நகர்வலம்: வேற்று மொழி இலக்கியங்கள் வேண்டாமா?..................
இளைய தலைமுறையில் அதிகம் பிரபலமாகாத கர்நாடக இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு மாதத்துக்கு ஒருவராக சார்ஸþர் ஃபவுண்டேஷன் அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த மாதம் அப்படி மேடை ஏறியவர் ஆர்.ராகவேந்
இளைய தலைமுறையில் அதிகம் பிரபலமாகாத கர்நாடக இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு மாதத்துக்கு ஒருவராக சார்ஸþர் ஃபவுண்டேஷன் அறிமுகம் செய்து வைக்கிறது.
இந்த மாதம் அப்படி மேடை ஏறியவர் ஆர்.ராகவேந்திரா. முதலில் இந்த இளைஞரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன்.
மிருதங்க வித்துவான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-பத்மா சாண்டில்யன் மகன் இவர். ஐந்து வயதிலிருந்தே இவர்களிடம் இசை கற்றுக் கொள்கிறார். கடந்த மூன்று வருடங்களாக சஞ்சய் சுப்பிரமணியனிடம் பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கெனவே ஆல் இந்தியா யூத் ஃபெஸ்டிவல், கிருஷ்ண கான சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், மும்பை சண்முகானந்த சபா என்று மேடை கச்சேரிகள் செய்திருக்கிறார். மத்திய அரசு ஸ்காலர்ஷிப் பெற்றவர். மியூசிக் கம்போஸிங் செய்வாராம். திறமையான சவுண்ட் என்ஜினீயர். எனவே சர்வதேச வாய்ப்புகள் பெற்று, இந்திய } பிரேஸில் நாட்டுத் திரைப்படம் ஒன்றுக்கும், பரிசுகள் பெற்ற பல டாகுமென்டரிகளுக்கும் பணி புரிந்திருக்கிறார். ஆனாலும்-
இத்தனை ஆரம்ப நிலைப் பாடகருக்கு, சங்கீத கலாநிதி டி.கே. மூர்த்தி மிருதங்கம் வாசித்தார். சக மிருதங்கக் கலைஞர் ராஜாராவ் வந்து கேட்டுக் கொண்டபோது, ""உங்கள் பிள்ளைதானே பாடுகிறான்? வந்து வாசிக்கிறேன். காசே கொடுக்க வேண்டாம்!'' என்றாராம் டி.கே.மூர்த்தி.
வயலின் வாசித்த வி.வி. ரவிகூட திருநெல்வேலியில் வேறு ஒரு கச்சேரிக்கு வாசிக்க வேண்டியவர், மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, ராகவேந்திராவின் கச்சேரிக்கு வாசிக்க வந்ததற்கு ராஜாராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார். ""வயலின்காரர் நினைத்தால் கச்சேரியைக் கெடுக்க முடியாது. ஆனால் மிருதங்கக் கலைஞர் நினைத்தால் கச்சேரியைக் கெடுக்கவும் முடியும். ஓகோ என்று தூக்கவும் முடியும்!'' என்றார். (இதை என்னால் ஏற்க முடியவில்லை. வயலின்காரர் சுமாராக வாசித்து, கச்சேரி விழுந்து போனது இல்லையா என்ன?) மிருதங்க வித்துவான்களே அரை டஜனுக்கு மேல் வந்திருந்தார்கள்.
சரி, பாட்டு எப்படி இருந்தது?
நன்றாகவே இருந்தது. அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்தது. (நன்றாகப் பாடுகிறான் என்று டி.கே.மூர்த்தியும் மேடையிலேயே எழுதாத சான்றிதழ் கொடுத்தார்.)
என்ன பாடினார்? இதோ பட்டியல்:
"விநாயகுனி' என்ற மத்யமாவதி ராக, தியாகராஜர் கீர்த்தனையைக் கேட்டபோதே, குரல் காத்திரமாகவும், பிசிறு இல்லாமலும், இனிமையாகவும் இருக்கிறதே என்று ஒரு டிக் போட்டுக் கொண்டேன். "கடைக்கண் வைத்தென்னை ஆளம்மா' என்ற பேகடா ராகப் பாடலுக்கு முன் செய்த ஆலாபனை கச்சிதமாக இருந்தது. "சேஷாசல நாயகம்' என்ற முத்துசாமி தீட்சிதரின் வராளிராக கீர்த்தனைக்கு ராக ஆலாபனை செய்யாவிட்டாலும், நிரவதிலும், சுவரக் கோவையிலும் ராகவேந்தரா தன் கற்பனை வளத்தைக் காட்ட முடிந்தது. (இன்னொரு டிக் போட்டுக் கொண்டேன்) சியாமா சாஸ்திரிகளின் ஆஹிரி ராகப் பாடல் "மாயம்மா' -ஆழ்ந்து ரசிக்கும்படி இருந்தது. "சக்கனிராஜ மார்க்கமு'வுக்கு முன்னால் கரகரப்ரியா ஆலாபனையில் சில அபூர்வமான பிடிகளைக் கையாண்டார் ராகவேந்திரா. சறுக்கிவிடவில்லை. அப்புறம் வந்தது, தனி.
பாட்டுக்கு வாசித்தபோதே டி.கே.மூர்த்தி மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது என்றாலும், தனி வாசித்தபோது அசத்திவிட்டார் மனிதர். சில கோர்வைகளின் கணக்குகள் கச்சிதமாக அமைந்திருந்தன. சொன்னால் சொன்னபடி கேட்கிற மாணவன் மாதிரி அந்தந்த இடத்தில் போய் உட்கார்ந்தன. வயது எண்பதைத் தாண்டிவிட்டாலும், கவனம் கூர்மையாக இருந்தது! பாடகர் ராகவேந்திரா மீது ரசிகர் கவனம் எவ்வளவு இருந்ததோ, அத்தனையும் டி.கே.மூர்த்தி பக்கமும் இருந்தது என்பது உண்மை.
"யுகமாயினி' சிற்றிலக்கிய இதழ் சித்தனின் காலை நேரக் கூட்டத்துக்குப் போனதில், ஒரு விஷயம் தெரிந்தது. இலக்கியம் பற்றிச் சிந்திப்பவர்கள், விவாதிப்பவர்கள் எல்லாம் படைப்பாளிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தங்கள் கருத்தைச் சொல்லி முன் அறிமுகம் செய்து கொண்டவர்கள் அளித்த தகவல்களில் இருந்து இது புரிந்தது.
""வேற்றுமொழி இலக்கியங்கள் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? எனக்கு என் மொழி போதும். பிற மொழிகளின் படைப்புகளை ஏன் என் மீது திணித்துக் கொள்ள வேண்டும்?'' என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாரதி சொன்னதை நினைவுகூர்ந்து, பிறமொழி இலக்கியங்களின் அவசியம் பற்றி பதில் சொன்னார் இன்னொருவர். கருத்துப் பரிமாறல்களில் காழ்ப்பு உணர்ச்சி தெரியவில்லை என்பதும், எதையும் இயல்பாக எடுத்துக் கூறினார்கள் என்பதும் ஆரோக்கியமான அம்சங்கள். இலக்கியத்தில் அரவானிகள் பற்றி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேச்சு பல தகவல்களைக் கொண்டு வந்தது.