முகப்பு
சிறுவர்மணி

பொலலாத எலி!

விஜயும், கோபியும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அடித்த பந்து அங்கிருந்த ஓர் உயர்ந்த செடியை ஒட்டிய சுற்று வேலி வளையத்திற்குள் விழுந்து விடுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

காட்சி - 1
இடம் - விளையாட்டு மைதானம்
மாந்தர் - விஜய், கோபி, மனோ.

(விஜயும், கோபியும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அடித்த பந்து அங்கிருந்த ஓர் உயர்ந்த செடியை ஒட்டிய சுற்று வேலி வளையத்திற்குள் விழுந்து விடுகிறது.)

கோபி: எங்கேடா விஜய்... நீ அடித்த பந்தைக் காணோம்?
விஜய்: அதோ அந்தச் செடியோட வேலிக்குள்ளே விழுந்த மாதிரித்தான் இருந்தது. கிட்டே போய்ப் பாரு!
கோபி: ஆமாண்டா... வேலிக்குள்ளேதான் விழுந்திருக்கு! ஆனா அதை எடுக்க முடியாது போல இருக்கே...
விஜய்: இரு, நான் வந்து பாக்கறேன்... கோபி, அதோ பார். வேலிக்கு அடியிலே ஒரு சின்னப் பள்ளம் இருக்கு. அது வழியா கையைவிட்டு பந்தை எடுத்துடலாம்.
கோபி: டேய்... கையை நுழைக்காதே... அதோ பாரு, நம்ம பந்துகிட்டே ஒரு பெரிய எலி உட்கார்ந்துக்கிட்டிருக்கு, உலர்ந்த இலைக் குப்பை நடுவிலே இருக்கு பாரு. நானே இப்பதான் பாக்கறேன்.
விஜய்: ஆமாண்டா! இரு, ஒரு கொம்பு கொண்டு வரேன். கொம்பால் வேலியைத் தட்டினா, எலி பயந்து வெளியே ஓடிடும். அப்புறம் பந்தை எடுத்துடலாம்!
கோபி: இருடா, அதோ பாரு ஒரு பெரிய நாய். இங்கேயே கவனிச்சுக்கிட்டு இருக்கு. அதுக்குப் பயந்துதான் இந்த எலி, இப்படி வேலிக்குள்ளே பதுங்கிக்கிட்டிருக்கும். நாம எலியை வெளியே விரட்டினா, அந்த நாய் ஒரே பாய்ச்சல்லே இந்த எலியைக் கவ்விக்கிட்டு ஓடிடும். பாவம்டா எலி... நம்மாலே இது சாகக்கூடாது.
விஜய்: ஆமாண்டா, ஆனா எலி பந்தைக் கடிச்சுக் குதறிட்டா என்னடா செய்யறது?
கோபி: அதுவும் புது பந்து. அப்பா நேத்துதான் வாங்கிண்டு வந்திருக்கார். அவருக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.
(அப்போது அவர்கள் தெரு நண்பன் மனோ அங்கே வேகமாக வருகிறான்)
மனோ: ஏய் குட்டித் தம்பிகளா, இங்கே என்ன செய்யறீங்க?
விஜய்: மனோ அண்ணா... இந்த வேலி உள்ளே எங்கப் பந்து மாட்டிக்கிட்டிருக்கு. உள்ளே ஒரு எலியும் உட்கார்ந்திருக்கு. எலியை விரட்டலாம்னு பார்த்தா அந்த நாய், எலியைக் கவ்விடுமோன்னு பயமா இருக்கு...
மனோ: (கேலியாகச் சிரித்தபடி) டேய், போயும் போயும் எலிக்கா பயப்படறீங்க?
விஜய்: ஏன், நீ பயப்பட
மாட்டியா?
மனோ: ஆமாண்டா, எனக்குப் பயமே இல்லை. டேய், கோபி இந்தப் பையை பத்திரமா வெச்சுக்க. உள்ளே வீட்டுக்காக வாங்கின பிரெட் இருக்கு. நாய் இதை மோப்பம் பிடிச்சுட்டா பிடுங்கிண்டு ஓடிடும். இப்பப் பாரு இந்தப் பந்தை நான்
எப்படி எடுக்கறேன்னு...
கோபி: வேணாம் மனோ அண்ணா, எலிகடிச்சுடும்!
மனோ: கடிக்காதுடா... பார்த்துக்கிட்டிரு... எதுக்கும் நீங்க கொஞ்சம் தள்ளியே நில்லுங்க. (மனோ பந்தை வெளியே எடுத்துவிடுகிறான்)
விஜய், கோபி: டேய் சூப்பர்டா!
விஜய்: எப்படிடா பயமில்லாம கையை உள்ளே விட்டே?
மனோ: அதுக்கெல்லாம் தைரியம் வேணும் குட்டித் தம்பிகளா. இப்போ பாரு அந்த எலியையே என் கையால லபக்குனு பிடிச்சு வெளியே எடுக்கப் போறேன்!
விஜய்: மனோ அண்ணா, பந்தைதான் வெளியே எடுத்துட்டே... எலியை எதுக்கு வீணா பிடிக்கப்போறே?
மனோ: சும்மா விளையாட்டுக்குத்தான்! (என்றபடி மனோ எலியைப் பிடித்துவிடுகிறான். அப்போது எலி கிரீச்...கிரீச் என்று சத்தம் போடுகிறது.)
மனோ: எலி பாரு, எப்படிக் கத்தறது... கடிச்சுடப் போகுது...
(மனோ சற்று எலியைக் கீழே விட, எலி வேகமாக ஓட, அருகிலிருந்த நாய், அதைக் கவ்விக் கொள்கிறது)
விஜய்: அச்சச்சோ... பாவம் எலி!
மனோ: கோபி, சீக்கிரம் அந்தப் பையிலிருந்து பிரெட்டை எடு. (கோபி பிரெட்டுத் துண்டுகளை எடுத்து வீச, நாய் எலியை விட்டுவிட்டு பிரெட்டைக் கவ்விக்கொண்டு வேகமாக ஓடுகிறது. மனோ வேகமாக ஓடிப் போய் எலியைக் கையில் பிடித்தபடி வர, எலி மீண்டும் கிரீச்...கிரீச்சென்று கத்துகிறது.
கோபி: விஜய்... மனோ அண்ணாவை அந்த எலி கடிக்கத்தான் போறது...
மனோ: இது என்னை எதுவும் செய்யாது தம்பிகளா... இது சாதுவான எலி. நீங்களும் தொட்டுப் பாருங்க...
கோபி: வேணாம், வேணாம்... கிட்டே கொண்டு வராதே பயமா இருக்கு...
மனோ: இப்போ பாரு, நான் இந்த எலியோட பேசப்போறேன்... "என் அருமை எலியே... நேற்று விளையாட்டு மைதானத்திலே உன்னோடு விளையாடிக் கிட்டிருந்தேன். நீ தப்பிச்சு ஓட நினைச்சு, அந்தக் கூண்டுச் செடிக்குள்ளே போய் ஒளிஞ்சுக்கிட்டே. அப்போ திடீர்னு இடி இடிச்சுது. வானம் இருட்டிக்கிட்டு வந்தது. மழையும் வர மாதிரி இருந்தது. அதனால்தான் நான் வீட்டுக்கு ஓடிட்டேன். ஆனால் மழை வரல. கொஞ்ச நேரம் முன்னாலே உன்னைப் பார்க்க வந்தபோதுதான் இந்தக் குட்டித் தம்பிகளையும் பார்த்தேன். மறுபடியும் நீ தப்பிச்சு ஓடப் பார்த்தே! நாய்கிட்டே மாட்டிக்கிட்டே! நான்தான் உன்னைக் காப்பாத்திட்டேன். இனிமே இப்படி தப்பிச்சு ஓடமாட்டாயே? (எலி, கிரீச்....கிரீச் எனக் கத்தியது) பாருடா, என் எலி பதில் பேசறது!
விஜய்: இந்த அதிசய எலி உனக்கு எப்படிகிடைச்சுது?
மனோ: அப்பாவோட மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். அங்கே வாசல்லே ஒருத்தர் இந்த மாதிரி எலிகளை வித்துகிட்டிருந்தார். நான் வளர்க்கிற பூனைக்கு இதைக் காட்டி குறும்பு விளையாட்டு விளையாடலாம்னு வாங்கிட்டு வந்தேன்.
விஜய்: எப்படி உன் பூனை இந்த எலியை உயிரோடு விட்டுவச்சிருக்கு?
மனோ: குட்டித் தம்பிகளா... பூனை, நாய் எதுவுமே இந்த சாது எலியை ஒன்னும் செய்யமுடியாது. எப்படியும்தப்பிச்சிடும்.
கோபி: அப்போ இது பொல்லாத எலிதான்.
மனோ: அதான் இல்லே... இது பொம்மை எலி...
விஜய்: என்னது... பொம்மை எலியா? நம்பவே முடியலையே...
மனோ: ஆமாம், இது கீ கொடுத்தா ஒரு கிலோ மீட்டர் தூரம் வேகமா ஓடும். ஆனா கொஞ்சம்கூட சத்தமே கேட்காது. இந்த பட்டனை அமுக்கினால் கிறீச்சுன்னு கத்தும். இதை அப்பப்போ உங்களுக்குத் தெரியாம சத்தம்போட வெச்சு உண்மை எலிதான்னு நம்ப வெச்சேன். நாய் கவ்வினதும் உங்களை நம்ப வைக்கத்தான் பிரட் துண்டுகளைப் போடச் சொன்னேன். நீங்களும் நல்லா ஏமாந்துட்டீங்க... ஏய், பொம்மை எலியே நீ வாழ்க!
விஜய்: இல்லை... இது பொல்லாத எலி!
கோபி: நீயும் பொல்லாத அண்ணா!

(சிரிப்பலைகள்)

-திரை-
 

முழு கட்டுரையைப் படிக்க →