கடவுள்!
அற்புதத் துறவி அவர்! அன்பு கொண்டவர்! தினமும் காலை, மதியம், மாலை வேளைகளில் கடவுளை மனமுருகிப் பிரார்த்தனை செய்பவர்! மாலைப் பிரார்த்தனைகள் முடிந்ததும் கடவுள் மீது பாடல்களை தன் சீடர்களுடன்
அற்புதத் துறவி அவர்! அன்பு கொண்டவர்! தினமும் காலை, மதியம், மாலை வேளைகளில் கடவுளை மனமுருகிப் பிரார்த்தனை செய்பவர்! மாலைப் பிரார்த்தனைகள் முடிந்ததும் கடவுள் மீது பாடல்களை தன் சீடர்களுடன் பாடுவார்! அவருக்கு நல்ல குரல் வளம்! அவரது பஜனைப் பாடல்கள் ஆசிரமத்திற்கு விஜயம் செய்யும் கிராம மக்கள் அனைவரையும் ஈர்க்கும்!
பிறகு சற்று நேரம் சொற்பொழிவு ஆற்றுவார். அவரது கருணை மிகுந்த வார்த்தைகள் சுற்றியுள்ள கிராம மக்களிடையே நல்லறிவை போதித்து வந்தன. அனைவரும் ஒருவரோடொருவர் அன்பும் அனுசரணையும் கொண்டு தத்தமது தொழில்களைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தனர்.
துறவி, காணிக்கையாக பொன்பொருள்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். அன்பு மிகுந்த மக்களின் வற்புறுத்தலின் பேரில் பழங்கள், தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களை மட்டும் ஏற்றுக்கொள்வார். அவரது சீடர்களுக்கு சமையல்கலையை சொல்லிக்கொடுத்திருந்தார். அவர்களும் இன்சுவையோடு சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தனர்.
அவரது ஆசிரமத்தைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களுக்கும், பசியால் வாடும் ஏழை மக்களுக்கும் அவர் இலவசமாக உணவு அளித்து வந்தார். தானே தன் கையால் உணவு பரிமாறுவார். அங்கு வந்தவர்கள் யாரும் பசியோடு செல்லமாட்டார்கள்!
ஒருநாள் அவர் வழக்கப்படி இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவரது பிரார்த்தனைக்கு செவி சாய்த்த இறைவன் அவருக்குக் காட்சி கொடுக்க முடிவு செய்தார்.
இறைவன் அவரது ஆசிரமத்திற்கு வந்தார். ஒளியும், கருணையும் கொண்ட கடவுள் தன் முன்னே தோன்றியவுடன் துறவிக்கு மிகுந்த பரவசமாகி
விட்டது!
ஆனால் அப்போது ஏழைகளுக்கு உணவளிக்கும் நேரம் வந்துவிட்டது! தினமும் தன் கையால் பரிமாறும் வழக்கமுடைய அந்தத் துறவி என்ன செய்வது என்பது தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டார். இறைவனோடு உரையாடுவதா?.... அல்லது உணவு பரிமாறப் போவதா?.... சற்று நேரம் யோசித்தார். பிறகு இறைவனை நோக்கி, ""கடவுளே!.... மன்னியுங்கள்!.... இது ஏழைகளுக்கு உணவு பரிமாறும் நேரம். நான் இந்த ஏழைகளுக்கு உணவு பரிமாறுவதை எனது நித்தியக் கடமையாகச் செய்துவருகிறேன். மன்னியுங்கள்!.... நான் என் கடமையைச் செய்யப் போகிறேன்...'' என்று கூறிவிட்டு உணவுக் கூடத்திற்குச் சென்றுவிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் ஆனது. தன் கடமையைச் செய்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினார் அந்தத் துறவி. அங்கு அவருக்காக தரையில் அமர்ந்துகொண்டு இறைவன் காத்திருந்தார். துறவிக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது! தனக்காகக் காத்திருந்த இறைவனைக் கண்டதும் கண்களில் நீல் மல்கியது! கைகளைக் கூப்பியபடி அவர் முன் நின்றார்.
""மகனே!.... பசி போக்குவது ஒரு நல்ல காரியம்!.... தர்மம்!.... நற்காரியங்களைச் செய்பவர்களுக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன்!.... அவர்களுக்கு என் ஆசியையும் எப்போதும் வழங்குகிறேன்!....''
கடவுளின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்தார் அந்தத் துறவி! கைகளைத் தொட்டு அவரை எழுப்பி, ""உனது எல்லா விருப்பங்களும் நிறைவேறட்டும்!'' என்று கூறி மறைந்தார் இறைவன்!