சிறுவர்மணி

சிறுவர்கள் நடத்திய சிறப்புத் திருவிழா!

சி.வ.சு. ஜெகஜோதி

கோயில் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று அழைக்கப்படும் வகையில் ஏராளமான சிவாலயங்களும்,வைணவத் திருத்தலங்களும் நிறைந்ததும், பழமையும், பெருமையும் மிக்க நகரம் காஞ்சிபுரம். ஓராண்டில் 365 நாட்களுமே ஏதேனும் ஒரு கோயில் திருவிழா நடந்து கொண்டே இருக்கும்! 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு புகழ்பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசித் திருவிழாவின் போது கருடசேவைக் காட்சியையும்,தேரோட்டத்தையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வருவார்கள். இப்பிரமோற்சவத்தின் போது தினசரி காலை,மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் வீதியுலா வரும் அழகே அழகு!

பொதுமுடக்கம் காரணமாக கோயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு இந்த ஆண்டு எந்தத் திருவிழாவும் நடைபெறாதது பக்தர்களிடையே கவலையை உண்டாக்கி இருக்கிறது.கோயில்களில் தான் திருவிழாக்கள் நடக்கவில்லை. நாமாவது வைகாசி மாத பிரமோற்சவத்தைப் போலவே வெவ்வேறு வாகனங்களில் பெருமாளை அலங்கரித்து நம்மால் முடிந்த அளவுக்கு திருவிழாவை நடத்துவோம் என காஞ்சிபுரம் சாஸ்திரி நகரில் உள்ள எஸ்.சரவணன்(13), ப.ஜெகன்(9), ஸ்ரீகுருசரண்(9), ஸ்ரீஹரிஹரன்(6)என்ற நான்கு சிறுவர்கள் முடிவு செய்தனர்!

அதே பகுதியில் வசிக்கும் நவநிதீஸ்வரன் கோயில் அர்ச்சகர் பி.எல்.வெங்கடகிருஷ்ணனை தொடர்பு கொண்டனர்.அவரும் பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் ஓய்வாக இருந்ததால் சிறுவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார்.

நால்வரும் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகை மொத்தம் ரூ.7 ஆயிரம் இருந்தது! இத்தொகைக்கு களிமண்ணால் செய்யப்பட்டு,வர்ணம் பூசப்பட்ட அழகழகான யானை, குதிரை, யாழி, அன்னப்பறவை, சிங்கம் உள்ளிட்ட பொம்மை வாகனங்களை விலைக்குவாங்கினர். அதில் சிறிய பெருமாள் சிலை ஒன்றையும் வைத்து அலங்கரித்துள்ளனர். வைகாசி மாத பிரம்மோற்சவத்தைப் போலவே 10 நாட்களும் தினசரி காலை,மாலை இருவேளையும் அவர்கள் வசிக்கும் சாஸ்திரி நகர் கற்பகவிநாயகர் கோயில் தெருவில் வீதியுலாவாக எடுத்துச் சென்றனர்! இச்செயல் அத்தெரு மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது! பெருமாளே நேரில் வந்து காட்சியளிப்போது போன்று வீதியுலாவின் போது தேங்காய்,பழம் வைத்து படைத்தும்,ஆரத்தி காண்பித்தும் வழிபட்டார்கள்!

நால்வரில் ஒருவரான எஸ்.சரவணனைச் சந்தித்தேன். சரவணன் கூறியது...

""காஞ்சிபுரத்தில் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் பொம்மைக்காரத் தெருவில் சிறிய பொம்மை வாகனங்களை விலைக்கு வாங்கினோம். அதில் ஸ்ரீகுருசரண் வீட்டில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட 6 அங்குலத்தில் உள்ள பெருமாளையும்,3 அங்குலத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சிலையையும் வைத்து அலங்கரித்தோம்! தினசரி காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் (கோயில் திருவிழாவைப் போலவே) பெருமாளை அலங்கரித்து 10 நாட்களும் வீதியுலாவாக எடுத்துச் சென்றோம்! தெரு மக்கள் தந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை! பலரும் தினசரி நைவேத்தியம் காட்டி ஆரத்தி எடுத்தும்வழிபட்டார்கள்!

""துதிகள், ஸ்தோத்திரங்கள் உண்டா?''

அதில்லாமலா? ஸ்ரீகுருசரணுக்கு பல ஸ்தோத்திரங்கள் தெரியும்! அவன் தினமும் வீதியுலாவின் போதும்,மகா ஆரத்தி காட்டும் போதும் தூப்புல் வேதாந்த தேசிகர் இயற்றிய ஸ்தோத்திரம், காய்த்ரி மந்திரம் ஆகியன பாடி தீபாராதனை காட்டுவான்! ஸ்ரீஹரிஹரன் சுவாமி வீதியுலாவின் போது இசை வாத்தியத்தை வாசித்துக்கொண்டே போவான்! அவனுக்குப் பின்னால் நானும், ஜெகனும் பெருமாளை தோளில் தூக்கிக்கொண்டே கற்பக விநாயகர் கோயில் தெரு வரை வீதியுலாவாக எடுத்துச் சென்று திரும்புவோம்!.....

""அபிஷேகம் எல்லாம் உண்டா?''

""நிச்சயமா! தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்! இரு வேளையும் வீதியுலா! மகா ஆரத்தி! அத்தனையும் நடத்தினோம். இறைவனுக்கு மிளகுப் பொங்கல் நைவேத்தியம்! அதையே தெரு மக்களுக்கு பிரசாதமாகவும் வழங்கினோம்!கருடசேவை, தேரோட்டம், தீர்த்தவாரி என அனைத்தையும் வரிசையாகவும்,சிறப்பாகவும் செய்தோம்! இரவு வீதியுலா முடிந்து பெருமாள் எங்கள் இல்லத்துக்கு திரும்பியவுடன் வீட்டில் அலங்கரித்த ஊஞ்சலில் பெருமாளையும்,தாயாரையும் வைத்து ஊஞ்சல் உற்சவமும் நடத்தினோம்! '' என்றான்.

சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட கோயில் அர்ச்சகர் பி.எல்.வெங்கடகிருஷ்ணன் கூறியது..

""சிறுவர்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை.....எனக்கு கோயில் பணியும் இல்லை.....பொதுமுடக்கம் காரணமாக அனைவரும் ஓய்வில் இருந்ததால் விழாவை சிறப்பாக நடத்த முடிந்தது! சிறுவர்களிடையே ஆன்மீக உணர்வு வரவேண்டும், தெய்வபக்தி ஏற்பட வேண்டும்! பிறர் மகிழ்ச்சியடை உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன்! வீதியுலாவின் போது தீர்த்தம், பிரசாதம் வழங்கும் போதும்,ஆரத்தி காட்டும் போதும் அச்சிறுவர்களது அணுகுமுறையை பார்த்து தெருமக்களும் வியந்து போனார்கள்! தினசரி இவர்கள் எடுத்துச் செல்லும் பெருமாளுக்கு பழங்கள்,கற்கண்டு ஆகியன பிரசாதமாக படைத்தும், ஆரத்தி காண்பித்தும் வழிபட்டார்கள். ஒரு விழாவை எப்படி நடத்த வேண்டும் என்ற பயிற்சியும், கூட்டு முயற்சியின் பலனையும் பிள்ளைகள் உணர்ந்து கொண்டார்கள். நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பித்தான் இந்த நாடே இருக்கிறது! '' என்றார்.

அற்புதமான பாலர் திருவிழா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT