முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: சாயத்தின் நாயகன்-  பதிமுகம் மரம்

நான்தான் பதிமுகம் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் செசல்பானியா சப்பான் என்பதாகும் நான் சிசல்பினேசியக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாவேன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:


குழந்தைகளே நலமா?

நான்தான் பதிமுகம் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் செசல்பானியா சப்பான் என்பதாகும் நான் சிசல்பினேசியக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாவேன். நான் சிசல்பினேசிய குடும்பத்தைச் சேர்ந்த செந்நிறச் சாயத்தைக் கொடுக்கும் மரமாவேன். எனக்கு சப்பாங்கம், சப்பான். பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா என்ற வேறு பெயர்களும் உண்டு,. நான் நன்கு வளர்ந்து பயன் கொடுப்பதற்கு சுமார் 8 ஆண்டுகளாகும். நான் முட்களுடன் பத்து மீட்டர் வரை வளரும் ஒரு குறு மரமாவேன். என் இலைகள் பச்சை நிறத்தில், கூட்டிலைகளாக இருக்கும். நான் ஒரு வருடத்திலேயே பூப்பேன். நான் வறட்சியைத் தாங்கி எந்த காலநிலையிலும் வளரும் ஒரு மரமாவேன். நான் கொடுக்காப்புளி மரத்தைப் போல இருப்பேன். உங்களுக்கு வரும் பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் எங்கிட்ட இருக்கு.

நான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மிகவும் பிரபலமானவன். ஏன்னா, பத்தமடை என்னும் ஊரில் உள்ள பாய்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் நான் அவங்களுக்கு துணையாக இருக்கேன். எப்படி? கோரையை நெய்வதற்கு முன் அதற்கு இயற்கை சாயமாக என் மரத்திலிருந்து எடுக்கப்படும் சாறை ஏற்றி, பின் பாயை பின்னுகின்றனர். உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, பத்தமடை பாய் உலகப் புகழ் பெற்றது. பத்தமடை கோரைப் பாய்கள் என் மரத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணத்தால் சாயமேற்றப்பட்டுதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் நான் உங்களுக்கு அந்நியசெலாவாணியையும் ஈட்டித் தருகிறேன்.

என்னிடமிருந்துதான் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சாயமேற்றும் தொழிலில் என் பங்கு மகத்தானது. இந்திய மருத்துவத்தில் பயன்படும் "லூக்கோல்' என்னும் மருந்தில் நான் பெரிதும் பயன்படுகிறேன். என் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்றவற்றிற்கு எதிராக பயன்படுது. மது பானங்கள், இனிப்பு வகைகள், கேக், குளிர்பானம் போன்றவற்றுக்கு இயற்கை நிறமூட்ட என் மரப்பட்டை பயன்படுது. என் மகத்துவத்தை வெளிநாட்டினர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

என் பட்டை சாயம் தயாரிக்கவும் பயன்படுது. என் மரத்திலிருந்துதான் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும், புற்று நோயையையும் தீர்க்கும் மருந்துகளைத் தயாரிக்கறாங்க. நான் ஒரு சிறந்த கிருமிநாசினி. அதாவது குழந்தைகளே, என் மரப்பட்டைகளைத் தூளாக்கி தண்ணீர் போட்டுக் குடித்தால் தண்ணீர் சுத்தமாவதுடன் எந்த பாக்டீரியாவும் உங்களை அண்டாது. இதனால் உங்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு , மூல நோய், சரும நோய், வராது. அதுமட்டுமா கொழுப்பும் சமச் சீராகும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.

என் பூ, இலைகள் ஒப்பனைக்கு அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். என் மரத்தின் மையத் தண்டில் உள்ள பிரேசிலின் என்ற சிகப்புச் சாயம் காற்றில் பிராண வாயுடன் சேர்ந்தால் அது பிரேசிலியன் வண்ணமாக மாறும் குழந்தைகளே. இந்தச் சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப்படையாது. சிலர் இந்தச் சாயத்தை அரிப்புண்டாகாத முகப் பூச்சுகள் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.

அது மட்டுமா குழந்தைகளே, என் மரத்தின் மையப் பகுதியிலிருந்து எடுக்கப்படும் சாயம் தோல், பட்டு, பருத்தி இழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சமான்கள் மற்றும் பல வகை கைவினைப் பொருள்களுக்கு வண்ணமேற்ற பயன்படுத்தறாங்க. என் சாயம், என் நண்பர் "கயா' எனும் மர சாயமுடன் கலக்கும்போது உங்களுக்கு கருப்பு, ஊதா மற்றும் சிவப்பு வண்ண சாயங்கள் கிடைக்கும். இவை பனை ஓலை மற்றும் தாழை நார் மேலும் பல கைவினைப் பொருட்களை வண்ணம் ஏற்றப் பயன்படுகிறது.

குழந்தைகளே, மரங்கள் இயற்கைக்கு வனப்பூட்டுபவை. மரங்களும், சுத்தமான காற்றும் வாழும் உயிரினங்களுக்கு இரண்டு கண்கள் போன்றது. மரங்கள் இல்லையேல், காற்று இல்லை. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.