ட், ஹிமாச்சலப்பிரதேசம், ஹரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. இம்மாநிலத்தின் வடக்கே நேபாள நாடு அமைந்துள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட ஆறுகள் இம்மாநிலத்தில் பாய்கின்றன. கங்கை, யமுனை, கோமதி உள்ளிட்ட பெரும் நதிகள் உத்தரப்பிரதேசத்தின் வழியாகப் பாய்கின்றன. இம்மாநிலத்தின் 90 சதவீதத்து -க்கும் அதிகமான பகுதிகள், கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் கால்வாய்கள் மூலமாக பாசன வசதி பெறுகின்றன. எனவே இம்மாநிலம் மிகச் செழிப்பாகக் காணப்படுகிறது. தானிய உற்பத்தியில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
கனிம வளங்கள்!
நிலக்கரி, டோலோமைட், ரத்தினக்கற்கள், நிலக்கரி, சிலிக்கா, சுண்ணாம்புக்கல், மாங்கனீசு, தாமிரம், ஜிப்சம், போன்றவை இங்கு அபரிதமாகக் கிடைக்கின்றன.
வரலாறு!
வேதகாலம்
வேதகாலத்தில் இம்மாநிலம், குருநாடு, பாஞ்சாலம், கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது. அயோத்தி கோசல நாட்டின் தலைநகரமாக இருந்துள்ளது. இதிகாசங்களில் இந்த இடங்கள் பற்றி குறிப்புகள் உள்ளன. சூரிய குல மன்னர்களான தசரதன், ராமன், ஆகியோர் ஆட்சி செய்தபிரதேசம்.
வரலாற்றுக் காலம்!
இம்மாநிலத்தில் பெருவாரியான பகுதிகளை தில்லி சுல்தான்களும், மொகலாயர்களும், பாரசீக ஷியா இஸ்லாமிய நவாப்களும் மற்றும் ஆப்கானிய அரச குலத்தவரும் ஆட்சி செய்துள்ளனர்.
1719 முதல் 1818 வரை தனியுரிமையுடனும், பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்டு சுதேசி சமஸ்தான மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்தியக் குடியரசின் ஒரு பகுதியானது. 2000 - ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாநிலம் நிர்வாக வசதிகளை முன்னிட்டு 71 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
காண வேண்டிய முக்கிய இடங்கள்!
ஆக்ரா!
டெல்லியிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் யமுனை நதிக்கரையில் ஆக்ரா நகரம் உள்ளது. மகாபாரதத்தில் "அக்ரவேனா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள ஆக்ரா நகரம் டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியால் உருவானது. முகலாயப் பேரரசின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்தகரில் மொகலாயர்கள் பல்வேறு கட்டடங்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டியுள்ளனர். அவற்றில் சில....
தாஜ்மஹால்!
மொகலாய மன்னர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்டது தாஜ்மஹால்! சுமார் 22 ஆயிரம் பணியாட்களைக்கொண்டு 23-ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மும்தாஜ் மற்றும் ஷாஜஹானின் சமாதிகள் உள்ளன. 7 மீட்டர் உயரமுள்ள அழகிய குவிமாடம் கொண்டது. உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. இதைத்தவிர சுற்றிலும் 4 சிறிய குவிமாடங்களும் உள்ளன. மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புகள் 40 மீ உயரத்திற்குக் கட்டப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்கூடம் எண்கோண வடிவானது. மிகச் சிறந்த வேலைப்பாடுகளாலும், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டும் அழகுபடுத்தப் பட்டுள்ளது.
தாஜ்மஹால் 300 மீ நீளமும், 300 மீ. அகலமும் கொண்ட பூங்காவிற்குள் அமைந்துள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் வந்து பார்த்து ரசிக்கும் மிக முக்கிய இடம் இது!
ஆக்ரா கோட்டை!
மொகலாயர் காலத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை இது! மொகலாயர் பேரரசர்களான பாபர், ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசீப் ஆகியவர்கள் இக்கோட்டையில் வசித்துள்ளனர். இக்கோட்டை யுனெஸ்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சிக்கந்தர் லோடி (கி.பி. 1487 - 1517) ஆக்ராவைத் தலைநகராகக் கொண்டு இக்கோட்டையிலிருந்தே ஆட்சி செய்தசார். பிறகு சிக்கந்தர் லோடியின் மகன் இப்ராஹிம் லோடி காலத்தில் இக்கோட்டையில் பல அரண்மனைகளும், கிணறுகளும் மசூதிகளும் கட்டப்பட்டன.
பின்னர் இக்கோட்டை மொகலாயர்களால் கைப்பற்றப்பட்டது. அப்போதுதான் கோஹினூர் வைரம் மொகலாயர் வசம் வந்தது. பின்னர் 1520 - இல் இக்கோட்டை ஆப்கனிஸ்தானைச் சேர்ந்த "சேர் ஷா' வினால் கைப்பற்றப்பட்டது. மீண்டும் 1556 - ஆம் ஆண்டு மொகலாய மன்னர் அக்பர் இதனைக் கைப்பற்றினார். அவரே இக்கோட்டையைப் பலப்படுத்தி புனரமைத்தார். அதற்காக 14,44,000 ஆட்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு (1573 - இல்) 17 ஆணடுகளில் கட்டி முடித்தார். பின் வந்த மன்னர்களால் இக்கோட்டை மேலும் சீர்படுத்தப்பட்டது. ஒளரங்கசீப் இக்கோட்டைக்குள்தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இக்கோட்டையின் மதிற்சுவர் 70 அடி உயரம் கொண்டது. நான்கு நுழைவாயில்கள் உள்ளன. இக்கோட்டையில் முன்பு 500 கட்டடங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 30 கட்டடங்களே எஞ்சியுள்ளன.
ஃபதேபூர் சிக்ரி!
ஆக்ரா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் ஃபதேபூர் சிக்ரி. மொகலாயப் பேரரசர் அக்பரால் 1570 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1585 - ஆம் ஆண்டு வரை பேரரசின் தலைநகரமாகச் செயல்பட்டது. இன்று எஞ்சியிருக்கும் அரண்மனைகளும், மசூதியும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்நகரம் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலாண்ட் தர்வாசா
ஃபதேபூர் சிக்ரியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய வாயில் கட்டடம்! குஜராத் பகுதியை வெற்றி கொண்டதின் நினைவாக அக்பரால் 1602 - ஆண்டு கட்டப்பட்டது.
இத்மத் உத் தெளலா கல்லறை!
இந்தக் கல்லறை அக்பரின் மகனான மன்னர் ஜஹாங்கீரின் மனைவி ராணி நூர்ஜஹானால் கட்டப்பட்டது. இக்கட்டடத்தைச் சுற்றிலும் அழகிய நீரூற்றுகள், நடைபாதைகளோடு பாரசீக பாணி பூங்கா உள்ளது. இக்கல்லறை, "குட்டித் தாஜ்மஹால்' என்றும், "அழகான நகைப்பெட்டி' என்றும் புகழப்படுகிறது.
அக்பரின் கல்லறை!
ஆக்ரா கோட்டைக்கு 13 கி.மீ. தொலைவில் சிக்கந்தரா எனும் இடத்தில் 113 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லறை அமைந்துள்ளது. வெண் பளிங்குக் கற்களாலும், சிவப்பு மணற்கற்களாலும், நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகளுடன், காணப்படுகிறது.
ஆரம் பாக்!
இந்தியாவில் உள்ள மொகலாயர் காலத் தோட்டங்களில் மிகவும் பழமையான தோட்டம் இது. பாபரால் உருவாக்கப்பட்டது. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அழகிய நடைபாதைகளும், நீர் வழிக் கால்வாய்களும், நீரூற்றுகளும் உள்ளன.
காஞ்ச் மஹால்!
சிக்கந்தரா எனும் இடத்தில் அக்பரின் கல்லறை மாளிகைக்கு அருகில் காஞ்ச் மஹால் உள்ளது. இரண்டு அடுக்கு மாளிகையாக உள்ளது. வண்ண ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. அழகிய சல்லடை ஜன்னல்களும், வெளிச்சமும், காற்றும் வர வகைசெய்கிறது. அழகிய தோட்டமும், நீர்வழிப்பாதைகளும், நடைபாதைகளும், தடாகங்களும் அமைக்கப்பட்ட மஹால் இது.
மூஸாம் மான் புர்ஜ்!
இந்தக் கட்டடம் ஆக்ரா கோட்டையின் உள்ளே இருக்கிறது. எண்கோண வடிவமைப்பில் காட்சியளிக்கும் இந்த கோபுரத்திலிருந்து தாஜ்மஹாலைப் பார்த்து ரசிக்கலாம். இங்குதான் ஷாஜஹான் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
தாஜ் அருங்காட்சியகம்!
ஆக்ராவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விஜயம் செய்யும் இடம் இது. ஜல் மஹால் எனும் மாளிகையில் அமைந்துள்ளது. இங்கு எழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், ஆயுதங்கள், ராஜவம்ச சின்னங்கள், ஆயுதங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருள்கள், மற்றும் நாணயங்கள், முக்கிய ஆவணங்கள் என அரிதான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
மரியம் உசு ஜமானி கல்லறை!
ராஜபுத்திர இளவரசியான ஜோதாபாய் 1562 - இல் அக்பரை திருமணம் செய்துகொண்ட பின் மொகலாயப் பேரரசி மரியம் உசு ஜமானி என்று அழைக்கப்பட்டார். இவர் மன்னர் ஜஹாங்கீரின் தாய் ஆவார். இவருடைய கல்லறை சிக்கந்தராவில் உள்ளது.
ஜஸ்வந்த் கி சாத்ரி!
யமுனை நதிக்கரையில் ராஜ்வாரா எனும் இடத்தில் இந்த நினைவு மாடம் அமைந்துள்ளது. இந்த நினைவு மாடம் ரத்தோர் மன்னர் அமர்சிங்கின் மனைவி ரான் ஹதாவிற்காகக் கட்டப்பட்டுள்ளது.
கீதம் ஏரி! - அல்லது - சர் சரோவர் பறவைகள் சரணாலயம்!
கண்ணுக்குக் குளுமையான இயற்கை எழில் கொஞ்சும் இப்பறவைகள் சரணாலயம் ஆக்ராவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
தயால் பாக் - அல்லது - சோயாம் பாக்!
1200 ஏக்கர் பரப்பளவில் பசுமை ஆன்மீக வளாகமாக காட்சி அளிக்கும் இப்பூங்காவில் 110 அடி உயரத்தில் ஹிந்து கட்டடக்கலை முறைப்படி கட்டப்பட்ட கோயில் உள்ளது.
இவற்றைத் தவிரவும் ஆக்ராவில், செளஸத் சம்பா, சின்னி கா ராவுஜா, மங்கமேஷ்வர் கோயில், மொகலாய பாரம்பரிய ராஜ பாதை, மெஹ்தாப் பாக் உள்ளிட்ட பல முக்கிய அழகிய இடங்கள் உள்ளன. ஆக்ரா மார்க்கெட் பகுதியில் உள்ளூர் கலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடரும்.....