மரங்களின் வரங்கள்!: வெட்ட வெட்ட வளருவேன் - கோழிக் கொண்டை மரம்
நான்தான் கோழிக் கொண்டை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஸ்பாத்தோடியா கம்பானுலேட்டா என்பதாகும். நான் பிக்னோனியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா,
நான்தான் கோழிக் கொண்டை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஸ்பாத்தோடியா கம்பானுலேட்டா என்பதாகும். நான் பிக்னோனியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு நீர் கடலாத்தி மரம், நீர் பீச்சி மரம், ஊற்று மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. என் மரத்தின் பூக்கள் கோழிக் கொண்டையின் வடிவமைப்பை ஒத்திருப்பதால் என்னை அந்தப் பெயரால் அழைக்கிறாங்க. எனது தாயகம் ஆப்பிரிக்கா கண்டத்து அங்கோலா. பின்னர், இலங்கைக்கு வந்து, இந்தியாவிலும் பல இடங்களில் காணப்படுகிறேன். நான் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாவேன். நான் 22 மீட்டர் உயரம் கூட செங்குத்தாக வளர்ந்து, உச்சியில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு அடர்த்தியாக இருப்பேன். நான் நல்ல ஈர சூழ்நிலையில் நன்கு வளர்ந்து உங்களுக்கு பயன்கள் பல கொடுப்பேன்.
என் தழையமைப்பு ஒரு பந்தைப் போன்றிருக்கும். வெளிநாடுகளில் காகிதத் தொழிலுக்காக என்னை பெருமளவில் வளர்க்கிறார்கள். என் வேர்கள் மண் அரிப்பினை தடுத்திடும் வல்லமையைக் கொண்டவை. என்னை ஆற்றோரம் நட்டு வளர்த்தீர்களேயானால் நான் மண் அரிப்பைத் தடுப்பேன். நான் எளிதில் தீப்பிடிக்க மாட்டேன். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் என் கிளைகளின் நுனியில் பூங்கதிர்கள் உருவாகும். அதில் உருவாகும் மொட்டுகள் வெளிர் பச்சை நிற வெல்வெட் போர்த்தியது போல இருக்கும்.
Advertisement
இந்த மொட்டுகளில் நீர் நிரம்பி இருக்கும். இம்மொட்டுகளை அழுத்தினால் நீர் வெளியேறும். மொட்டுகள் மலர்ந்து பெரிய பூவாக செந்நிறத்தில் மலர்ந்து நிற்கும். மரம் முழுவதுமே பூக்கள் மலர்ந்து நீங்கள் காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
என் தழைகள் மண்ணுக்கு நல்ல உரமாகும். கிராமங்களில், ஆற்றோரம், கால்வாய்க் கரைகள், தோட்டங்களில் வேலியாக வளர்த்தால் மண்ணுக்கு தழைச் சத்தாவேன். நகர்ப்புறங்களில், பெரிய வீடுகளின் வாயில்கள் அருகிலும், சாலையோரங்களிலும் என்னை வளர்ந்தால் செந்நிற பூக்களுடன் நான் அழகாக காட்சியளிப்பேன். நான் வெட்ட வெட்ட தழைப்பேன். என் இலையில் குளோராஜினிக் அமிலம் உள்ளது. என் பட்டையில் டானின் சத்து உள்ளதால் சாயம் ஏற்ற பயன்படுத்தலாம். நான் மிகவும் மென்மையானவன் என்பதால், மரக் கரண்டி, தட்டு, பொம்மைகள் செய்ய பெரிதும் பயன்படுவேன். காகிதக் கூழ் தயாரித்திடவும் என்னை பயன்படுத்துறாங்க. ஆப்பிரிக்கா நாட்டு பூர்வீகக் குடிமக்கள் என் இலைகளையும், பூக்களையும், பட்டைகளையும் இடித்து நாள்பட்ட புண்கள், கட்டிகள் உள்ள இடங்களில் வைத்து கட்டுகிறார்கள். என்ன ஆச்சரியம், அப்புண்கள் இருந்த இடம் தெரியவில்லையாம்.
என் பட்டைகள் சரும நோய்களுக்கு ஒரு அருமருந்தாகும். என் பட்டையை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தினால் வயிற்றுப் போக்கு அறவே போய் விடும். அதுமட்டுமல்ல வயிறு, குடல், சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் நீங்கிடும். உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, ஹவாய் தீவில், என் அழகிற்காக விமானத்தின் மூலம் விதைகளைத் தூவி, அடர்வன காடுகளை வளர்க்க முற்பட்டுள்ளார்களாம்.
குழந்தைகளே, மரங்களை அழிப்பதால்தான் பல பகுதிகளில் பருவம் தவறி மழை பெய்கிறது. பெய்தாலும் யாருக்கும் எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணே கடலில் சென்று கலந்து, மீண்டும் வறட்சியை உண்டாக்குகிறது. மரங்களைக் காத்தால்தான், புவியைக் காக்க முடியும், புவியைக் காத்தால்தான் உயிரினங்களைக் காக்க முடியும். உங்களுக்குத் தெரியுமல்லவா குழந்தைகளே, மரங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நச்சு வாயுவை உள்வாங்கி, சுத்தமான பிராண வாயுவைத் தருகின்றன. மரங்கள் அதிக அளவு பிராண வாயுவை வெளியிடுவதால் அதை சுவாசிக்கும் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கிறதா ? அது மட்டுமா, ஓடை, குளம், குட்டைகளில் நிலையான நீரோட்டத்திற்கும் மரங்கள் காரணமாக இருக்கின்றன. நன்றி, குழந்தைகளா, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)