ரசாயனமில்லாத ரசமான வாழ்க்கை!
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே மத்தளம்பாறையில் மரம், செடி, கொடி, பல்வகை தாவரங்கள் என சோலையாகக் காட்சியளிக்கும் "கல்பவிருட்சம்' என்ற இயற்கை வேளாண்மை மையத்தை நிர்வகித்து வரும் சாதனை இளைஞர் அ.செந்
தி ருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே
மத்தளம்பாறையில் மரம், செடி, கொடி, பல்வகை தாவரங்கள் என சோலையாகக் காட்சியளிக்கும்
"கல்பவிருட்சம்' என்ற இயற்கை வேளாண்மை மையத்தை நிர்வகித்து வரும் சாதனை இளைஞர் அ.செந்தில்குமாரை அச்சோலையின் நடுவே சந்தித்துப் பேசினோம். இனி...
வேளாண்மை தொடர்பாக என்னென்ன பயிற்சி
பெற்றுள்ளீர்கள்?
ரசாயன உரங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் காலம் இன்றைய காலம். அதன் காரணமாக மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை நான் நன்கு உணர்ந்த காரணத்தால் இயற்கை வேளாண்மை குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றேன். குறிப்பாக இந்திய அரசின் வேளாண் அமைச்சகம், புதுதில்லியிலுள்ள விவசாய உணவுக் கழக அமைப்புக்கள் மூலம் இயற்கை வேளாண்மை குறித்து பல்வகை பயிற்சிகளைப் பெற்றேன்.
இயற்கை வேளாண்மை என்பது என்ன?
மண்ணின் தன்மையை இன்றைய ரசாயன உரங்கள் அடியோடு அழித்து வருகின்றன. இதனால் மண்வளம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மண் தனது உயிரை மெல்ல இழந்து வருகிறது. அதனை மாற்றி மண்ணுக்கு உயிர்கொடுத்து, ரசாயன மருந்துக்கு மாற்றாக,இயற்கை வழங்கும் பொருட்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதையே இயற்கை வேளாண்மை என்கிறோம்.
உங்களின் "கல்பவிருட்சம்' என்ற அமைப்பு குறித்து..?
இயற்கையை நேசிப்பவர்களுக்கும், அதனைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் நலனை மேம்படுத்தவும் எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் சாரிட்டபிள் டிரஸ்ட்டாக "கல்பவிருட்சம்' 2005-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்வது, விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய உதவுவது, நில, நீர் வள ஆதாரங்களைப் பெருக்குவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு வருமான வரிவிலக்கும்(80-ஜி) அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அமைப்பின் மூலம் என்னென்ன செய்
கிறீர்கள்?
இயற்கை பண்ணையத்தில் மண் மற்றும் நீர் வளத்தைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும், இடுபொருட்கள் உற்பத்தி செய்தல், பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்தல் மற்றும் உழவர்களுக்குப் பரிமாற்றம் செய்தல், மரக்கன்றுகள், உயிர் உரங்கள், விதைகள் வழங்குதல், சுய உதவிக்குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பண்ணைய இடுபொருட்களை தரச்சான்றளித்து சந்தைப் படுத்துதல், இயற்கை பண்ணைய பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடும் வசதி செய்தல், தொழிற்கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை அமைப்பின் மூலம் செய்து வருகிறோம்.
விவசாயிகளுக்கு நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்களா?
ஆமாம். விவசாயிகள் ஒருமுறை 100 ரூபாய் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக்கி கொண்டால், தொடர்ந்து நடைபெறும் ஆலோசனை மற்றும் பயிற்சிகளில் அவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொள்ளலாம். இதுவரை 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்குக் காலை,மதியம் மற்றும் மாலை நேரத்தில் உணவும் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டு விடும்.
மரக்கன்றுகள், உயிர்உரங்கள், பசுந்தாள் விதைகள் போன்றவற்றை இலவசமாக வழங்குகிறோம். மேலும் மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா வளர்ப்பு, பஞ்சகவ்யா தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, இயற்கை மூலிகை வளர்ப்பு, மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளைக் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறோம்.
வேறு என்ன செய்கிறீர்கள்?
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழக வேளாண்மை பிரிவு மாணவர்களுக்காக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் இயற்கை வேளாண்மை மற்றும் உயிர் உரங்கள் குறித்து உரையாற்றி வருகிறேன். மேலும் இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில் நடைபெறும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களுக்கு, சிறப்பு தொழில்நுட்ப அழைப்பாளராக சென்று விளக்கமளித்து வருகிறேன். விவசாயிகள் இயற்கை வேளாண்மை குறித்து அறிய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (கைபேசி எண்-94424 90038)
பள்ளி மாணவர்களுக்காக ஏதேனும் செய்கிறீர்களா?
ஆமாம். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்கள் கல்பவிருட்சத்துக்கு நேரடியாக வந்து, இங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்துள்ளோம். அவர்களுக்கு மண் புழு உரம் தயாரிப்பது குறித்தும், ரசாயன உரங்களால் ஏற்படும் கேடுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். மேலும் வேளாண்மை கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
விவசாயிகளின் ஆர்வம் எப்படி உள்ளது?
ரசாயன உரங்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை ஒரு புதிராகவே உள்ளது. இயற்கை வேளாண்மை மூலம் சாகுபடி கிடைக்குமா என்ற ஐயமும் அவர்கள் மத்தியில் உள்ளது. இதனால் "கல்பவிருட்சம்' வளாகத்துக்குள்ளேயே வாழை, கத்தரி, தக்காளி, மல்லி,வெங்காயம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்களை இயற்கை வேளாண்மை முறையில் வளர்த்து வருகிறேன். இதனை நேரில் காணும் விவசாயிகள் தற்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர்.