குழந்தைகளே நலமா,
நான்தான் வசந்தராணி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் டபேபுயியே ரோசியா என்பதாகும். நான் பிக்நானியசியாயே குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு வசந்தராணி ரோசியா, லிங்கேனு மரம், டிரம்பட் மரம் என்ற வேறு பெயர்களுமுண்டு. தென் அமெரிக்கா, கரீபியன் பகுதி என் தாயகம். நான் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் வரை கூட வறட்சியைத் தாங்கி வளருவேன். வசந்த காலத்தில் நான் பூத்துக் குலுங்கி உங்கள் மனதை வசந்தமயமாக்குவதால் எனக்கு வசந்த ராணி என பெயர் வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.
குழந்தைகளே, என் பூ மிக மிக மென்மையாக மெத்தென்று இருக்கும். என் மரத்தில் 99 ரகங்கள் இருப்பதாக தாவரவியல் அறிஞர்கள் சொல்றாங்க. அதனால் என் பூக்களின் வண்ணம், வாங்கும் சூரிய ஒளியின் தன்மைக்கு ஏற்ப அங்கங்கு மாறியிருக்கும். உங்களுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களை கொல்லும் சக்தி எங்கிட்ட இருக்கு. மூட்டுவலி உள்ளவர்கள் என் மரத்தின் இலைகளை அரைத்து மூட்டுகளின் மீது தடவினால் அந்த வலி பறந்தோடி விடும்.
என் மரத்தின் இலைகளை வெந்நீரில் ஊற வைத்து குடித்தால் இரைப்பை நோய், காய்ச்சல், தொடர் இருமல் குணமாகும். சிலர் இரத்தசோகை காரணமாக சக்தியின்மையால் எப்போதும் சோர்வாகக் காணப்படுவார்கள். அவர்கள் என் பட்டையிலிருந்து கஷாயம் செய்தும் குடித்தால் இரத்த சோகை குணமாகும். என் பட்டைகள், வேர்கள் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அருமருந்தாகும்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், சென்னை - சேலம் - தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் என் பூக்கள் பூத்துக் குலுங்குவதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? வாழப்பாடி பகுதியில், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியிலிருந்து, அயோத்தியாப்பட்டணம் வரையிலான ஏறக்குறைய 10 கி.மீ. தூரத்திற்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை நட்டாங்க. தொடர்ந்து நல்லமுறையில் அப்பகுதி மக்கள் என்னை பராமரித்ததால், நான் இப்போது செழித்து வளர்ந்து, இளஞ்சிவப்பு நிறத்திலும், வெளிர் ஊதா வண்ணத்திலும் பூக்கள் பூத்துக் குலுங்குகிறேன். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், நீங்கள் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் மருத்துவ குணம் கொண்ட என் பூக்களை கண்டு ரசியுங்கள்.
நான் ஒரு துணுக்கு சொல்லட்டுமா ? கேட்கறீங்களா, ஐரோப்பிய நாடானா பிரிட்டனின் மெர்சிடிஸ் நகரில் வசிக்கும் கதே கன்னிங்காம் எனும் 38 வயது பள்ளி ஆசிரியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு பூங்காவில் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டாராம். வாரத்திற்கு ஒரு முறையாவது அந்தப் பூங்காவுக்குச் சென்று, மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து, அதனுடன் நீண்ட நேரம் கொஞ்சி கொஞ்சி பேசுவாராம். இப்பெண்ணுக்கு மனநலம் பாதித்து விட்டது' என மற்றவர்கள் இகழ்ந்தாலும், "என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு, இந்த மரத்தை திருமணம் செய்ததுதான்' என்று கண் சிமிட்டியபடியே சொன்னாராம். அது ஒன்றுமில்லை, அவர் எங்கள் மீது வைத்துள்ள அதீத அன்பைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளே, மரங்கள் உங்களுக்கு ஏற்படும் நோயை தீர்ப்பதோடு, உள்ளத்தின் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே செய்கின்றன. மரங்கள் ஏழை மக்களின் வீடுகளில் விறகாக, எரிபொருளாக பயன்படுகிறதல்லவா, அதைத் தான் சொன்னேன். நன்றி, குழந்தைகளே மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.