கட்டை விரலின் அளவுடைய
கண்ணைக் கவரும் தேன்சிட்டு
பொட்டு அழகின் தோட்டத்தில்
பறந்து பறந்து சுற்றிவரும்
நெட்டை மரத்தின் பூக்களிலே
நீட்டு அலகால் தேன்குடிக்கும்
வட்ட நிலாபோல் தனித்திருக்கும்
வம்பு செய்ய நினைக்காது
கெட்ட மனத்து அணில் ஒன்று
கண்டு அதனை மிரட்டியது
""கிட்ட வந்தால் கொன்றிடுவேன்''
கோபக் குரலில் விரட்டியது
வெட்டி வீழ்ந்த மரக்கிளைபோல்
வாட்டம் கொண்டது தேன்சிட்டு
பட்டாம் பூச்சி நண்பனிடம்
பயந்த நிலையைத் சொன்னதுவே
""சிட்டே உனது தலைமேலே
சிறிது நேரம் அமர்ந்திடுவேன்
வெட்டும் சொல்லின் அணில்பக்கம்
வீர மாய்ப்போ'' என்றதுவே
ஒட்டி இணைந்த அதன் சிறகில்
ஓங்கித் திகழ்ந்த கண்வட்டம்
கெட்ட அணில்தான் கண்டதுமே
கலங்கி நடுங்கி ஓடியதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.