முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: அஸ்ஸாம் மாநிலம்!

1911 - இல் நிறுவப்பட்ட டோக்லாய் தேசிய தேயிலை ஆராய்ச்சி மையம் உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த இடம் அஸ்ஸாம் சுற்றுலா இடங்களில் முக்கியமானதாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

சென்ற இதழ் தொடர்ச்சி......

டோகாலாய் தேயிலை ஆராய்ச்சி மையம்

1911 - இல் நிறுவப்பட்ட டோக்லாய் தேசிய தேயிலை ஆராய்ச்சி மையம் உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த இடம் அஸ்ஸாம் சுற்றுலா இடங்களில் முக்கியமானதாகும்.

ஹஃப்லொங் ஏரி!

ஹஃப்லொங் நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஏரி நகரத்திற்குப் பெருமை சேர்க்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய இயற்கை நீர்நிலைகளில் இதுவும் ஒன்று. ஆகவே இது அஸ்ஸாமின் ஸ்காட்லாந்து எனப் புகழப்படுகிறது. படகு சவாரி வசதி கொண்டது. அழகிய மலைகள் சூழந்த இடம்!

அகோம் ராஜா அரண்மனை!

சிவசாகர் மாவட்டத்தில் இந்த அரண்மனை உள்ளது. பழைய அரண்மனை சிதிலமடைந்துவிட்டது. புதிய அரண்மனை ஏழு அடுக்குகளாக 1752 - ஆம் ஆண்டு மன்னர் ராஜேஸ்வர் சின்ஹாவால் கட்டப்பட்டது.

சக்ர ஷீலா வனவிலங்கு சரணாலயம்!

துப்ரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 11, 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பாங்கான வனப்பகுதி 1994 - ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

தங்க லாங்கூர் இச்சரணாலயத்தின் சிறப்பான விலங்காகும்! மேலும் பல்வேறு விலங்குகளும், தாவர வகைகளும், பறவையினங்களும் இங்குள்ளன.

தேஜ்பூர்

இயற்கை அழகு நிறைந்த நகரம் தேஜ்பூர். பிரம்மபுத்திரா நதி இந்நகரின் வழியாகப் பாய்கிறது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இடம். மிக முக்கிய சுற்றுலாத் தலம்! இப்பகுதியில், நமேரி தேசியப் பூங்கா, பதம் பகுரி, அக்னிகர், பமுனி மலைகள், கோலியா போமோரா சேது, புராசபாரி வனவிலங்கு சரணாலயம், சித்ரலேகா உத்யான், மாவட்ட அருங்காட்சியகம், உகுகேர் தேம், வால் தேக் என பல இடங்கள் இங்கு பார்ப்பதற்கு உள்ளன.

பாதம் புகுரி

பாதம் புகுரி மற்றும் ஹமாரா புகுரி ஆகியவை பாமுனி மலைகளின் அருகே அமைந்துள்ள ஒரு ஜோடி ஏரிகளாகும். 19 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இருந்து உருவாக்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம்!

ஒராங் தேசியப் பூங்கா!

அஸ்ஸாமின் டாரங் மற்றும் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திராவின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. குவஹாத்தி நகரத்திலிருந்து140 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. "மினி காசிரங்கா' என அழைக்கப்படும் முக்கியமான பூங்கா!

நமேரி தேசியப் பூங்கா!

அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தேஸ்பூரிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள இது மாநிலத்தின் மூன்றாவது பெரிய தேசியப் பூங்காவாகும்.

உம்ரங்கோ!

கண்கவர் வடக்கு கச்சார் மலையில், மேகாலயாவிற்கு அருகில் இந்த அழகிய மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் மருத்துவ குணம் உள்ள ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது.

மைபாங்!

இது கச்சாரி மன்னர்களின் முன்னாள் தலைநகரம். மனதை மயக்கும் மலைவாசஸ்தலமாகும்! மலைகளில் பல அருவிகளும் உள்ளன.

உக்ரதாரா கோயில்!

மணஸ் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஆன்மிக சுற்றுலாத்தலம். இக்கோயில் காளி தேவிக்கானது. இக்கோயிலின் கருவறைப் பகுதியில் தெய்வச் சிலை எதுவும் இல்லை. மாறாக நீர் நிரம்பிய ஒரு குழியே தெய்வ அடையாளமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம்!

குவஹாத்தி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல புராதனமான அஸ்ஸாமிய நாணயங்கள், பழங்குடியினரின் கலைப்பொருட்கள், சிலைகள், நெசவுத் துணி வகைகள், போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் பாதுகாக்கிறது.

பனிமூர் நீர்வீழ்ச்சி!

பிரபலமான இந்த நீர்வீழ்ச்சி ஹாஃப்லாங் ஊரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

டிமா ஹசாவ்!

அஸ்ஸாமிலுள்ள கச்சார் மலைகள் உள்ள இடம டிமா ஹசாவ் ஆகும். இம்மலைகள் பழங்குடியினரின் தாயகமாகும். அஸ்ஸாமின் மிக முக்கியமான பார்க்க வேண்டிய இடமாகும்.

போபிடோரா வனவிலங்கு சரணாலயம்!

கிழக்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா நாட்டின் மிக அரிதான விலங்கு மற்றும் பறவை இனங்கள் வாழும் இடமாகும். இங்கிருந்து இமயமலைச் சிகரங்களையும், பரந்த புல்வெளிகளையும் பார்த்து ரசிக்கலாம். பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற இடம் இந்தச் சரணாலயம்!

டிப்பர் பில்- ஏரி!

குவஹாத்திக்கு தென்மேற்கே 13 கி.மீ. தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது. பறவைகளைப் பார்ப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்ற இடம்!

குவஹாத்தி கோளரங்கம்!

இந்த பிரபலமான வானியல் ஆராய்ச்சி மையத்தில் கிரகணங்கள், விண்கல் மழை போன்ற வானியல் அதிசயங்களைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொடரும்.....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.