நூல் புதிது
அருணாவின் பாட்டி சொன்ன பழங்கதைகள்- ஆர்.சி.சம்பத்; பக். 120; ரூ.45; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044-2650 7131.
அருணாவின் பாட்டி சொன்ன பழங்கதைகள்- ஆர்.சி.சம்பத்; பக். 120; ரூ.45; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044-2650 7131.
கிராமங்களில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் 28 கதைகளை எளிய நடையில், படித்து புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
இந்த நூலில் ஒவ்வொரு கதையும் நல்ல உரையாடலில், சகஜமான பேச்சு நடையில் இருக்கிறது. கொழுக்கட்டை, குதிரை முட்டை போன்ற பல கதைகளைப் படிக்கும்போது, சிரித்து சிரித்து வயிறே வலிக்கும் போல் உள்ளது. சிந்திக்கவும் தூண்டுகிறது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வீட்டில் இருக்கும் மூதாட்டி சொல்லும் கதைகள் இப்போது தனிக்குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் கிடைப்பதில்லை. இதுபோன்ற நூல்களைக் குழந்தைகளுக்குப் படிக்கத் தரும்போது, எதிர்காலச் சந்ததியினருக்கும் பாட்டிகளின் முக்கியத்துவத்தை அறிய வைக்க முடியும்.
சதிகார நரியும் அதிகார ஓநாயும்- ஹரணி; பக். 48; ரூ.50; கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், தஞ்சாவூர்; 94423 98953.
பல்கலை. பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற க.அன்பழகன், ஹரணி என்ற புனை பெயரில் பல ஆண்டுகளாக சிறுவர் கதைகளை எழுதி வருகிறார்.
13 கதைகளை எழுதியுள்ள நூலாசிரியர், கடைசியில் அந்தக் கதை உணர்த்தும் நீதியை சில வார்த்தைகளில் சொல்லியிருப்பது சிறுவர்களுக்குப் படிப்பதன் நோக்கத்தை உணர்த்தும்.
"பேசும் செடி' என்ற சிறுகதையில் "யாரையும் ஏமாற்றக் கூடாது', "தாகம் தணிந்த காகம்' என்ற சிறுகதையில் "நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்', "யானையைக் கடித்த பூனை‘ என்ற சிறுகதையில் "அகந்தையின் முடிவு அவமானமே', "பட்டத்தை மறந்த பட்டாம்பூச்சி' எனும் சிறுகதையில் "உழைப்பதைவிட அழகு இல்லை', "அதிகார நாயும் சதிகார ஓநாயும்' என்ற சிறுகதையில் "திருடனின் நீதி திருடனுக்கே பொருந்தும்' என்று ஒவ்வொரு கதைக்கும் நீதி போதனை தொடர்கிறது. மொத்தத்தில், சிறந்ததொரு நூல்.
சிந்தனையைத் தூண்டும் 1000 விடுகதைகள்- முல்லை பி.எல்.முத்தையா; பக். 152; ரூ.100; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 044-2616 3596.
விடுகதைகள், பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவை செவிவழியாகவே சொல்லப்பட்டுவருகின்றன. இதில் விடுகதை என்பதற்கு புதிர், நொடி, பிசி, சொல், அரும்பொருள், உவமேயத்தை உவமானப் பொருளால் குறிப்பிடுவது என்ற விளக்கம் நூலில் காணப்படுகிறது. பொழுதுபோக்கு, நகைச்சுவை, வேடிக்கை, இலக்கியம், கிராமியம்.. என்று பல பிரிவுகளில் விடுகதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த விடுகதைகளுக்கான விடைகள் அதே பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.