நகர்வலம்: பாரம்பரியம் பாதுகாக்க!
அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள புகழ் பெற்ற மஸôசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் கட்டடக் கலைத் துறையின் பார்வை நம் ஈரோடு மீது விழுந்திருக்கிறது என்று தெரியுமா? வருடத்தில் பாதி நாட்கள் இந்தியா
அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள புகழ் பெற்ற மஸôசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் கட்டடக் கலைத் துறையின் பார்வை நம் ஈரோடு மீது விழுந்திருக்கிறது என்று தெரியுமா?
வருடத்தில் பாதி நாட்கள் இந்தியாவில் தன் ஆர்க்கிடெக்ட் தொழிலைப் பார்த்துக் கொண்டு, மீதி நாட்கள் எம்.ஐ.டி.யில் கட்டடக் கலைத்துறை பேராசிரியராகப் பணி புரிந்து வரும் ராஹுல் மெஹ்ரோத்ராவை, பிரக்ருதி ஃபவுண்டேஷனும் மெட்ராஸ் புக் கிளப்பும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தன.
ராஹுல் மெஹ்ரோத்ராவும் சாரதா த்விவேதியும் இணைந்து எழுதியுள்ள பாம்பே டெக்கோ என்ற நூலை வாசகர்களிடம் அறிமுகம் செய்யவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மியாமி நகரில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களை அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தைப்படுத்தும் வேகத்தைப் பார்க்கும்போது, பம்பாயிலுள்ள எத்தனையோ "ஹெரிடேஜ்' கட்டடங்களை நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கேட்கிறார் ராஹுல். (உலக பாரம்பரிய கலைக் கட்டடங்கள் பட்டியலில், மும்பையின் பல கட்டடங்களும் பழைய சினிமா தியேட்டர்களும் இடம் பெற முயன்று வருகிறார் இவர்.)
பல பாரம்பரிய கலைக் கட்டடங்கள் மழையிலும் வெயிலிலும் நனைந்தும் காய்ந்தும் பாழாகிவிடுகின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும். மரீன் டிரைவ் மற்றும் ஓவல் மைதான் பகுதிகளில் இருக்கும் நியோ கோத்திக் விக்டோரியன் வகை கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை நிறைய இருக்கின்றனவாம்.
ஆனால் அதற்கெல்லாம் நிறைய செலவாகும். அதற்கு நிதி உதவ, ஹெரிடேஜ் டிரஸ்ட் அமைத்து, பணத்தைச் சேமித்து, பெயின்ட் கம்பெனிகளுடன் இணைந்து ஆதார நிதி உருவாக்க வேண்டும். அதிலிருந்து குறைந்த வட்டிக்குப் பணம் கொடுத்து அத்தகைய கட்டடங்களைப் பராமரிக்கப் போகிறார்களாம்.
இவருடன் இணைந்து இப்படிப்பட்ட பாரம்பரிய அழகுக் கலைக் கட்டடங்களைப் பற்றி எழுதி வரும் சாரதா திவிவேதி நூலக அறிவியல் பட்டதாரி பாரிஸ் நகரில் பயிற்சி பெற்றவர். ராஹுல் மெஹ்ரோத்ராவும் சாரதா த்விவேதியும் பம்பாயின் புகழ் மிக்க இடங்களைப் பற்றியும் கட்டடங்களைப் பற்றியும் எழுதிய வரிசையில் நகரின் அடையாளமான விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையமும் உண்டு. பன்-கங்கா என்ற தெப்பக்குளம் போன்ற அமைப்பும் உண்டு. (இங்கே தெப்பக்குளம் நடுவே இசை நிகழ்ச்சிகள் நடக்க, படிக்கட்டுகளில் ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் அமர்ந்து கொண்டிருப்பதை ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.)
1930கள் இப்படிப்பட்ட கலையழகு மிளிரும் கட்டடக் கலை வளர்ந்த காலம் என்கிறார் ராஹுல். இந்தோ- சார்சனிக் வகை, பரோக் வகை என்று இந்தப் பழங்கலைக் கட்டடங்களை வகைப்படுத்துகிறார்கள்.
இவற்றை எல்லாம் பாதுக்காக்கவும் பராமரிக்கவும் உள்ளூர் மக்களின் ஆர்வமும் வேகமும்தான் அவசியம் என்கிறார் ராஹுல். வளர்ந்து வளர்ந்து கைகளுக்கு அடங்காமல் போய்விட்ட நகரங்களில் நம் கவனம் இனி செலுத்தப்பட வேண்டும் என்றுதான் கோவாவின் பஞ்சிம் அரியானாவின் பானிபட், தமிழ்நாட்டின் ஈரோடு போன்ற இடங்களில் கட்டடக்கலை மற்றும் நகர வளர்ச்சி பற்றி அக்கறை செலுத்துவதாக இருக்கிறாராம். அர்ப்-லேப் (அர்பன் லேபரடரியின் சுருக்கம்) இப்போது எம்.ஐ.டி.யில் நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அலசப்படுகிற முதல் நகரம் ஈரோடுதானாம்.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியக் கட்டுமானப் பிரிவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அடுத்த புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம் ராஹுல்.
""ஏன் இப்படி நூல்களாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ""இவற்றை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டாமா?'' என்று பதிலையே ஒரு கேள்வியாக நம் முன் வைக்கிறார்.
மும்பை பற்றி எழுதியவை போதும். கொஞ்சம் சென்னை பற்றியும் எழுதுங்கள். இங்கேயும் பாரம்பரியக் கலையில் தோய்ந்த கட்டடங்கள் இருக்கின்றன! என்கிறார் பத்திரிகையாளர் எஸ். ஆர்.மது.
ராஹுல் மெஹ்ரோத்ரா இதை சீரியஸôக எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
மிருதங்க கலைஞர் சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமனின் மாணவர் ஸ்ரீகிருஷ்ணனின் மிருதங்க அரங்கேற்றத்துக்கு, வாய்ப்பாட்டு குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா. சாஸ்திரி ஹால் நிரம்பி வழிந்தது என்றால் உண்மை அதுதான். அரங்கேற்ற அழைப்பிதழ் பெற்றவர் மட்டுமே வந்திருந்தால் இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. ஆனால் ரசிகர்கள் பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டை ரசிக்க நிறையவே இருக்கிறார்கள். அவரும் அவர்களை ஏமாற்றாமல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிடுவார். கணீரென்ற, போலித்தனமில்லாத குரல். ஒருவிதமான ஜாலவேலைகளும் இல்லாத நிஜமான சங்கீதம். எத்தீரியல் என்பார்களே அப்படி ஓர் இயற்கைத் தன்மை நூறு சதவீதம் அமைந்த பாட்டு. சரி, அரங்கேற்றக் கலைஞர் இளம் ஸ்ரீகிருஷ்ணனின் வாசிப்பு எப்படி? குருவின் மென்மையான வாசிப்பு போல் அன்றி, கொஞ்சம் உரக்கவே இருந்தது. இனி வாசிக்க, வாசிக்க பாதை மாறிவிடுவார் என நம்புவோம்.
பேராசிரியர் சி.வி. சந்திரசேகரின் ஜப்பானிய மாணவி மாக்கி ஃபுக்குடா, அவரிடம் பதினைந்து வருடங்களாக பரதநாட்டியம் கற்று வருகிறார். ஒன்பது வருடங்களுக்கு முன் இளம் வயதிலேயே காலமான நடனக் கலைஞர் ராஜேஷ் நினைவாக, அவர் தகப்பனார் (மிருதங்கம்) அடையார் பாலு நடத்தும் நிகழ்ச்சியில், மாக்கி ஃபுக்குடா நடனம் ஆடப் போகிறார்.
ராஜேஷ் தனஞ்செயன் தம்பதியின் சீடர் என்பதும், அவருடைய துரதிர்ஷ்டவசமான மறைவு பரதநாட்டிய வட்டாரத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது என்பதும் மறக்க முடியாதவை.