முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகர்வலம்: "பூச்சி' சீனிவாசய்யங்கார் முதல் "கல்கத்தா' சீனிவாசய்யங்கார் வரை!

கர்நாடக இசைக் கலைஞர்கள் பலவிதம். ஒருவர் தன் சாமர்த்தியத்தை எல்லாம் காட்டி அசத்திவிட வேண்டும் என்று பாடுவார். இன்னொருவர், "நாம் பாடுகிறதை வழக்கம்போல் பாடுவோம், ரசிகர்கள் எதை வேண்டுமோ அதை ரசித்து விட்டு

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:12 PM
பகிர்:

ர்நாடக இசைக் கலைஞர்கள் பலவிதம். ஒருவர் தன் சாமர்த்தியத்தை எல்லாம் காட்டி அசத்திவிட வேண்டும் என்று பாடுவார். இன்னொருவர், "நாம் பாடுகிறதை வழக்கம்போல் பாடுவோம், ரசிகர்கள் எதை வேண்டுமோ அதை ரசித்து விட்டுப் போகட்டும்' என்று பாடுவார். வேறொருவர், ரசிகர்களை உயரே தூக்கிவிட வேண்டுமென்று நமக்கென்ன தலையெழுத்து என்கிற மாதிரி, "உங்களுக்கெல்லாம் இவ்வளவு போதும்' என்று தானே முடிவு செய்து பாடுவார்.

இன்னொரு ரகம், "அரைத்த மாவையே அரைக்கிற' ரகம். இந்தச் சூழ்நிலையில், சில மூத்த இசைக் கலைஞர்கள், புதிது புதிதாகச் உருப்படிகளைத் தேடிப் பிடித்துப் பாடி, இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் "இவரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்?' என்ற தேடலோடு வருபவர்களுக்கு விருந்தே படைப்பார்கள்.

அப்படிப்பட்ட மூத்த இசைக் கலைஞர்களில் சுகுணா வரதாச்சாரி ஒருவர். நாத இன்பம் சார்பில் அவர் வழங்கிய இசை நிகழ்ச்சி, அப்படித்தான் அமைந்திருந்தது.

ராமநாதபுரம் "பூச்சி' சீனிவாசய்யங்காரின் "நெர நம்மிதி' என்ற கானடா ராக வர்ணத்தில் தொடங்கி, "மறையொலி சூழ் வில்லிப்புத்தூர்' என்ற நீலாம்பரி ராக, கல்கத்தா சீனிவாசய்யங்கார் பாடல் வரை, துளிகூடத் தொய்வில்லாமல் பாடினார். (பக்க வாத்தியமாக இரண்டு இளம் சிங்கங்கள்: வயலின் ஆர்.கே. ஸ்ரீராம்குமார்; மிருதங்கத்துக்கு அருண் பிரகாஷ்.)

"நாடாடின மாட' என்ற தியாகராஜரின் ஜனரஞ்சனி ராக கீர்த்தனை. அடுத்து சாரங்கா ராகத்தில் முத்துசாமி தீட்சிதரின் "வரதராஜம் உபாஸ்மகே.' தொடர்ந்து,அடானா ராகத்தில் அமைந்த "எந்து தாசு கொனேவு' என்ற  மைசூர் சதாசிவ ராவ் சாகித்யம். அடுத்து வந்த சங்கராபரண பாடல் "பிரகதாம்பா' என்ற சமஸ்கிருத கிருதி, அந்த ராகத்தை அப்படியே பிழிந்து தந்தது. தீட்சிதரின் முத்திரை இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது "இது பொன்னையா பிள்ளை இயற்றியது' என்றார் பாடகி.

(இப்படி அல்லவா பழைய பொக்கிஷத்திலிருந்து தேடி எடுத்து வந்து புதிதாகப் படைக்க வேண்டும்!) சுவாதித் திருநாளின் புஷ்பலதிகா ராகப் பாடல் "பாவயே கோப பாலம்'கூட அதிகம் கேட்காததுதான். அடுத்து சாவேரி ராக ஆலாபனை. சாவேரி வந்தால் கூடவே காவேரிக் கரைக்காரர்தானே வருவார்! தியாகராஜரின் "ராம பாண' அதன் மிதமான நடையில் தென்றலாக இருந்தது. அதையடுத்து, "நினைந்தோடி வந்தேன்' என்று தொடங்கும் "சப்த ராக - சப்த தாள மாலிகை' (ஏழு ராகங்களில் - ஏழு தாளங்களில்)யில் தோடி, பூர்வி கல்யாணி, பைரவி, கல்யாணி, காம்போதி, முகாரி, வராளி என்று ராகங்களின் பெயர்களே பாடல் வரிகளில் வருகிற கீர்த்தனை, இதுவரை கேட்காதது.

ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்தில் நுழையும்போது ஏற்படும் மெல்லிய சலனம் அற்புதமாக இருந்தது. நிறைவாக, "மறையொலி சூழ் வில்லிப்புத்தூர்' என்ற நீலாம்பரி ராகப் பாடல் ஆண்டாளைக் குறித்து, கல்கத்தா சீனிவாசய்யங்கார் இயற்றியது. இதுவும் புத்தம் புதிது! இவர் ஆண்டாள் சரிதத்தை முழு நடன - நாடகமாகக் கவிதை வடிவில் எழுதியிருக்கிறாராம். (எந்த நடனக் கலைஞராவது தேடிக் கண்டுபிடித்திருக்கிறாரா?)

பாலசுரசுவதியின் நடனத்தை ரசித்து மகிழ்ந்தவர் அமரர் பேராசிரியர் வே.ராகவன். அவருடைய 102 ஆவது பிறந்த நாள் விழா, ஞாயிறு மாலை, "தத்வலோகா' மண்டபத்தில் நடைபெறுகிறது. அவர் பாலாவின் நடனம் பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் தவிர, பாலசரஸ்வதியின் குரு கந்தப்பா பிள்ளை பற்றியும் ராகவன் எழுதிய கட்டுரைகள் "பரதநாட்டியம்' என்ற தலைப்பில் ஒன்றாகத் திரட்டி ஒரு நூலாகப் பல வருடங்கள் முன்பு வெளியாயிற்று.

வே.ராகவனின் குமாரர் காளிதாஸ் எடுத்த புகைப்படங்களும், இன்னொரு குமாரர் சாருதத்தன் வரைந்த சித்திரங்களும் அதில் இருக்கின்றன. அந்த நூலை டாக்டர் ராகவனின் மகள் நந்தனி ரமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் - "ஜர்னி த்ரூ எ ட்ரெடிஷன்' என்ற தலைப்பில். இந்த நூலை மூத்த நடனக் கலைஞர் ஒருவர் வெளியிட "சுருதி மாத இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.ஜானகி பெற்றுக்கொள்கிறார். பகவத் கீதை குறித்து டாக்டர் ராகவன் எழுதிய ஒரு நூலும் அன்று வெளியிடப்படுகிறது.

இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறை பரதநாட்டியக் கலைஞர்கள் தமிழைவிட ஆங்கிலத்தில் படிப்பதையே விரும்புகிற நிலையில், ஒரு மகத்தான குருவைப் பற்றியும், காலத்தை வென்ற கலைஞர் ஒருவரைப் பற்றியும் வெளியாகிற இந்த நூல், நடனக் கலைத்துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பாக இருக்கக்கூடும்.

டாக்குமென்டரி படங்கள் சில, திரைப்படங்களைவிட சுவாரசியமாக அமையும். சோவியத் கலாசார மையத்தில் "ஜெஹாஜி மியூசிக்' என்ற குறும்படம், மேற்கிந்தியத் தீவு ட்ரினிடாடில் நூற்றாண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்து சென்ற இந்தியர்கள் அங்கே வாழ்வதைக் காட்டுவதோடு அவர்கள் இசையும் அத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. பல இந்திப் பாடல்களை, ஆங்கில மொழிபெயர்ப்புடன் கேட்க முடிந்தது!

தயாரிப்பாளர் சுரபி ஷர்மாவுடன் காமிரா நிபுணர் ஆர்.வி.ரமணியும், கோவா இசைக் கலைஞர் ரெமோ ஃபெர்னான்டஸýம் போய், அந்த நாட்டு மக்களின் இசையுணர்வை அப்படியே படம் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். மழையும், கருமேகமும், நடனமும், இசையும் குறும்படத்தை ரசிக்க வைக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →