கொல்கத்தா கடைகளில் சின்னாளபட்டி சுங்குடி!
சின்னாளபட்டி என்றால் முதலில் எல்லாம் அது கண்டாங்கிச் சேலைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போது சுங்குடி சேலை என்ற சொன்னவுடனே உடனே ஞாபகம் வருவது சின்னாளபட்டிதான். திண்டுக்கல் அருக
சின்னாளபட்டி என்றால் முதலில் எல்லாம் அது கண்டாங்கிச் சேலைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போது சுங்குடி சேலை என்ற சொன்னவுடனே உடனே ஞாபகம் வருவது சின்னாளபட்டிதான்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாள பட்டியில் தயாராகும் சுங்குடி சேலைகள் இப்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. வடமாநிலங்களிலும் சின்னாளபட்டி சுங்குடிக்குத்தான் ஏகப்பட்ட மவுசு.
இத்தனைக்கும் வடமாநிலங்களிலும் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கொல்கத்தா கடைகளில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பது நம் சின்னாள பட்டிச் சேலைகளே. காரணம் ரொம்ப சிம்பிள். இங்கே தயாராகும் சேலைகளின் விலை ரொம்பக் குறைவு. கொல்கத்தா வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி, இரண்டு மடங்கு விலையில் - ஏமாந்தவன் மாட்டினால் அதற்கும் மேலே விலை வைத்து விற் கிறார்கள். அப்புறம் சின்னாளபட்டி சுங்குடிச் சேலைக்கு கிராக்கி ஏன் இருக்காது?
Advertisement
வெளிமாநிலத்தில்தான் விற்பனையாகிறதா? தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லையா? என்று கேட்காதீர்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என்று பல முக்கிய நகரங்களின் கடைகளில் சுங்குடி சேலை என்று கேட்டால் வந்து நம் கைகளில் விழுவது சின்னாளபட்டி சேலைகளே.
அதுமட்டுமா, சேலை கட்டும் பெண்கள் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய உடலைத் தழுவச் செல்கிறது இந்தச் சின்னாளபட்டிச் சுங்குடி சேலைகளின் கரங்கள்.
எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் எல்லா நாடுகளும் தடைவிதிக்கும். ஆனால் சுங்குடி சேலைகளுக்கு எந்த நாடுதான் தடை விதிக்கும்? சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ் தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுங்குடி சேலைகள் செம விற்பனையாகின்றன. அப்படி என்னதான் கவர்ச்சி இந்தச் சுங்குடி சேலையில் என்று தெரிந்து கொள்ள சுங்குடி சேலைகளைத் தயாரிக்கும் சின்னாளபட்டி மணி டெக்ûஸச் சேர்ந்த ஹேமாவை அணுகிக் கேட்டோம்.
""முதலில் எல்லாம் மதுரையில்தான் சுங்குடி சேலைகள் அதிகமாக தயாரிக்கப்பட்டன. இது 50 வருடங்களுக்கு முந்தைய கதை. ஆனால் இன்றைக்கு சின்னாளபட்டிக்குத்தான் முதலிடம். மதுரையில் இப்போது சின்னாளபட்டி சேலை செய்யவும், சாயம் தோய்க்கவும் ஆட்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
சின்னாளபட்டியில் சுங்குடி தயாரானாலும் அதன் ஆரம்ப பிறப்பிடம் திருப்பூர், சோமலூர் போன்ற இடங்கள்தாம். இந்தச் சுங்குடி சேலைகள் பிளைன் பீஸôக எந்த டிசைனும் இல்லாமல் முதலில் அங்குதான் பிறப்பெடுக்கின்றன. அங்கிருந்து சின்னாளபட்டிக்குப் பயணிக்கும் இந்த பிளைன் பீஸ்கள் முதலில் பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். அவற்றைப் ப்ளீச்சிங்கில் ஊற வைத்து வெள்ளைவெளேராக்குவோம். பார்டருக்கு மட்டும் இந்த ப்ளிச்சிங் குளியல் கிடையாது.
அப்புறம் தேவையான டிசைன்களை உருவாக்க பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விரிவாகச் சொன்னால் உங்களுக்குத் தலைசுற்றிவிடும். எனக்கும் தலைசுற்றிவிடும். எனவே அவற்றின் பெயர்களை மட்டும் சொல்கிறேன். பத்திக், வாக்ஸ், பார்டர் பத்திக், ஜிக்ஜாக்...இந்த முறைகளில் புடவையில் டிசைன்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வாக்ஸ் முறை என்பது மெழுகு அச்சுக்கு இன்னொரு பெயர். மெழுகை உருக்கி பிளைன் பீஸில் டிசைன் அமைத்து பின்னர் தேவையான சாயத்தில் தோய்க்க வேண்டும். பிறகு பிளைன் பீஸýக்கு வெந்நீர் குளியல் காட்டினால் மெழுகு டிசைன் கரைந்து அந்த இடத்தில் சாயம் படாமல் இருக்கும். ஏதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இந்த ஒரு நுட்பத்தை உங்களுக்குச் சொன்னேன்.புதிய புதிய டிசைன்களை உருவாக்கிக் காட்டுவோம் என்று சபதம் செய்தாற் போல இங்குள்ள சுமார் 50 சுங்குடி சேலை உற்பத்தியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய டிசைன்களை உருவாக்கித் தள்ளு கிறார்கள்.
சுங்குடி சேலைகள் 5.5, 6.20, 8.25 மீட்டர் என்று பல அளவுகளில் கிடைக்கின்றன. ரொம்பக் குண்டான அம்மணிகளும், ஒல்லிக்குச்சி பெண்களும் கட்டுவதற்கு வசதியாக பல அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. மாற்றி வாங்கிக் கொண்டு போனால் தயாரிப்பாளர்கள் பொறுப்பில்லை. சின்னாளபட்டியில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் செய்யும் வேலை என்ன தெரியுமா? தயாராகும் சுங்குடி சேலைகளுக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ணித் தருவதே. அப்படி யானால் பிற வேலைகளை எல்லாம் செய்ய எவ்வளவு பேர் தேவைப்படுகிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வேலை வாய்ப்புக்கு வேலை வாய்ப்பாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாகவும், பல பெண்கள் கட்டிய பின்பு கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பித் திரும்பி அழகு பார்க்கவும் காரணமாக இருப்பது சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் என்றால் அது மிகையில்லை'' என்றார்.